‘நா’ இருப்போரெல்லாம் ‘நா’காக்க!

அண்மைக்கால ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, காது இருப்பவர்களுக்கெல்லாம், காது இருப்பதே பெரும் வேதனையாக இருக்கிறது. அந்த அளவுக்கு நம்மைச் சுற்றிலும் செமத்தியான பேச்சுக்கள் எங்கு பார்த்தாலும், பரவிக் கொண்டிருக்கின்றன. 

குளிர்காலத்தில், பலருக்கு பெட்சீட்டெல்லாம் போர்த்தாத போதே உடம்பெல்லாம் வெட வெடக்கிற மாதிரி தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பொதுவெளியில் பேசும் பலர், நாக்கில் சுளுக்கு விழும் அளவிற்கு பேசிவிட்டு அவை பொதுவெளியில், போதுமான அளவிற்கு பீதியைக் கிளப்பிய பிறகு, சாவகாசமாக பிறகு மன்னிப்பு அறிக்கையை விடுக்கிறார்கள். 

மூத்த அமைச்சர்கள் என்றால், வரம்பு மீறி பேசலாம், என்றெல்லாம் கூட ஒரு விதிமுறை இருக்கிறதா என்ன?

ஒரு மூத்த அமைச்சர் மாற்றுத் திறனாளிகளைப் பற்றி கொச்சையாகப் பேச இன்னொரு மெத்தப்படித்த மூத்த அமைச்சர், பெண்களைப் பற்றியும் வழிபாட்டு நம்பிக்கைகளைப் பற்றியும் கேவலமாகப் பேசிவிட்டு, பிறகு புன்னகையுடன் ஒரு சிரிப்பு சிரித்து அதைச் சமாளிக்கிறார். 

ஒன்றிய அமைச்சரான அமித்ஷா தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்தாலும் வந்தார், தொலைக்காட்சி விவாதங்களில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட, நாக்கில் சாக் டீரீட்மெண்ட் கொடுத்ததைப் போல ஏகப்பதற்றத்துடன் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதிலும், தொலைக்காட்சி விவாதங்களுக்கென்றே சிலர், டெல்லி பிளாட் பாரங்களில் கிடைக்கும் கையில்லாத விசேஷ ஜாக்கெட்டை அணிந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்னும் சாதிவாரி பட்டியல்கள் எல்லாம் எடுக்காத நிலையிலேயே விவாதங்களில் பேசும் சிலர், ஜாதி வாரி கணக்கெடுப்பைத் தானே நடத்தி முடித்ததைப்போல புள்ளி விவரங்களை அள்ளி வீச, நெறியாளர்களும் பார்க்கும் பார்வையாளர்களும் காதில் பூச்சூட்டியதைப் போல உணர வேண்டிய தவிப்பு ஏற்பட்டு விடுகிறது.

நிகழ்ச்சியைத் துவக்கும் தொகுப்பாளர்களும் பிரஷர் ஏறி தண்ணீர் குடிக்கும்போது, அதே தொலைக்காட்சியில் வீடுகளில் கை கால்களை நீட்டியபடி பார்த்துக் கொண்டிருப்பவர்களும் சூடு தாங்காமல், பிரஷர் ஏறி தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது.

அதிலும், அரசியல் கூட்டணிகள் மேகத்தைப் போல சட்டென்று மாறிவரும் நிலையில், பேசுகின்ற பலரும் நேற்று என்ற ஒன்றையே சவுகர்யமாக மறந்துவிடுகிறார்கள்.

இன்றைய நிலையை மட்டும் அதிலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்கிற பாணியில், இக்கணத்தை மட்டும் கணக்கில் கொண்டு பயங்கரமான கூட்டணி சிரிப்பெல்லாம் சிரிக்கிறார்கள்.

இன்னும் தேர்தலுக்கு பல மாதங்கள் இருக்கையில், இன்னும் எத்தகைய கொதிப்பான அவமானகரமான பேச்சுக்களையெல்லாம் பொது வெளியில் கேட்க வேண்டி வருமோ?

மாண்புமிகு அரசியல் பெருமக்கள் தான் சொல்ல வேண்டும்.

– லியோ

#தேர்தல் #பேச்சு #அரசியல் #ஜேகிருஷ்ணமூர்த்தி #அரசியல்கூட்டணி #அமித்ஷா #தமிழ்நாடு #சாதிவாரிபட்டியல்கள் #தொலைக்காட்சி #தொகுப்பாளர் #விவாதங்கள் #மூத்தஅமைச்சர் #மாற்றுத்திறனாளி #election #political #speech #jk #amithsa #tn #tv #exminister

Comments (0)
Add Comment