நகைச்சுவையினூடே பகுத்தறிவை விதைத்த விவேக்!

தமிழ் சினிமாவின் சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என நடிகர் விவேக் அழைக்கப்பட்டதற்கு சினிமாவில் அவர் பேசிய முற்போக்கு வசனங்களே காரணம்.

“இன்னைக்குச் செத்தா நாளைக்கு பால்” என்ற வசனம் தான் விவேக்கின் ஆரம்ப கால வசனங்களில் பிரபலமான ஒன்று.

முதலில் கதைக்குத் தேவையான காமெடிகளை வழங்கிக் கொண்டிருந்த விவேக், போகப் போக நகைச்சுவையினூடாகச் சமூகத்துக்குத் தேவையான முற்போக்குக் கருத்துக்களையும் பேசத் தொடங்கினார்.

காரில் எலுமிச்சம் பழம் கட்டுவது, தீண்டாமைக் கொடுமை, மண் சோறு சாப்பிடுவது என அனைத்து மூட நம்பிக்கைகளையும் போகிறபோக்கில் நகைச்சுவையோடு கலாய்த்து வெளிப்படுத்தினார்.

இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூடநம்பிக்கைப் போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு பயணிக்கத் தொடங்கியது.

நகைச்சுவை மூலம் முற்போக்குக் கருத்துக்களை அவர் வெளியிடக் காரணம், ரசிகர்கள் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான்.

அவர் நினைத்தது போலவே, அவரின் காமெடிகள் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அவரின் முற்போக்கு வசனங்களுக்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.

திருநெல்வேலி படத்தில் விவேக், ஒரு காட்சியில், “அடேய் அற்ப பதர்களா… உங்களை எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா…” என்கிற வசனம் வரும்.

மக்களிடையே ஊடுருவியிருக்கும் மூடநம்பிக்கைகள் குறித்து இந்த வசனங்களை வைத்திருப்பார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தில் விவேக்கின் கேரக்டர் மேல்தட்டு மக்களைக் கொஞ்சம் அசைத்து பார்த்தது எனலாம்.

டேய் டேய் அவா வேற வர்ணம் டா.

அவாளும் வரணும்ங்கிறது தான் என் பிரியம். வர்ணம்ங்கிறது கொடில தாண்டா இருக்கணும். மக்கள் மனசுல இருக்கப் படாதுடா.

அவா வேற ஜாதிடா!

டேய்.. அவா அவாங்கிறியே.. அவா யாருடா? இந்த ரோட்ட போட்டது அவா!

உங்க வீட்டை கட்டுனது அவா! ஏன் ஓட்டுப்போடுறது அவா!

உங்க டிரைஸ்சை துவச்சி கொடுக்குறது அவா!

தம் கட்டி Drainage குள்ள போய் அதை சுத்தம் பண்றது அவா!

அரிசி, கோதும, ரவா – இதையெல்லாம் விளைய வைக்கிறது அவா!

மொத்தத்துல அவா இல்லாட்டி நமக்கெல்லாம் ஏதுங்க பூவா!!

அந்தப் படத்தின் பிரபலமான வசனங்களில் ஒன்று தான் இது. ஆம், அந்தப் படத்தில் கிடைக்கிற கேப்பில் எல்லாம் சாதியைப் பற்றி, தமிழ்ச் சமூகம் செல்கின்ற பாதையைப் பற்றி நகைச்சுவை மூலம் சாடியிருப்பார் விவேக்.

இதேபோல், மற்றொரு திரைப்படத்தில், ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்று சொல்லும் அந்தப் பள்ளியில் தமிழின் பெருமையை சொல்வார் விவேக்.

ஆங்கில வழி என்பது கல்விதானே தவிர அது ஒரு அடையாளம் அல்ல. ஆங்கிலம் என்பது வெறும் மொழிதான். தமிழ்தான் நம்முடைய அடையாளம் என்று சொல்லி விவரிப்பார்.

இப்படி எண்ணற்ற படங்களில் நிறைய வசனங்கள் பேசியிருப்பார்.

இயக்குநர் பாலா உடன் நடித்த ஒரு படத்தில் “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்று வசனம் பேசிவிட்டு அவர் காட்டும் உடல் மொழி வேற லெவல் ஹிட்.

மின்னலே படத்தில் லாரிக்கு அடியில் பைக்கில் அடிப்பட்டு விழும் விவேக், லாரியின் முன் கட்டப்பட்டிருக்கும் எலுமிச்சைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு லாரி டிரைவரிடம், ‘இத ஏண்டா இங்க தொங்க விட்டிருக்கீங்க…’ என கேட்பார்.

அதற்கு அவர், ‘லாரி நல்லா ஓட…’ என்று பதிலளிக்க, ‘ஏண்டா லாரிக்குள்ள 750 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு. அதுல ஓடாத லாரி, இந்த எலுமச்சம் பழத்திலயா ஓடும்… உங்களை எல்லாம் திருத்தவே முடியாது…’ என்பார்.

விஜய் உடன் ’திருமலை’ படத்தில், அரசின் அவலங்களை காட்டும் வகையில் ஒரு சீன் வரும்.

அதில், விஜய் உடன் பைக்கில் செல்லும் விவேக் தெரு தெருவாக ‘டேக் டைவர்சன், டேக் டைவர்சன்…’ பலகைகளைப் பார்த்து டயலாக் அடித்திருப்பார்.

ஒரே சமயத்தில் ஆங்காங்கே, சாலைகளில் தடுப்புப் போடப்பட்டிருப்பதை கிண்டல் அடித்திருக்கும் டயலாக்குகள் எதார்த்தத்தை வெளிப்படுத்தியிருக்கும்.

பார்த்திபன், ரம்பா உடன் ஒரு படத்தில் நடித்த விவேக், இயக்குநராக நடித்திருப்பார்.

அதில், பார்த்திபன் பேசும் வசனங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கா… பின்றான்பா’ என்று பாராட்டும் வசனங்கள் இன்றளவும் பலராலும் பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதேபோல், மக்கள் போலிச் சாமியாரை நம்பி ஏமாறுவதை தொடர்ந்து தனது படங்களில் விமர்சிக்கும் விவேக், ’பாளையத்து அம்மன்’ திரைப்படத்தில் இரு போலி சாமியார்கள் பேசிக்கொள்ளும் காட்சியையும், அவர்களின் உண்மையான முகத்திரையை கிழிக்கும் விதத்தில் காட்சி அமைத்திருப்பார்.

”நீங்க பட்டைய போடுவீங்களோ? நாமத்தை போடுவீங்களோ யானை இப்போ விட்டையை போடப்போறது அதை யார் அள்ளறதுன்னு பாருங்கோ” என்ற வசனம் மதத்திற்குள்ளே இருக்கிற பாகுபாட்டைப் பற்றி யோசிக்க வைத்தது.

‘மீசையை முறுக்கு’ படத்தில் பேசியிருக்கும், ‘தோத்தா ஜெயிக்கணும்னு மட்டும்தான் தோணும். ஆனா அவமானப்பட்டா சாதிக்கணுங்கிற வெறியே வரும்டா’ போன்ற வசனங்களால் தன்னம்பிக்கையை விதைத்திருப்பார் விவேக். 

–  நன்றி: ஒய்.எஸ் தமிழ் 

Comments (0)
Add Comment