அண்மையில், கலை உள்ளிட்ட துறைகளில் அளப்பரிய பங்காற்றி வரும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், நாடகக் கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன் உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு கலைஞர்களையும் சிறப்பிக்கும் விதமாக, சென்னை கூத்துப்பட்டறை அமைப்பும் பாரத இளங்கோ அறக்கட்டளையும் இணைந்து பாராட்டு விழா நடத்தின.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் திரளானோர் பங்கேற்று வாழ்த்தினர்.
புகழ்பெற்ற பரதக் கலைஞரும், பத்ம விபூஷன் விருது பெற்றவரும், பாரத இளங்கோ அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் பத்மா சுப்ரமணியம் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
அல்லையன்ஸ் பிரான்சிஸ் டி மெட்ராஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் இணை இயக்குநர் ஹேமநாதன், கூத்துப் பட்டறையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் ஞான.ராஜசேகரன் (மோகமுள், முகம், பாரதி, பெரியார், ராமானுஜர் ஆகிய படங்களை இயக்கியவர்), அசீமா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வி.ஆர். தேவிகா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகக் கலைத்துறையின் இணைப் பேராசிரியர் கே.ஆர்.ராஜா ரவிவர்மா உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டுரை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் முனைவர் லதா ராஜேந்திரன், தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.
துவக்கத்தில் பேசிய பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.
நாட்டியக் கலைக்கும் தெருக்கூத்துக் கலைக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறிய அவர், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச, புராணங்கள், சாமானிய மக்களிடம் சென்று சேர்ந்ததற்கு கூத்துக் கலைஞர்களின் பங்களிப்பு மிக அதிகம் என்றார்.
கூத்துப்பட்டறையும் பாரத இளங்கோ அறக்கட்டளையும் இணைந்து மாநில அளவில் தெருக்கூத்து தொடர்பான பெரிய மாநாடு ஒன்றை நடத்த உள்ளதையும் பத்மா சுப்பிரமணியன் அறிவித்தார்.
விருதாளர்களைப் பாராட்டிப் பேசிய ஸ்ரீராம், நவீன நாடகங்களின் அபார வளர்ச்சிக்கு நா.முத்துச்சாமியின் அளப்பரிய பங்களிப்பைப் பற்றிப் பேசினார்.
நாடகங்கள் குறித்து நடை, பிரக்ஞை, கணையாழி உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் நா.முத்துச்சாமி நிறைய எழுதியதை நினைவு கூர்ந்ததோடு, இதுபோன்ற விருதுகள் கலைஞர்களுக்கு உத்வேகம் தரும் என்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
ஏற்புரையாற்றிய பத்மஸ்ரீ விருதாளர் கண்ணப்ப சம்பந்தன், தெருக்கூத்தோடு இணைந்த தனது ஐம்பதாண்டு கால கலைப் பயணத்தை நினைவு கூர்ந்தார்.
1971 இல் தனது முதல் மேடை நிகழ்ச்சியிலிருந்து தனது ஆரம்பகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்த அவர், தனது தந்தை புரிசை கண்ணப்ப தம்பிரானின் மரபான தெருக்கூத்துக் கலை பற்றியும் சுருக்கமாகப் பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், கலை மீதான ஆர்வத்தினால் பள்ளிப் படிப்பைத் துறந்து பறையிசையைக் கற்றுக்கொண்டதாகவும் இந்தக் கலையைக் கற்றதற்காக பல துன்பங்களையும் அவமானங்களையும் தாண்டி வந்ததாகவும் உருக்கமாகப் பேசினார்.
உறவினர்கள் யாரும் தன்னை மதிக்காமல் இருந்ததாகவும், தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிப்புக்குப் பிறகு, தன்னை பெருமையாகப் பார்ப்பாகதாகவும் கூறிய அவர், இந்த விருது தனக்குக் கிடைத்த விருதல்ல என்றும் பறைக்குக் கிடைத்த விருது என்றும் நெகிழ்ச்சியோடுப் பகிர்ந்து கொண்டார்.
காயத்ரி கண்ணனின் இனிய குரலில், அம்மன் பாடலுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி, பல்வேறு கலைஞர்களின் பாராட்டுக்களுடன், கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன் குழுவினர் நடத்திய மரபான ‘வாலி மோட்சம்’ என்ற தெருக்கூத்து நிகழ்ச்சியுடன் இனிதாக நிறைவு பெற்றது.
– தனுஷா