விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்களின் கதைகள் இப்படித்தான் இருக்குமென்ற முடிவுக்கு ரசிகர்கள் உடனடியாக வந்துவிட முடியும். காரணம், கடந்த சில ஆண்டுகளாக இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இத்யாதி மொழிகளில் வெளிவந்த ’ஸ்போர்ட்ஸ்’ வகைமை திரைப்படங்கள் குறிப்பிட்ட ‘பார்முலா’வில் தோற்றமளித்தது தான். பெரும்பாலும் ‘தோற்றவன் ஜெயிப்பான்’ என்பதுதான் அவற்றின் கிளைமேக்ஸாக இருக்கும். அதனால், அப்படங்களில் உள்ள ‘க்ளிஷே’வான விஷயங்களை விசிறியெறிந்துவிட்டு ’வித்தியாசமாக’ கதை சொல்லுவதென்பது கொஞ்சம் கடினமான விஷயம்.
சித்திரை நன்னாளையொட்டி தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படமான ‘ஆலப்புழா ஜிம்கானா’, அந்த வகையில் நமக்கு வித்தியாசமான திரையனுபவத்தைத் தருகிறதா அல்லது வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ்’ படமாக இருக்கிறதா?
’ஆ.ஜி’ கதை!
‘பில்டிங் ஸ்ட்ராங்கா இருந்தா போதுமா பேஸ்மெண்ட் வீக்கா இருக்கக் கூடாதுல்ல’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சரி, இந்தப் படத்தில் கதை என்ற வஸ்து எந்த அளவுக்கு இருக்கிறது?
பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுற்ற இளையோர் கும்பலொன்று பாடங்களில் தேர்ச்சி பெற்று நல்லதொரு கல்லூரியில் இடம்பிடிக்க முடிவெடுக்கிறது. அதற்கு ஏதேனும் ஒரு விளையாட்டில் சாதித்தால் நன்றாக இருக்குமென்று யோசிக்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, குத்துச்சண்டையில் சகாக்களோடு களமிறங்கலாம் என்று அந்த கும்பலில் இருக்கும் ஒரு இளைஞர் முடிவு செய்கிறார். அதற்காக, அந்த வட்டாரத்தில் இருக்கும் ஒரு குத்துச்சண்டை கிளப்பில் அவர்கள் அனைவரும் சேர்கின்றனர்.
’தரையில் விழுந்த லட்டு’ போல, அதில் சிலர் குத்துச்சண்டை பயிற்சிகளின்போது தெறித்து ஓடுகின்றனர். தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் வென்ற ஒரு வீரர் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க முன்வருகிறார். அவரிடத்தில் அவர்கள் படாத ‘பாடு’ படுகின்றனர். அதன் பலன் அதற்கடுத்த சில நாட்களில் தெரிய வருகிறது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று அந்த இளையோர் கூட்டம் வெற்றி பெறுகிறது. அதன்பிறகு, அவர்கள் அனைவரும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
‘வெறுமனே உடல் வலு மட்டுமல்லாமல் ‘நுட்பத்தோடும்’ குத்துச்சண்டையை அணுக வேண்டும்’ என்பது அப்போது அவர்களுக்குப் புரிய வருகிறது. அதற்குள், அவர்களில் பலர் போட்டிகளில் மண்ணைக் கவ்வுகின்றனர்.
இறுதியில், தாங்கள் சார்ந்த கிளப்புக்காக அவர்கள் கோப்பையை வென்றார்களா, இல்லையா என்று சொல்கிறது ‘ஆலப்புழா ஜிம்கானா’வின் மீதி.
அசத்தும் ‘காட்சியாக்கம்’!
’பிரேமலு’ படத்துக்குப் பிறகு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றாலும் கூட, இதர நடிகர் நடிகையரோடு திரையில் தனது இருப்பைப் பகிர்ந்து கொள்கிற ஒரு பாத்திரத்தை இதில் பெற்றிருக்கிறார் நஸ்லென். குத்துச்சண்டைக்குள் தனது சகாக்களைத் தள்ளுகிற வேடத்தை ஏற்றிருக்கிறார். ‘ஹீரோயிசம்’ காட்டுகிற இடங்களை ‘காமெடி’ ஆக்குகிற வித்தை இவருக்கு எளிதில் கைவருகிறது. எதிர்காலத்திலும் இதனை அவர் தொடர வேண்டும்.
லுக்மென் ஆவரன் இப்படத்தில் பயிற்சியாளராக வருகிறார். இறுகிய முகமும் பெரிதாக உணர்வுகள் வெளிப்படாத உடல்மொழியுமாக வந்து போயிருக்கிறார்.
நாயகனின் சகாக்களாக வரும் பிராங்கோ பிரான்சிஸ், ஹபீஷ் ரஹ்மான், சிவா ஹரிஹரன் அனைவருமே ‘சென்னை 600028’ படத்தில் வரும் நாயகர்களை நினைவூட்டுகின்றனர். அவர்களில் ஒருவராக வரும் சந்தீப் பிரதீப் ‘ஹீரோயிசம்’ காட்டுகிற இடம் தியேட்டரில் கைத்தட்டல்களை அள்ளுகிறது.
இது போக, அவர்களோடு இணையும் இதர வீரர்களாக ஷோன் ஜாய், கார்த்திக் மற்றும் கணபதி பொதுவால் ஆகியோர் வருகின்றனர். மூவருக்குமே முக்கியத்துவமுள்ள காட்சிகள் உண்டு என்றபோதும், அவர்களில் கணபதி முன்னணியில் நிற்கிறார்.
இவர்களோடு அனகா மாயா ரவி, நந்தா நிஷாந்த், நோயா பிரான்சி என்று மூன்று இளம் நாயகிகளும் இதில் வந்து போயிருக்கின்றனர். மூவருக்குமே அதிகபட்சம் நான்கைந்து காட்சிகள் கூட இருக்காது. ஆனாலும், அவர்களது இருப்பு நினைவில் படியும் படியாக அமைந்திருக்கிறது இயக்குனர் காலித் ரஹ்மான் மற்றும் ஸ்ரீனி சசீந்திரனின் திரைக்கதை வசனம்.
நித்யா மேனன், பார்வதி திருவோத்துவை நினைவூட்டுகிற முகமும் நடிப்பும் நோயாவிடம் தெரிகிறது. எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் அமைந்தால் இன்னொரு ‘நடிப்பு ராட்சசி’யை நாம் காணக்கூடும்.
உடனே, மற்ற இருவரது நடிப்பு ‘சுமார்’ என்று நினைத்திடக் கூடாது. அவர்களும் தங்களது பாத்திரங்களை அடிக்கோடிடுவது போன்ற நடிப்பையே தந்திருக்கின்றனர்.
இது போக கோட்டயம் நசீர், ஷைன் டாம் சாகோ போன்று சில சீனியர் கலைஞர்களும் கூட இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
இப்படத்தின் காட்சியாக்கம் ‘ப்ரெஷ்’ஷாக தெரிவதில் முக்கியப் பங்காற்றியிருப்பது ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு. காட்சிகள் நிகழும் இடங்களில் நாமும் இருப்பதாக உணர வைத்திருப்பது அதன் சிறப்பு.
இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் தியேட்டருக்கு வந்தவர்களின் உற்சாகம் துளி கூடக் கீழிறங்கிவிடக் கூடாது என்பதில் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.
இதில் வரும் பாடல்கள் காட்சிகளின் பின்னணியிலேயே ஒலிக்கின்றன. குத்துச்சண்டை போட்டிகள், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள், வீரர்களின் பயிற்சிகள் போன்றவை அதன் உள்ளடக்கமாக இருக்கின்றன.
தியேட்டரில் இருக்கையில் கொஞ்சம் கூடப் பின்னால் சாய்ந்திடக் கூடாது எனும்படியாக இருக்கிறது அவரது பின்னணி இசை.
இது போக ஆஷிக்கின் கலை வடிவமைப்பு, விஷ்ணு கோவிந்தின் ஆடியோகிராபி, மஷார் ஹம்சாவின் ஆடை வடிவமைப்பு, ஜோபில் லால் மற்றும் கலை கிங்ஸனின் சண்டைக்காட்சிகள், அவற்றோடு சிறப்பான விஎஃப்எக்ஸ் என்று இப்படத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ’செம’ ரகம்.
இந்த படத்தில் குறைகள் இருக்கிறதா என்று கேட்டால், அவற்றைக் கவனிக்க நமக்கு நேரம் வாய்ப்பதில்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இதில் லாஜிக் மீறல்கள் நிறையவே நாம் கண்டுபிடிக்க முடியும்.
அதையும் தாண்டி நாம் படத்தோடு கலக்கக் காரணம், காலித் ரஹ்மான் இப்படத்தை உருவாக்கியிருக்கும் விதம்.
வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ்’ வகைமை படங்களுக்கென்று இருக்கும் ‘பார்முலா’வை உடைக்க வேண்டுமென்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார். அது இப்படத்தின் பின்பாதியில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சிலருக்கு அது ஏற்புடையதாக இல்லாமலும் போகலாம். அதுவே இப்படத்தின் பலவீனம்.
அதேநேரத்தில், எந்தவித எண்ணங்களுக்கும் இடம்தராமல் குறிக்கோளில் கவனம் செலுத்தினால் மற்றனைத்தும் தானாக தேடி வரும் என்கிற நீதி இத்திரைக்கதையில் ஒளிந்திருக்கிறது. கூடவே, ‘என் பிள்ளை எதுக்குமே லாயக்கில்லைங்க’ என்று கவலையில் ஆழ்கிற பெற்றோர்களை ஆறுதல்படுத்தும்விதமாக, ஏதோ ஒரு கணத்தில் அவர்களது ‘ப்ளஸ்’களை அவர்களே கண்டறிவார்கள் அல்லது உடனிருப்பவர்கள் அதனைத் தெரியப்படுத்துவார்கள் என்கிறது இப்படம்.
இந்தப் படத்தில் ‘அருமையான’ காதல் ‘ட்ராக்’ ஒன்று இருக்கிறது. படம் முடிந்தபிறகே நமக்கு அது பிடிபடும்.
இறுதியாக, ‘லெட்ஸ் பிகின்’ என்ற வசனத்தோடு படம் முடிவடைகிறது. இது போன்ற முரணான விஷயங்களைக் கொண்ட உள்ளடக்கமும், வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ்’ படங்களில் கிடைக்காத திரையனுபவமும் இதில் முன்வைக்கப்படுகின்றன. அதனைத் தேர்ந்தெடுப்பதா வேண்டாமா என்ற விருப்பத்தை நமக்கே விட்டுவிடுகிறார் இயக்குனர் காலித் ரஹ்மான். அதுவே ‘ஆலப்புழா ஜிம்கானா’வின் சிறப்புகளில் தலையாயது!
– உதயசங்கரன் பாடகலிங்கம்