‘நிழல்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்… என்று வலம் வரும் ‘நிழல்கள் ரவி’ எனும் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்கி வருகிறார்.
கேஜிஎப் படம் போல படத்தின் கதை சொல்லும் கதாப்பாத்திரமாக காட்டிவிட்டு, அவரை மனநிலை சரியில்லாதவர் போல காமெடியாக சித்தரித்து இருப்பார் இயக்குநர்.
படத்தில் சிறிய ரோல் என்றாலும் அவரது நடிப்புக்கும் குரலுக்கும் பாராட்டு கிடைத்து வருகிறது.
தன் குரலாலும் நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த நிழல்கள் ரவி விகடன் இதழிற்கு அளித்த பேட்டி.
“நான் நினைச்சிருந்தா என் அப்பாவின் பேச்சைக்கேட்டு கவர்மெண்ட் வேலையிலேயே செட்டிலாகியிருக்கலாம். ஆனால், சினிமா மேல இருந்த ஆர்வம்தான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கு…” என்று உற்சாகத்துடன் பேசத் துவங்கிய அவர் தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
“எங்க குடும்பம் மிகப்பெரியது. எங்க அப்பா-அம்மாவுக்கு மொத்தம் பத்து பிள்ளைகள். அதில் நான் கடைக்குட்டி. வீட்ல எல்லாருமே நல்லா படிப்பாங்க. நானும்கூட நல்ல ஸ்டூடன்ட்தான்.
எட்டாவது படிக்கும்போது ஸ்கூல்ல நடந்த டிராமாவில் ‘கமலா’னு பெண் வேஷம் போட்டு நடிச்சேன். ‘டேய் நல்லா நடிக்கிறடா’னு பலரும் பாராட்டினாங்க.
அந்தப் பாராட்டுதான் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்குனு நினைக்கிறேன்.
அதுதான் என் சினிமா ஆர்வத்துக்கு ஆரம்பப் புள்ளி. அப்ப கோயம்புத்தூரில் ஒரு ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூல் டிராமா, சினிமா பார்க்குறதுனுதான் இருப்பேன்.
‘தேசிய ஒருமைப்பாடு’ என்கிற கல்சுரல் புரோகிராமில் கலந்துக்கிட்டேன்.
அப்பவே எங்களுக்கு மற்ற மொழிக் கலாசாரங்களை எப்படிக் கத்துக்கிறதுன்னு பஞ்சாப்பில் ஒரு மாசம் பயிற்சி கொடுத்தாங்க.
கவனம் திசை திரும்பினதால எஸ்.எஸ்.எல்.சி-யில் மார்க் குறைஞ்சிடுச்சு.
என் அப்பாவுக்கு என்னைப் பற்றிய கவலை அதிகமாகிடுச்சு. ஏன்னா, என்கூடப் பிறந்த அண்ணன், அக்கா எல்லாரும் இன்ஜினீயரிங், ஆடிட்டர்னு பெரிய படிப்பு படிக்கும்போது கடைசி பையன் இப்படி சினிமா பைத்தியமா அலையறானேனு அவருக்குக் கவலை.
மார்க் குறைஞ்சதனால பி.யூ.சி படிக்க கோயம்புத்தூரில் எந்த காலேஜிலும் சீட் கிடைக்கலை. கடைசியா உடுமலைப்பேட்டையில் சீட் கிடைச்சது.
வீட்டில் இருக்கும்போதே சரியா படிக்க மாட்டேன். உடுமலைப்பேட்டையில் வெளியில் ரூம் எடுத்து தங்கி இருந்தேன், கேட்கவா வேணும்.
அந்த ஊர்ல இருந்த நாலு தியேட்டர்களையும் விடலை. மேட்னி ஷோ, நைட் ஷோனு எல்லா மொழிப் படங்களையும் பார்த்துடுவேன். இதன் பலனா, பி.யூ.சி-யில் ஃபெயில் ஆனேன். மார்ச், செப்டம்பர்னு அடுத்தடுத்த அட்டெம்ப்ட்ல திரும்பவும் எழுதி பி.யூ.சி பாஸ் பண்ணினேன்.
எல்.ஐ.சி-யில் வேலை பார்த்துட்டு இருந்த அப்பா அப்பதான் ரிடயர்ட் ஆனார். அந்தச் சமயத்தில் அவரை அவங்க ஆபீஸ்ல இருந்தவங்க சிவாஜி சார் நடிச்ச ‘வியட்நாம் வீடு’ படத்துக்கு அழைச்சிட்டுப் போய் காட்டியிருக்காங்க. அதில் சிவாஜி சாரை அவரோட மகன்கள் மதிக்க மாட்டாங்க.
சுருக்கமா சொன்னா, அதில் வர்ற ஸ்ரீகாந்த், நாகேஷ் கேரக்டர்கள் மாதிரி அவர் என்னை நினைச்சிருப்பார்னு நினைக்கிறேன்.
என் மேல் அப்பாவுக்கு ரொம்ப டவுட் வர ஆரம்பிச்சிடுச்சு. ஏற்கெனவே சினிமான்னாலே அவருக்குப் பிடிக்காது. இதில் இந்த டவுட் வேற சேர்ந்துடுச்சு.
அட்டெம்ப்ட் அடிச்சாலும் பி.யூ.சி-யில் நல்ல மார்க் எடுத்ததால கோயம்புத்தூர் காலேஜில் சீட் கிடைச்சது.
’உங்க பையன் மேக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எடுத்தா நல்லாயிருக்கும். குறிப்பா மேக்ஸ் எடுத்தால் பேங்க்ல வேலை வாங்கிடலாம்’னு காலேஜ் பிரின்ஸ்பால் சொன்னார்.
”இல்லை சார், எனக்கு எகனாமிக்ஸ் கொடுக்கங்க”னு சொன்னேன். ‘எகனாமிக்ஸில் லைஃபே கிடையாது’னு சொன்னவர், சும்மா இல்லாம, ‘ஏன் சார் உங்கள் பையன் இப்படி இருக்கான்”னு அப்பாவையும் ஏத்திவிட்டார்.
நாம எப்படியும் நடிகனாகப்போறோம். நமக்கெதுக்கு கெமிஸ்ட்ரி. எகனாமிக்ஸே போதும்னு நினைச்சேன். அப்பா எவ்வளவோ சொல்லியும் எகனாமிக்ஸ்தான் எடுத்தேன்.
ஆனால், எகனாமிக்ஸ் பாஸ் பண்றதுக்குள்ள நான்பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.
ஏற்கெனவே டிகிரி வாங்கலைனா சினிமா வேலைக்கு அனுப்ப மாட்டேன்னு அப்பா சொல்லியிருந்தார். அதனால எப்படியோ ஒருவழியா டிகிரியை முடிச்சேன்.
என்னை ஒரு அரசாங்க ஊழியரா ஆக்கணும்னு என் அப்பா கடைசிவரை போராடினார்.
“எல்.ஐ.சி-யில் வேலை வாங்கித்தர்றேன். 650 ரூபாய் சம்பளம்; ப்ளஸ் ஸ்கூட்டரும் தருவாங்க”னு கொக்கி போட்டார். என் பெரிய அண்ணன், “என் கம்பெனியில் வேலை தருகிறேன். மாசம் 450 ரூபாய் சம்பளம். கூடவே ஸ்கூட்டரும் உண்டு”ன்னார்.
‘எனக்கு சினிமா போதும்’னு சொன்னேன். வீட்ல ஆரம்பமாச்சு அதகளம். அப்பா ஒரு கண்டிஷன் போட்டார். ’உனக்கு இரண்டு வருஷம் டைம் தரேன். அதுக்குள்ள சினிமாவில் வாய்ப்பு தேடி நீ நடிகனாயிருக்கணும்.
இல்லைன்னா, நான் சொல்றதைக் கேட்கணும்’னு சொல்லி சென்னைக்கு அனுப்பிவச்சார். மாசா மாசம் கை செலவுக்கு 500 ரூபாய் பணமும் அனுப்பறதா சொன்னார்.
சென்னை வந்ததும் என் அக்கா வீட்டுக்குப் போனேன். அங்க என் அக்காவோட மாமனார் சும்மா இருக்காம எனக்காக ஏர் இந்தியாவில் வேலைக்கு ஃபார்ம் ஃபில்லப் பண்ணி அனுப்பிட்டார்.
நான் எக்ஸாம் எழுதி, பாஸ் வேற பண்ணிட்டேன். பிறகு அங்க இருந்தா அந்த வேலையில தள்ளிடுவாங்கனு நினைச்சு அங்க இருந்து கிளம்பிட்டேன். பிறகு என்னை சென்னையில இருந்த தன் பிரதர் வீட்ல அப்பா தங்க வெச்சார்.
அது சின்ன வீடு. ஏற்கெனவே பத்துப் பேர் இருந்தாங்க. பதினோறாவது ஆளா அந்த வீட்ல நுழைஞ்சேன். அங்க இருந்துதான் அண்ணாநகர் பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடித்து இயக்குநர் பாலசந்தர் சாரை பார்க்கப்போவேன்; வருவேன். ஆனால், பார்க்க முடியாது.
பிறகு மயிலாப்பூரில் இருந்து அப்படியே நடந்து மவுண்ட் ரோடு போய் தேவி தியேட்டர்ல இருக்கிற தேவி கலா, பாராடைஸ்னு எல்லா தியேட்டர்கள்ல ஓடுற எல்லாப் படங்களையும் பார்ப்பேன். இப்படியே ஆறு மாசத்தை ஓட்டினேன்.
டைரக்டர் பீம்சிங்கை பார்ப்போம்னு ஆழ்வார்பேட்டையில உள்ள அவரோட வீட்டுக்குப் போவேன். வீட்டு கேட்டுக்கும், வாசலுக்கும் இடையில் பெரிய தூரம். நடந்து உள்ளே போனால் ஃபியட் கார் நிற்கிறது.
வாசலில் வட இந்தியர் மாதிரி ஒருத்தர் உட்கார்ந்து இருந்தார். அவர்தான் பீம்சிங்னு நினைச்சு போனேன்.
”ஐ எம் நாட் பீம்சிங், ஹி இஸ் இன் சைட். யூகோ அண்ட் மீட்”னு சொன்னார். உள்ளே போனால், பீம்சிங் உடல்நிலை சரியில்லாமல் படுத்து இருந்தார். அவர்கிட்ட போய் விஷயத்தைச் சொன்னேன்.
‘எனக்கு உடல்நிலை சரியில்லை. இப்ப படம் எடுக்குறதில்லை. உன் போன் நம்பர், அட்ரஸ் எழுதிவிட்டுப் போ’னு சொன்னார்.
பிறகு எனக்கொரு விசிட்டிங் கார்டைக் கொடுத்து, ‘கோ அண்ட் சீ ஹிம்”னு சொன்னார். கார்டில் பார்த்தால், ஃபைனாசிரியர்னு போட்டு இருந்துச்சு. அந்த ஃபைனான்ஷியர் ஆபிஸ் தேவி தியேட்டர் இரண்டாவது மாடியில் இருந்தது. அன்னைக்கு சாயங்காலமே போயிட்டேன்.
டைரக்டர் டி.என்.பாலு, ஶ்ரீதர், கோபாலகிருஷ்ணன்னு பலருக்கும் சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். அதை எடுத்துட்டு போய் பார்த்தேன். ஶ்ரீதரும், கோபாலகிருஷ்ணனும் படம் பண்ணலைனு சொன்னாங்க. அப்ப டி.என்.பாலு படம் பண்ணிட்டு இருந்தார்.
தன் படத்தில் படாபட் ஜெயலட்சுமியின் பிரதர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்; நெகட்டிவ் ரோல். படத்தின் பெயர் ‘மேற்கே உதிக்கும் சூரியன்’.
அப்ப என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ராம் அரங்கன்னு பெரிய புரொடியூசர் வீட்டில் இன்ட்டீரியர் வேலைக்குப் போயிருந்தான். நானும் கூட போயிருந்தேன்.
அவர் ஒரு லெட்டர் கொடுத்து ‘ஏ.சி.எஸ் ஆபிஸில் அனந்துவைப் பாருங்க’னு சொன்னார். அவரைப் போய் பார்த்தேன் அனந்தும் ஒரு லெட்டர் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ஈவினிங் பாலசந்தர் சாரை சந்திச்சேன்.
அனந்து கொடுத்த லெட்டரை பாலச்சந்தர் சாரிடம் கொடுத்தேன்.
மேலே, கீழே என்னைப் பார்த்தார். ‘நீங்கள் டான்ஸ் ஆடுவீங்களா’னு கேட்டார்.
”எஸ் சார்” னு சொன்னேன்.
“ஆடுவீங்களா… எப்படிக் கத்துக்கிட்டீங்க”னு கேட்டார்.
”அப்படியே கத்துக்கிட்டேன் சார்”னு சொன்னேன்.
’வேற என்ன செய்து இருக்கீங்க’ன்னார். “’மேற்கே உதிக்கும் சூரியன்’னு படம் பண்ணிட்டு இருக்கேன்”ன்னேன். ’கிரேட். அதுல இருந்து இரண்டு மூணு எடிட்டிங் ரஷ் கிடைக்குமா… அதை எடுத்துட்டு இந்த வாரத்தில் வாங்க’ன்னார்.
கமல்ஹாசனும், சரிதாவும் தெலுங்கில் பண்ணிய ‘மரோசரித்ரா’வை தமிழில் ரீமேக் செய்யப் போறாங்கனு அப்பதான் தெரிஞ்சுது; ‘அலைகள் எழுதிய கவிதைகள்’ இதுதான் அந்தப் படப் பெயர்.
கமல் கேரக்டருக்காகத்தான் என்னை கமிட் செஞ்சார். இந்த வாய்ப்பை விடக் கூடாதுனு நினைச்சு, டைரக்டர் டி.என்.பாலுவைப் பார்க்கப் போனேன். அவர் ஊட்டிக்குப் போயிட்டார்னு சொன்னாங்க. நானும் உடனே ஊட்டிக்குக் கிளம்பிப் போயிட்டேன். விஷயத்தை சொன்னேன்.
‘உடனே கேட்டு அதோட ரஷ் வாங்கிக்க’னு சொன்னார். சென்னை வந்து எடிட்டிங்கில் என் க்ளோஸ் அப் சீன்ஸை கட் பண்ணி எடுத்துகிட்டு நேரா பாலசந்தர் சார் ஆபீஸூக்குப் போனேன்; யாருமில்லை. பத்து நாள் தொடர்ந்து அலைந்தேன். யாரையும் பார்க்க முடியலை.
சில நாள் கழிச்சு, ‘டைரக்டர் டி.என். பாலு மரணம்’னு செய்தி வருது. எனக்கு செம ஷாக். நான் நடித்து அவர் எடுத்துட்டு இருந்த ‘மேற்கே உதிக்கும் சூரியன்’ படமும் அப்படியே நின்னு போச்சு. பாலசந்தர் சார் எடுக்கிறார்னு சொன்ன படத்தையும் பாதியிலேயே டிராப் பண்ணிட்டாங்க.
இதுலயே ஒரு வருஷம் ஓடிடுச்சு. எங்க அப்பா கொடுத்த டைமில் இன்னும் ஒரு வருஷம்தான் மீதி இருக்கு.
அப்பதான், பாரதிராஜா சாரைப் போய் பார்க்கலாம் என ஞாபகம் வந்துச்சு. ஏற்கெனவே என் காலேஜ் நாள்களில் ஒரு முறை பாரதிராஜா சாரைப் பார்த்திருக்கிறேன்.
எல்லையம்மன் காலனியில் ஒரு மாடியில் அவருடைய ஆபீஸ் இருந்தது. அந்த மாடியின் படிக்கட்டை பார்த்தால் ஸ்டெப்ஸே நமக்குத் தெரியாது.
வெறும் மனிதர்கள் செருப்புகள் மட்டும்தான் படிக்கட்டு முழுக்க இருக்கும். செருப்பு மேல் கால் வைத்துதான் மாடிக்குப் போகணும்.
அதுவும் ஒருவர் படி ஏறினால், இன்னொருவர் இறங்க முடியாது. ஒவ்வொருத்தவங்களாக அவர் பார்ப்பார். நானும் கூட்டத்தில் ஒருத்தனாய் நின்று வணக்கம் சொல்லிட்டே இருந்து என் முகத்தை அவர் முன்னால் பதிய வைத்துவிட்டேன்.
ஒரு நாள் ரெட் ரோஸில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ ஷூட் போயிட்டு இருந்தது. ‘நினைவோ ஒரு பறவை’ பாட்டு ஷூட். பாரதிராஜா அப்போது வெளியே வந்தார். தன் உதவி இயக்குநரிடம், ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தின் ஹீரோ விஜயனுக்கு டப்பிங் கொடுக்க புது வாய்ஸ் வேணும்யா’னு சொல்றார்.
இந்த சான்ஸை எப்படியாவது பயன்படுத்தணும்னு நினைச்சேன். ”சார், நான் முயற்சி பண்ணட்டுமா’னு கேட்டேன்.
பாரதிராஜா, ‘நீங்க டப்பிங் பேசுவீங்களா’னு கேட்டார். ’பேசுவேன் சார்’’னு சொன்னேன். ‘காலையில் பிரசாத் ஸ்டூடியோ வந்துருங்க’னு சொல்லிட்டார்.
”காலையிலே போயிட்டேன். அங்கே பாரதிராஜா, சவுண்ட் இன்ஜினீயர் லோகநாதன், உதவி இயக்குநர் மனோபாலா, மணிவண்ணன் எல்லோரும் இருந்தாங்க. டயலாக் ஷீட் கொடுத்துப் பேசுங்கனு சொன்னார்.
அப்போது எல்லாம் டப்பிங் லுப் சிஸ்டம். டயலாக்ஸ் பேசினேன். உள்ளே நான் இருக்கேன்.
வெளியே பாரதிராஜா சார், சவுண்ட் இன்ஜினீயரிடம், ‘யார் சார் வாய்ஸ். மெட்டாலிக் வாய்ஸ்’னு சொல்றார், எனக்கு இது எல்லாம் கேட்கும்போது மனசுகுள்ளே பட்டாம்பூச்சி பறக்குது.
அப்புறம் இரண்டு, மூணு சீனுக்கு டப்பிங் பேசினேன். அடுத்த நாள் காலையில் டப்பிங் ஸ்டூடியோ போனால் நான் பேசின சீனுக்கு பாரதிராஜா சார் டப்பிங் பேசிட்டு இருக்கார். எனக்கு ஒண்ணும் புரியலை.
‘நேத்துதான் மெட்டாலிக் வாய்ஸ்னு சொன்னாங்க. இன்னைக்கு சீனே வேற மாதிரி இருக்கே’னு எனக்கு ஒண்ணும் புரியலை. 11.30 க்கு டீ டைம்; ஸ்டுடியோ லைட் போட்டாங்க. பாரதிராஜா சார் முன்னாடி போய் நின்னேன்.
”வாங்க, வாங்க. தப்பா எடுத்துக்கிறாதீங்க. விஜயன் வாய்ஸ் கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் பேசியிருக்கார். அதை சிங் பண்ணிப் பேசணும். அதனால் நானே டப்பிங் கொடுத்தேன். மற்றபடி உங்கள் வாய்ஸ் நல்லாயிருக்கு. நீங்க கண்டிப்பாக என் படத்தில் நடிக்குறீங்க”னு சொல்லிட்டு,
‘உங்களை ஒரு போட்டோ எடுக்கணும். நல்ல படிச்ச பையன், வேலையில்லாமல் கஷ்டப்படுறான் என்பது மாதிரியான கேரக்டர்’னு சொன்னார்.
உடனே மனோபாலாவைப் பிடிச்சு, டைரக்டருக்குத் தெரியாமல் என்னை போட்டோ எடுக்கக் கூப்பிட்டுப் போயிட்டேன். மனோபாலாகூட நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டேன்.
மயிலாப்பூர் பார்க்கில் என்னை உட்கார வைத்து ”அப்படிப் பார், இப்படிப் பார்”னு மனோபாலா போட்டோ எடுத்துக் கொடுத்துவிட்டார்.
மனோபாலா என்னிடம், ‘டேய், இதை நான் எடுத்தேன்னு சொல்லிறாத, என் வேலை போயிரும்’னு சொல்லிக் கொடுத்தார்.
அடுத்தநாள் டைரக்டரிடம் எடுத்துட்டுப்போய் காட்டினேன்.
”என்னய்யா, நான் எப்படி நினைச்சேனோ அப்படியே இருக்கு. நீ என் படத்தில் கண்டிப்பா நடிக்கிற’னு பாரதிராஜா சொல்லி என்னை அனுப்பி வெச்சார்.
அப்பறம் ஒருநாள் திடீரென்று ஒரு பெரிய புரொடியூசர் என்னை ரூமிலிருந்து அழைச்சுட்டுப்போய், கையில் 4,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, “பாருப்பா.. என்னோட படத்தில் நீ நடிக்கிற. இந்தப் படம் முடியற வரைக்கும் நீ வேற எந்தப் படமும் பண்ண கூடாது”னு என்னிடம் கையெழுத்துக் கேட்டார்.
நான், ‘’இல்லை சார் பாரதிராஜா சார் டைரக்ஷனில் நடிக்கப் போறேன்”னு சொன்னேன். ‘அவர் அப்படித்தான் சொல்வார். பட், பண்ண மாட்டார். நம்பாதீங்கனு’ சொன்னார்.
‘என்னடா இது இப்படிச் சொல்றாங்க. பெரிய புரொடியூசரே இப்படிச் சொல்றார்’னு யோசித்தேன். பாரதிராஜா சொல்லியும் மூணு மாசம் ஓடிருச்சு.
பாரதிராஜா ஆபீஸூக்கு போன் பண்ணினேன். ”டைரக்டர் சார் இருக்காரா”னு கேட்டேன். ’எடிட்டிங்கில் இருக்கிறார்’னு பதில் வந்துச்சு.
நேரா வடபழனி ஆர்.கே.லேபுக்குப் போனேன். இந்திப் படம் எடிட்டிங் போயிட்டு இருந்தது. பாரதிராஜாவிடம் ”பிரதர் ஐ எம் டூயிங் யுவர் ஃபிலிம் ஆர் நாட் டெல் மீ”னு கேட்டேன். ’ஏன்’னு கேட்டார். ’வெளியே பேசிக்கிறாங்க’னு சொன்னேன்.
பாரதிராஜா, ‘யூ டூயிங், நம்பிக்கை இல்லைன்னா உன் படத்துக்கான பாட்டு பிரசாத் ஸ்டூடியோவில் போயிட்டு இருக்கு. வா’னு சொன்னார்.
அடுத்த நாள் ஸ்டூடியோ போனேன்; இளையராஜா சாரை அறிமுகப்படுத்தினார். ‘பூங்கதவே…’ பாட்டு ரெக்கார்டிங் போயிட்டு இருக்கு. படத்துக்கு நான்தான் ஹீரோனு எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார்.
அந்த நேரத்தில் ஸ்டூடியோ வெளியே வைரமுத்து நின்னுக்கிட்டு இருப்பார். என்னிடம் சில கவிதைகள் சொல்வார். நான் நினைப்பேன், ‘என்னடா இந்த மனுஷனிடம் கவிதை ஊற்று மாதிரி கொட்டிக்கிட்டே இருக்கு’னு.
அவர் பெயர்கூட அப்போது நான் கேட்டதில்லை. அவரும் ஏதோ சான்ஸ் தேடித்தான் வந்திருக்கார்னு நினைத்தேன்.
‘நிழல்கள்’ படத்தில் எல்லா பாடல்களும் ஹிட்.
அப்புறம் கொஞ்சம் நாளில் படத்தின் ஷூட் போச்சு. படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுது. அந்த நேரத்தில் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படமும் ரிலீஸ். இரண்டும் ஒரே கதை. ‘நிழல்கள்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட்.
பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸூக்காக வெயிட் பண்ணும்போது, ‘அங்கே பாருடா ’நிழல்கள்’ படத்தில் நடிச்ச பையன்’னு சொல்வாங்க. கூட்டம் சேர்ந்துடும். அப்படியே ஓடிருவேன். ஹோட்டல் போனாலும் இதே நிலைமை. ஒரே இரவில் நல்ல ஃபேமஸாகி விட்டேன்.
அதற்கு அப்புறம்தான் சொந்தமாக பைக் வாங்கினேன். ‘நிழல்கள்’ படத்துக்குப் பிறகு தமிழில் எனக்கு ஆறு மாதத்திற்கு எந்தப் படங்களும் வரவில்லை. என்னடா நம்ம பாப்புலர் ஆகிட்டோம், படங்கள் எதுவும் வரவில்லையேனு நினைத்தேன்.
அப்போது ஒரு போன் வந்தது. மலையாளத்தில் பி.எம்.சுந்தரம்னு ஒரு கேமராமேன் அவர் பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கிறார். அதில் நீங்கதான் ஹீரோனு சொல்றாங்க.
மலையாளம் எனக்கு தெரியாது. பட், படம் வந்தால் சரினு ஒப்புக்கிட்டேன்.
அப்போது போன் செய்தவர் ”உங்களுக்கு நீச்சல் தெரியுமா”னு கேட்டார். எதுக்குனு கேட்டேன். அவர், ”இல்லை, இல்லை போன படத்தில் ஆக்டர் ஜெய்னு ஒரு பெரிய டைரக்டர் ஹீரோவா பண்ணினார்.
அப்போது ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதிக்கும்போது இறந்துவிட்டார். ஹீரோ இறந்துவிட்டதால் ரொம்ப பயப்படுறாங்க. அதனால்தான் உங்களுக்கு நீச்சல் தெரியுமானு கேட்குறோம். தெரிந்தால் ஓகே, இல்லைனா வேண்டாம்”னு சொன்னார்.
ஏன்னா, நீச்சல் தெரியாமல் நான் நடிக்கப் போய் எனக்கு ஏதாவது ஆச்சுனா. கம்பெனி பேர் கெட்டுப் போயிருமில்லையா அதனால் யோசிச்சாங்க.
நான் உடனே எனக்கு நீச்சல் நல்லா வரும் அப்படினு சொல்லிட்டேன். பட், உண்மையாக எனக்கு நீச்சல் தெரியாது. என் மனசுக்குள்ளே ”நீச்சல்தானேடா ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி கத்துக்கிட்டா போச்சு”னு நீச்சல் கத்துக்கிட்டு கேரளாவுக்கு ஷூட்டிங் போயிட்டேன்.
நான் ஹீரோ, ரகுவரன் வில்லன், ரோகினி ஹீரோயின், படம் பேர் ‘கக்கா’. கேரளா போனால் எங்கே பார்த்தாலும் தண்ணீராக ஓடுது. சின்னப் பசங்க கூட மேலே இருந்து தண்ணீருக்குள்ளே டையிங் அடிக்கிறாங்க.
ரகுவரன் என்னிடம் வந்து, ”டேய் மச்சான், உனக்கு நீச்சல் சரியாக தெரியாது பார்த்து பண்ணு”னு என்னை பயப்பட வைக்கிறான். எப்படியோ நீச்சல் தெரியாமல் படத்தில் நடித்து முடித்துவிட்டேன்.
படம் சில்வர் ஜூப்ளி. அப்புறம் மலையாளமும் பேசக் கத்துக்கிட்டேன். நீச்சலும் முழுச்சா அடிக்கக் கத்துக்கிட்டேன். இப்படித்தான் மலையாள சினிமா எனக்கு அறிமுகம் ஆச்சு.
மலையாளத்தில் தொடர்ந்து எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா சார் என்னை அழைத்து ‘மண்வாசனை’ படத்தில் ஒரு கேரக்டர் ரோல் பண்ண வைத்தார்.
கேரக்டர் ரோல் பண்ண யோசித்தேன். பட், என்னிடம் கேட்பதோ என்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜா சார், அதனால் பண்ணினேன். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
படத்தில் நான் வருகின்ற சீன்ஸூக்கு கிளாப்ஸ் சத்தம் காதைப் பிளக்குது. தியேட்டரில். என்னடா நம்ம என்ட்ரிக்கு கிளாப் சத்தம் இப்படியானு பார்த்தால் வைரமுத்து கவிதையை நான் சொல்லிட்டு வருவேன். ஸோ, அவர் கவிதைக்குதான் கிளாப்ஸ்.
இவ்வளவு கிளாப் சத்தத்தைப் பார்த்த புரொடியூசர், விநியோகஸ்தர்கள் ”என்னடா நிழல்கள் ரவிக்கு இவ்வளவு கிளாப்ஸா’’னு என்னை வரிசையாக அவர்களின் படங்களில் புக் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். தொடர்ந்து நிறைய படங்களில் கேரக்டர் ரோல், வில்லன் ரோல் செய்தேன்.
நான் ஒரு நடிகனாக வர வேண்டுமென்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்தேன். அது ஹீரோவாக இருந்தால் என்ன வில்லனாக இருந்தால் என்னன்னு ஹாப்பியாக எடுத்துக்கொண்டேன்.
ஏன்னா, சினிமாத் துறையில் என்னை உயர்த்தி விடுவதற்கு ஆட்கள் யாருமில்லை. நம்மதான் சொந்தக் காலில் நின்னு ஜெயிக்க வேண்டும். அதனால், வருஷத்துக்கு பத்து, பதினைந்து படங்கள் பண்ணினேன்.
நான் நடித்த முதல் நெகட்டிவ் கேரக்டர் படம் ‘ஆராதனை’. சுமன் ஹீரோ. படத்தில் என்னை ஹீரோவாகவே கொண்டு வருவாங்க; கடைசியில் நான் வில்லனாக இருப்பேன். வில்லன் கேரக்டருக்கு எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.
ரஜினியுடன் முதலில் சேர்ந்து நடித்த படம் ‘தம்பிக்கு எந்த ஊர்’. அந்தப் படத்தில் பக்கா வில்லனாக நடித்தேன்.
அதற்கு அப்புறம் ரஜினியுடனே பல படங்களில் வில்லனாக நடித்து விட்டேன். அப்போதே அவர் சூப்பர் ஸ்டார். என் வாழ்க்கையில் பார்த்த ரொம்ப சிம்பிளான மனிதன்.
மேட்டுப்பாளையத்தில் ‘தம்பிக்கு எந்த ஊர்’ ஷூட்டிங் நடந்தது. அப்போது இரவு முழுவதும் ஷூட் போகும். அதை முடித்துவிட்டு பகல் ஷூட்டிங்கும் வந்துவிடுவார்.
மதியம் சாப்பிட்டுவிட்டு பாக்குத் தோப்பில் அப்படியே துண்டை விரித்துப் படுத்து விடுவார். அவர் படங்கள் எல்லாம் நல்ல வசூல் செய்யும். அப்போதே அவர் அப்படித்தான் இருந்தார்.
கமலுடன் ‘நாயகன்’ படத்தில் நடித்திருப்பேன். மணிரத்னம் சாரின் டைரக்ஷன். மணி சாரின் முதல் தமிழ் படமான ‘பகல்நிலவு’ படத்திலும் நடித்திருப்பேன். அதன்பிறகு ’நாயகன்’ படம்.
கமல் சார் கொஞ்சம் உயரம் கம்மியாக இருப்பார். அவருடைய பையனாக படத்தில் நான் நடிக்கிறேன். நான் கொஞ்சம் ஹைட். அப்போது என்னையும், கமலையும் நிற்க வைத்துப் பார்த்தாங்க.
அப்போ, நான் கால் இரண்டையும் மண்ணுக்குள்ளே விட்டு குட்டையாக நின்னேன். அவங்க பார்த்துவிட்டு ஹைட் சரியாக இருக்குனு சொல்லிட்டாங்க.
ஃபர்ஸ்ட் பத்து நாள் ஷூட்டிங் போவேன்; நல்ல மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு உட்கார்ந்திருப்பேன். எனக்கு ஷாட்டே இருக்காது. கமல் சார் நடிக்கிறதை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பேன்.
அவர் நடிப்பை பார்ப்பதே அபூர்வம் இல்லையா. மணி சார் டைரக்ஷனே ஸ்டைலாக இருக்கும். கமல் வேற அப்பா கெட்டப்.
பத்து நாள் ஷூட்டிங் கமல் நடிப்பை நான் வேடிக்கை பார்த்தே முடிந்து விட்டது. 11-வது நாள் வந்தது; ‘நாயகன்’ ஷூட்டிங்கில் இருக்கேன்.
அன்னைக்கு நைட் ட்ரெயின் ஏறணும். தெலுங்குப் பட ஷூட்டிங்கிற்காக ராஜமுந்திரி போகணும். நானும், கெளதமியும் கிளம்பிப் போறோம், பெரிய டைரக்டர் படம் வேற.
காலையில் ஷூட்டிங் போனவுடனே மணி சாரிடம் சொல்லி விட்டேன், நைட் ஒன்பது மணிக்கு ட்ரெயின் இருக்குனு. அவரும் ஓகே சொல்லிட்டார்.
ஷூட்டிங் போகுது போகுது போயிக்கிட்டே இருக்கு. மதியம் சாப்பாட்டு டைம் வந்துவிட்டது, எனக்கான ஷூட் எடுக்கவே இல்லை. நேராக என் ரூமுக்குப் போய் என் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தேன்.
ஷூட்டிங் ஸ்பாட் போனால் மாலை ஏழு மணிக்குதான் எனக்கான ஷாட் வைக்குறாங்க. நைட் ஒன்பது மணிக்கு எனக்கு ட்ரெயின். எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.
என்ன சீன்னுகூட தெரியாது. ‘நாயகன்’ படத்தில் ஃபர்ஸ்ட் டைம் நடிக்கப் போறேன். மணி 8.15 ஆச்சு. டயலாக் ஷீட் கையில் தராங்க. என் மண்டையில் எதுவும் ஏறவே இல்லை. கமல் ரெடியாக இருக்கிறார்.
அப்போது என்னை வைத்து எடுத்த சீன்தான் கமல் எனக்கு வெத்தலை கொடுப்பார். அப்பா முன்னாடி எப்படி சாப்பிடுறதுன்னு கொஞ்சம் தள்ளிப்போய் சாப்பிட்டு வருவேன்.
வெத்தலையை போட்டுத் துப்புற சீன். சீன் ஓகே ஆனவுடன் ட்ரெயின் பிடிக்க ஓடிவிட்டேன். படத்தில் அந்த சீன் நல்லாயிருக்கும்.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘மறுபடியும்’.
பாலு மகேந்திரா டைரக்ஷனில் எனக்கு நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை.
11 வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரைப் பார்த்து என் போட்டோ கொடுத்து உங்கள் டைரக்ஷனில் நடிக்கணும்னு சொன்னேன்.
பதினோறு ஆண்டுகள் கழித்து அவர் என்னை ‘மறுபடியும்’ படத்தில் நடிக்க அழைத்தார். நிழல்கள் ரவியை வித்தியாசமாகக் காட்டினார். எனக்கே என் ஸ்டைல் பிடித்திருந்தது.
அப்போதுதான் டைரக்டர் பாலாவை மீட் பண்ணினேன். பாலா சார் எப்படி அப்போது ட்ரெஸ்ஸிங் பண்ணி இருந்தாரோ அதைதான் ‘மறுபடியும்’ படத்தில் என் ட்ரெஸ்ஸிங்காக பாலுமகேந்திரா வைத்தார்.
ஏன்னா, பாலா ஜீன்ஸ் பேன்ட் போட்டு சர்ட் போட்டு கையை மடித்து விட்டிருப்பார். அப்படியேதான் என் ட்ரெஸ்ஸிங் இருக்கும்.
ஏ.வி.எம் ராஜன் ஒரு நாள் வாகை ஸ்டூடியோவுக்குக் கூப்பிட்டுப் போனார். யாரைப் பார்க்கப் போறோம்னு எனக்குத் தெரியாது.
நேராகப் போனால் சிவாஜி சார் உட்கார்ந்து இருந்தார். அவரைப் பார்த்தவுடன் காலில் விழுந்துவிட்டேன்.
சிவாஜி சார், ‘பேர் என்ன’னு கேட்டார். ’நிழல்கள்’ ரவினு சொன்னேன். ”அதென்ன ’நிழல்கள்’ ரவி, வெயில் ரவினு வெச்சுக்கோ’’னு கிண்டல் பண்ணினார்.
”ராஜன், இந்தப் பையன் மூக்கு முழியுமாய் இருக்கான், இவனையே படத்தில் நடிக்க வைத்துவிடு”னு சொன்னார்.
எனக்கு ரொம்ப சந்தோஷம். சிவாஜி சாரின் தம்பியாக படத்தில் நடித்தேன். வாய்ஸ் மாடுலேஷன் சிவாஜி சாரிடம்தான் கற்றுக்கொண்டேன்.
சிவாஜி சாரின் பையன் பிரபு உடனும் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். பிரபு பையன் விக்ரம் பிரபுவுடன் ‘பக்கா’ படத்தில் நடித்திருக்கிறேன். சிவாஜி குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடனும் நடித்தது எனக்கு மகிழ்ச்சி.
என் திருமண வரவேற்பிற்கு சிவாஜி, கமல், ரஜினி என எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போதுதான் என் அப்பா வாழ்க்கையில் நான் செட்டிலாகி, நல்லா இருக்கிறேன் என்று நம்பினார்.
– நன்றி: விகடன் இதழ்