‘படம் ரெஃபரன்ஸ் இல்லையாம், ரெஃபரன்ஸ்லதான் படமே இருக்காம்’ என்று ‘குட் பேட் அக்லி’ பற்றி ஒரு பதின்ம வயதுச் சிறுமி தனது தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுறாங்க.. அதுல என்ன இருக்குன்னு கேட்டா உங்களுக்கெல்லாம் புரியாதுங்கறாங்க’ என்று ஒருவர் இன்னொருவரிடம் கருத்து சொன்னது காதில் விழுந்தது. இரண்டுமே ‘குட் பேட் அக்லி’ படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சில மணி நேரங்களில் கேட்டது.
தியேட்டரில் இருக்கும்போது கைத்தட்டலும் விசில் சத்தமும் சிரிப்பொலியும் கலந்து கட்டிய வரவேற்பு என் காதுகளைச் சூழ்ந்திருந்தது.
என்னருகே இருந்த ஒரு நபர் பாதி படத்திற்கு மேல் தலையை நிமிர்த்தி திரையை நோக்கவே இல்லை. ஒவ்வொரு வசனம் வரும்போதும் ‘ப்ச்.. ப்ச்..’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
மேலே சொன்னது எல்லாமே ‘குட் பேட் அக்லி’ சம்பந்தப்பட்ட விமர்சனங்கள் தான்.
சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். ஆதிக் ரவிச்சந்திரன் நான்காவதாக இயக்கியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தந்ததென்று பார்க்கலாமா?
‘கு.பே.அ’ கதை!
‘படத்துல கதையே இல்லைன்னு சொன்னாங்க. ஆனா, கதைன்னு ஆரம்பிக்கிறீங்களே’ என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம். அதற்காகவே, கதையொன்றைப் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஏகே (அஜித்குமார்) எனும் ஒரு கேங்க்ஸ்டர்.
அதுவும் ‘லோக்கலாக’ ஆரம்பித்து ‘இண்டர்நேஷனல்’ லெவலில் ‘ரெட் ட்ராகன்’ என்று பெயரைப் பெற்றவர்.
ரம்யா (த்ரிஷா) எனும் பெண்ணை அவர் திருமணம் செய்துகொள்கிறார். அந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதற்கு விஹான் என்று பெயரிடுகின்றனர்.
‘உன்னோட பாவம் பழி எல்லாம் என்னையும் குழந்தையையும் பாதிக்க வேண்டாம்’ என்று ஏகேவை தன் வாழ்வில் இருந்து வெளியேற்ற எண்ணுகிறார் ரம்யா.
சொல்ல மறந்த ஒரு தகவல். அந்தத் ரம்யா ஸ்பெயின் நாட்டு தூதரகத்தில் பணியாற்றுகிறார். எப்போதும் சட்டப்படி செயல்பட வேண்டுமென்ற என்பதில் உறுதியாக நிற்பவர்.
அப்படிப்பட்ட ரம்யா ஏன் ஒரு கேங்ஸ்டரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? ‘லாஜிக் பார்த்த மேஜிக் மிஸ் ஆகிடும் பரவாயில்லியா’ என்று படம் பார்க்க வரும் முன்னரே ஆதிக் சொல்லிவிட்டதால், மூளையை வீட்டிலேயே கழற்றி வைத்துவிட்டுப் படம் பார்க்கச் சென்றாலும் இப்படிச் சில கேள்விகள் நம்மையறியாமல் முளைத்து விடுகின்றன.
ரம்யா, விஹானோடு ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு சிறைக்குச் செல்கிறார் ஏகே.
மகன் வீடியோ காலில் வரும்போதெல்லாம் வெளிநாட்டில் பிஸியாக இருப்பதாகப் பொய் சொல்கிறார்.
இந்த நிலையில், விஹானின் 18வது பிறந்தநாள் வருகிறது. அப்போது, ‘எப்படியாவது நான் நேரில் வந்துவிடுவேன். இந்த பிறந்தநாள் சிறப்பானதாக இருக்கும்’ என்ற வாக்குறுதி தருகிறார் ஏகே.
அதற்கேற்ப, சிறை அதிகாரியிடம் பேசி முன்னரே விடுதலையாகுமாறு பார்த்துக் கொள்கிறார்.
மும்பை சிறையில் இருந்து வெளியே வந்ததும் மனைவியை நேரில் சென்று பார்க்கிறார்.
அப்போது, அவர்கள் இருவரையும் தாக்க சில ‘லோக்கல்’ ரவுடிகள் முயற்சிக்கின்றனர்.
அவர்களை ஏகே ஒருவழியாகச் சமாளித்து சமாதானப்படுத்தும் சூழலில், ‘விஹானை சிலர் கடத்தியதாக’ தகவல் வருகிறது.
சில மணி நேரங்கள் கழித்து, ஸ்பெயின் நாட்டில் போதைப்பொருள் உட்கொண்டது மற்றும் கடத்திய வழக்கில் விஹான் கைது செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.
அது ஒரு சூழ்ச்சி என்று ஏகேவுக்கு பிடிபடுகிறது. ‘யார் அந்த எதிரி’ என்று கண்டறிய முயற்சிக்கிறார். அந்த நபரோடு உரையாடும் வாய்ப்பும் கிட்டுகிறது.
அப்போதுதான், தனது எதிரிகள் எவரும் விஹானைக் கடத்தவில்லை என்பது ஏகேவுக்கு தெரிய வருகிறது. ‘ரம்யாவின் மகன்’ என்பதாலேயே விஹான் கடத்தப்பட்டிருக்கிறார்.
ரம்யா அப்படி என்ன செய்தார்? அதனால் அந்த எதிரி எப்படி பாதிப்புக்குள்ளானார்? மகனையும் மனைவியையும் காப்பாற்ற ஏகே என்ன செய்தார் என்பதுதான் ‘குட் பேட் அக்லி’யின் மீதி.
உண்மையைச் சொன்னால், கதை என்ற வஸ்து ஏதோ கொஞ்சம் இருக்கிறது எனும்படியான ஒரு உள்ளடக்கம். அதனை நாம் முழுமையாக உணரவிடாதவாறு அஜித் நடித்த பழைய படங்களின் ‘ரெஃபரன்ஸ்’களை அள்ளிக் கொட்டியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
படத்தைப் புகழ்கிறவர்கள் எல்லாம் அவற்றைத்தான் முதலில் குறிப்பிடுகின்றனர். ‘நல்லால்ல’ என்பவர்களும் அவற்றைக் குறிப்பிட்டுவிட்டுத்தான் மற்றவற்றைப் பேசத் தொடங்குகின்றனர்.
ஏன் ‘ரெஃபரன்ஸ்’ வெறி?!
திரையில் நாம் பார்த்து வியந்த நட்சத்திரங்களின் நடிப்பை, வசனங்களை, காட்சிச்சூழலை, பாடல்காட்சிகளை அப்படியே எடுத்தாண்டு, அதே நட்சத்திரங்கள் நடிக்கிற புதிய படங்களில் வைப்பதில் தவறில்லை.
ஆனால், புதிய படத்தின் கதைக்கு முரணான வகையிலோ அல்லது அதிலிருக்கும் காட்சிச்சூழலுக்குப் புதிய பரிமாணம் சேர்க்கும் வகையிலோ அந்த உத்தி பயன்படுத்தப்பட வேண்டும்.
அந்த நட்சத்திரத்தின் பழைய படங்களில் இருந்து சில ஷாட்களை எடுத்து வீடியோவை உருவாக்குகிற ‘ஃபேன்பாய்’களுக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்க வைத்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’. அந்த அளவுக்கு இதில் ‘ரெஃபரன்ஸ் வெறி’ நிரம்பி நிற்கிறது.
சரி, ஆதிக் தந்திருக்கும் ‘ரெஃபரன்ஸ்’களாவது அஜித் நடித்த அனைத்து படங்களையும் வரிசைக்கிரமமாக நினைவில் இருத்தும்படி அமைந்திருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
படத்தின் காட்சிகளோடு, வசனங்களோடு பொருந்துகிறதா என்றால் ‘இல்லை’.
தீவிர ரசிகர்கள் தவிர்த்து சாதாரண பார்வையாளர்கள் ஏற்று ரசித்து கைதட்டுகிற அளவுக்குப் படத்தில் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என்றால் ‘இல்லை’.
அப்படியென்றால் படத்தில் என்ன தான் இருக்கிறது?
அஜித் ஸ்டைலாக தோற்றமளிக்கும் ஷாட்கள் இருக்கின்றன. அவரது ‘கணீர்’ குரலில் பேசுகிற சில ‘பஞ்ச்’கள் இருக்கின்றன. ’அட்டகாசம்’ காலத்து தெனாவெட்டான, கொஞ்சம் காமெடியான அவரது பெர்பார்மன்ஸ் இருக்கிறது.
ஆக்ஷன் காட்சிகளின் பின்னணியில் பாடல்கள், அதிரடி சண்டைக்காட்சிகள், பரபரவென்று நகர்வது போன்று ‘நடிக்கிற’ திரைக்கதை ஆகியன படத்தில் இருக்கின்றன.
அவ்வளவுதான்.
நாம் செய்திகளில், சமூகவலைதளங்களில் காண்கிற உலகமே உண்மையானதல்ல எனும் சூழலில், முழுக்கக் கற்பனையான ஒரு உலகை ‘குட் பேட் அக்லி’யில் காண்பித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதனை அவர் பிரித்துக் காட்டியிருக்கும் விதம் நம்மை திருப்திப்படுத்துவதாக இல்லை.
ஆனால், இதில் அவர் காட்டியிருக்கும் ஒரு உலகத்தை நாம் உள்வாங்க குறிப்பிட்ட சில வண்ணங்களின் கலவையைத் திரையில் கொட்டியிருக்கிறார்.
தங்கத்தை உருக்கி வார்க்கும்போது இளம்சிவப்பும் மஞ்சளும் பழுப்பும் கலந்த திரவம் ஒன்று நம்மைச் சுற்றி ஒருவித வெளிச்சத்தைத் தருமே.. கிட்டத்தட்ட அப்படியொரு வண்ணம் பெரும்பாலான பிரேம்களில் தெரியுமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம்.
ஆடை வடிவமைப்பு, கலை வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் உட்படச் சில தொழில்நுட்பக் கலைஞர்களோடு ஒருங்கிணைந்து அதனைச் செயல்படுத்தியிருக்கிறார் ஆதிக்.
அது ‘குட் பேட் அக்லி’யின் ஸ்பெஷல்.
பின்னணி இசையிலோ ஜி.வி.பிரகாஷ்குமார் ‘பாய்ந்து’ பிறாண்டியிருக்கிறார். பாடல்களோ ‘ஓகே’ ரகம்.
‘ஒத்த ரூபா தாரேன்’ பாடலோடு ‘தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா’வும் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. அவை கேட்க அருமையாக இருக்கின்றன.
ஆனால், திரைக்கதையில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் இடமும் விதமும் நம்மை அயர்வுற வைக்கின்றன.
பொதுவாக, திரையில் தெரிகிற காட்சிக்கு முரணாகவே அது போன்ற ‘கிளாசிக்’ பாடல்கள் ஒலிப்பது அல்லது திரைக்கதையின் நகர்வை வேறோரு தளத்திற்கு உயர்த்தச் செய்வதுவே அந்த உத்தியின் நோக்கமாக இருக்க வேண்டும். ‘கு.பே.அ.’யில் அதனை மறந்திருக்கிறார் ஆதிக்.
விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு, ஜி.எம்.சேகரின் தயாரிப்பு வடிவமைப்பு, சுப்ரீம் சுந்தர் மற்றும் காலோயியனின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, அனு வர்தன் மற்றும் ராஜேஷ் காமராசுவின் ஸ்டைலிங் என்று குறிப்பிடத்தக்க சில தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கின்றன. அவை ‘தனித்துவமான’ அனுபவத்தை இப்படம் தரக் காரணமாக உள்ளன.
அதேநேரத்தில் மனிஹெய்ஸ்ட் புரபொசர் பாத்திரத்தை எல்லாம் ஏகேவோடு சம்பந்தப்படுத்திக் காட்டுவது போன்று அமைந்திருக்கும் ‘கிராபிக்ஸ்’ காட்சி எல்லாம் ஓவரோ ஓவர்.
இந்தப் படத்தில் அஜித்தோடு த்ரிஷா, கிங்ஸ்லி, ‘ரோடிஸ்’ ரகு, கேஜிஎஃப் அவினாஷ், யோகிபாபு உள்ளிட்ட சிலரோடு பிரசன்னா, பிரபு, ப்ரியா பிரகாஷ் வாரியர், டினு ஆனந்த், சாயாஜி ஷிண்டே, ஜாக்கி ஷெராஃப், சுனில், அர்ஜுன் தாஸ் எனப் பலர் நடித்திருக்கின்றனர்.
அவர்களில் அர்ஜுன் தாஸ் மட்டுமே ‘ஓகே’ என்று சொல்லும்படியாக வந்து போயிருக்கிறார். சிம்ரன் வந்து போகிற காட்சிகள் சிலருக்கு ‘ஸ்வீட்’ சிலருக்கு ‘..ட்’.
இது போக ‘புல்லி.. புல்லி..’ பின்னணி இசையோடு சம்பந்தமே இல்லாமல் டார்கே நாகராஜ் வந்து போகிறார். அந்த இடத்தில் தியேட்டரே அதிர்கிறது.
சீனியர் கலைஞர்களான பிரபு, டினு ஆனந்த் எல்லாம் ‘அவர் யாரு தெரியுமா’ என்று அஜித் பாத்திரத்தைப் புகழ்கிற வசனங்களையே பேசுவதால் பிரசன்னா, சுனில் எல்லாம் ‘சும்மா’ வந்துபோவதைப் பொருட்படுத்தத் தேவையற்றுப் போகிறது.
என்ன, இந்தப் படத்தில் நடித்த அனைவருமே கொஞ்சம் ‘ஸ்டைலாக’ வந்து போயிருக்கின்றனர். அது மட்டுமே ஆறுதல் தருகிறது.
‘குட் பேட் அக்லியில அஜித்துக்கு மூணு கேரக்டராம்.. அதனாலதான் இந்தப் போஸ்டராம்..’ என்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தபோது ஒரு பேச்சு எழுந்தது.
அதனால், ‘தரை லெவல் மாஸ் படம்’ எனும்படியாக ஒரு அனுபவம் இதில் ஆதிக் மூலமாகக் கிடைக்கக் கூடும் என்று தோன்றியது.
மங்காத்தா, பில்லா, வில்லன் போன்ற படங்கள் அப்படியொரு அனுபவத்தையே நமக்குத் தந்திருக்கின்றன. மாறாக, அவர் நடித்த மோசமான படங்களும் கூட, அவை வெளியாவதற்கு முன்னர் அப்படியொரு எதிர்பார்ப்பையே நமக்குள் உருவாக்கின.
அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போய், ‘படு கமர்ஷியல் படம்’ என்ற போர்வையில் அரதப்பழசான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்த காரணத்தாலேயே அவை ‘மோசமான படங்கள் என்ற பெயரைப் பெற்றன. என்னைப் பொறுத்தவரை, அந்த வரிசையில் இடம்பெறத்தக்க ஒரு படம் தான் ‘குட் பேட் அக்லி’.
ஆதிக் ரவிச்சந்திரன் மனதில் நினைத்த சித்திரத்தில் பாதியளவு கூட திரையில் இடம்பெறவில்லையோ என்று நினைக்க வைக்கிற ஒரு படம். இதைவிட அவரது ‘பஹீரா’ நல்லதொரு அனுபவத்தைத் தந்தது.
சரி, இந்தப் படத்தைச் சில அஜித் ரசிகர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? படம் முழுக்க அவர்கள் ரசிக்கும்படி அஜித் வந்து போயிருக்கிறார்.
அப்படிப்பட்ட ரசிகர்கள் கொண்டாடுகிற வகையில், படத்தில் ஆதிக் சில ‘ஃபேன்பாய்’ மொமண்ட்களை தந்திருக்கிறார். அதனால், ‘இது ஆதிக் சம்பவம்’ என்று அவர்கள் புகழ்கின்றனர்.
ஆனால், நமக்குத் தெரிவதென்னவோ காட்சிகள் முழுக்க அஜித்தின் ‘ஆதிக்’கம் தான். கூடவே, ஆதிக்கின் ‘சவுண்ட் பார்முலா’வும் இதில் நிறைந்திருக்கிறது (காது கிழிகிற அளவுக்குப் பயங்கர சத்தத்துடன் பின்னணி இசை முழங்க, திரையில் பரபரவென்று காட்சிகள் நகர்வது போன்ற தோற்றத்தைத் தரவல்லது இந்த ‘சவுண்ட் பார்முலா’). அது குறிப்பிட்ட ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது.
சிலருக்கு அது ‘கேலி’களை உருவாக்கும் அளவுக்கான அனுபவத்தைத் தருகிறது.
மிகச்சிலருக்கு ‘ஏன் இந்தப் படத்துல அஜித் நடித்தார்’ எனும்படியான கேள்விகளைத் தருகிறது. என்னருகே உட்கார்ந்து படம் பார்த்த ரசிகர் அப்படிப்பட்டவர் தான்.
அவர் எத்தனையாவது முறையாக இதனைப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான காட்சிகளில் தலையைக் குனிந்தவாறு வசனங்களைக் கேட்டு ‘ரியாக்ட்’ செய்து கொண்டிருந்தார். படம் முடிந்து ‘ரோலிங் டைட்டில்’ வந்தபோது, மிகுந்த ஏமாற்றத்துடன் எழுந்தார்.
என்னைப் பொறுத்தவரை அது போன்ற பார்வையாளர்கள் தான் அஜித்தின் உண்மையான, தீவிரமான ரசிகர்கள். இந்த ரெஃபரன்ஸ் ‘ஆதிக்’கம் ஏதுமின்றி நல்லதொரு கதையில் சிறப்பான வகையில் அஜித் திரையில் வெளிப்படுவது மட்டுமே, அந்த ரசிகர்களுக்கு மன நிறைவைத் தரும்.
அஜித் படம் எத்தனை கோடி வசூல் என்றறிவதில் எவ்வித ஆர்வமும் காட்டாத அந்த ரசிகர்களுக்காக, அடுத்தடுத்த படங்களிலாவது சிறப்பான உள்ளடக்கத்தைத் தர அஜித்தும் அவரது படங்களை இயக்கும் இயக்குநர்களும் மெனக்கெடுவார்களா?
-உதயசங்கரன் பாடகலிங்கம்