செய்தி:
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவிந்த் கமெண்ட்:
திமுகவின் கொள்கை ரீதியான தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த பிரகாஷ் காரத் 75 வயதான நிலையில் கட்சி விதிகளை மதித்து, அந்தக் கட்சியில் இருந்து அண்மையில் மதுரையில் நடந்த தேசிய மாநாட்டில் பங்கேற்ற நிலையில் மிகவும் மதிப்புடன் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.
ஒன்றிய ஆளும் கட்சியான பாஜகவின் கொள்கை மூளையான ஆர்.எஸ்.எஸ்-ன் விதிமுறைப்படியும் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையின் கீழ், எல்.கே.அத்வானி உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், 75 வயதை நெருங்கிவிட்ட பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு இன்னும் அந்த விதிமுறை பொருந்தவில்லை.
மாநிலத்திற்கு கொஞ்சம் வருவோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசியக் கட்சிகளின் கட்சிப் பணிக்கான வயது வரைமுறையெல்லாம் இங்கு பொருந்துவதில்லை. இது திமுக மற்றும் அண்மைக் காலத்திய பாமக வரை பல கட்சிகளுக்கும் பொருந்தும். தமிழகத்தில் ஏனோ அரசியலில் ஓய்வுபெறுவதற்கான வயது கராறாக நிர்ணயிக்கப்படுவதில்லை.
திமுகவைப் பொருத்தவரை அமைச்சரான துரைமுருகன் முதுமையினால் அடிக்கடி பேச்சில் தடுமாறுகிறார். அடிக்கடி உடல்நலமும் பாதித்து மீண்டு வந்திருக்கிறார். ஆனாலும் அவருக்குக் ‘கருணை’யுடன் ஓய்வு கொடுக்கப்படவில்லை.
இன்னொரு மூத்த அமைச்சரான பொன்முடி முதுமை காரணமாக பேச்சில் தடுமாறுகிறார்.
பேருந்தில் பெண்களை இலவசமாக பயணிக்கச் சொல்லிவிட்டு, அவர்களை “ஓசி டிக்கெட்” என ஒருமையுடன் அழைக்கிறார். சமீபத்திய மழை வெள்ளத்தை அவர் பார்வையிடப் போனபோது, ஏதோவொரு எதிர்வினையாக சேறு வீசப்பட்டது. அவருடைய பேச்சில் மட்டுமல்ல செயலிலும் நிறையவே தடுமாற்றங்கள்.
அண்மையில் வழக்கு ஒன்றில் அவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையிலும் முதுமையைக் காரணம் காட்டி, சிறைக்குச் செல்வதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அமைச்சரான பொன்முடி, அவ்வளவு முதுமையிலும் அமைச்சர் பதவியில் மட்டும் எப்படித் தொடர முடிகிறது?
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் மீது மிகுந்த கருணை கொண்டு, அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கி இருக்கிறார்.
இதேமாதிரியான விலக்கி வைக்கும் கருணையான பணி மற்றவர்கள் விஷயத்திலும் எல்லாத் துறைகளிலும் தொடர்ந்து நடக்குமா?
கழக உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பது கட்சியில் புது ரத்தம் பாய்ச்சப்படுவதைத் தான்.
– சாமானியன்