ஒலிம்பிக்கில் நடந்த கிரிக்கெட் போட்டி!

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் என்பது இந்திய விளையாட்டு ரசிகர்களின் நீண்டநாள் ஆசை. அந்த ஆசை இப்போது நிறைவேறப் போகிறது.

2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடக்கப்போகும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2028-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தலா 15 வீரர்களைக் கொண்ட 6 அணிகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டின் சுருங்கிய வடிவான டி20 முறையில் இந்தப் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறப் போகிறது.

இதற்கு முன்னதாக 1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருந்தது பலருக்கும் தெரியாத விஷயம். அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்தும், தற்போது கிரிக்கெட்டில் அதிகம் ஈடுபாடு காட்டாத பிரான்சும் மட்டுமே மோதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும் இதில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த 2 அணிகளும் கழன்றுகொண்டன.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி கலந்துகொண்டாலும், அதன் முன்னணி டெஸ்ட் வீரர்கள் யாரும் அணியில் இடம்பெறவில்லை.

மாறாக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவந்த வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து அணி உருவாக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில், இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி 1900-ம் ஆண்டு, ஆகஸ்ட் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்துள்ளன.

இத்தனைக்கும் முழுத் தகுதியுள்ள கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டியை நடத்தாமல், சைக்கிள் பந்தயங்களை நடத்தும் மைதானத்தில் இந்தப் போட்டியை நடத்தியுள்ளனர்.

தற்போது உள்ளதைப் போல் 11 வீரர்களைக் கொண்ட அணிகளாக இல்லாமல், 12 வீரர்களைக் கொண்ட அணிகளாக இங்கிலாந்தும், பிரான்சும் களத்தில் குதித்துள்ளன.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 117 ரன்களையும், பிரான்ஸ் 78 ரன்களையும் குவித்துள்ளன.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என ஆட்டத்தை டிக்ளேர் செய்ய, அடுத்து ஆடிய பிரான்ஸ் 26 ரன்களில் மொத்தமாக சுருண்டுள்ளது.

மொத்தம் 366 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட இப்போட்டியில் இங்கிலாந்து அணி தங்கம் வென்றது. இப்படியாக ஒலிம்பிக்கில், கிரிக்கெட் போட்டியில் தங்கம் வென்ற முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.

– பிரணதி

Comments (0)
Add Comment