ஆங்கில நாடக மேதையான வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு அக்கல்ட் (Occult) என்ற அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் அவ்வளவு ஆர்வம், நம்பிக்கை இருந்திருக்கிறது.
ஷேக்ஸ்பியரின் நாடகமான ஹாம்லெட்டில், கதைத்தலைவன் ஹாம்லெட்டின் கொலை செய்யப்பட்ட தந்தை, ஆவியாக அந்த நாடகத்தில் வருவார்.
மேக்பத் நாடகத்தில் மன்னர் அளிக்கும் விருந்து ஒன்றில் பாங்குவோ என்பவரது ஆவி தோன்றும்.
இவை போக, டெம்பஸ்ட் (புயல்) என்ற ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் கூட ஏரியல் என்ற ஆவி வரும் போகும்.
ஆக, ஆவிகள் மீதும் அமானுட சக்திகள் மீதும் ஷேக்ஸ்பியருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.
ரோமியோ ஜூலியட் நாடகத்தில் ஒரு காட்சி. அதில், ரோமியோவின் நண்பன் மெர்குடியோவை, டைபால்ட் என்பவன் வாள்சண்டையில் கொன்றுவிடுவான்.
இந்த நிகழ்ச்சி நடந்த சற்றுநேரத்துக்குப்பிறகு டைபால்ட்டை பார்த்து ரோமியோ பேசும் வசனம்.
“வா டைபால்ட்! மெர்குடியோவின் ஆன்மா நம் இருவரின் தலைகளுக்கு சற்று மேலே இப்போது மிதந்து கொண்டிருக்கிறது” என்ற வசனம் அது.
உடல்விட்ட அனுபவம் எனப்படும் Out of Body Experience (OBE)யின்போது உடலை விட்டு வெளியே உலவும் ஆன்மா தரையை விட்டு சற்று உயரத்தில் மிதக்கும் என்பதை பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.
தெருவில் வாகன விபத்தில் சிக்கி உயிர் போகும் தறுவாயில் இருக்கும் ஒருவரது ஆன்மா அவரது உடலை விட்டு வெளிவந்து மின்கம்பம் அளவுக்கு உயரத்தில் மிதந்தபடி சொந்த உடலையே வேடிக்கை பார்த்த பல தகவல்கள் உள்ளன.
அதை உண்மையாக்குவது போல, “மெர்குடியோவின் ஆன்மா நம் இருவரின் தலைகளுக்கு சற்று மேலே இப்போது மிதந்து கொண்டிருக்கிறது” என்று ஷேக்ஸ்பியர் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.
இவை எல்லாவற்றையும் விட வியக்க வைக்கிற ஓர் இடம் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் உண்டு.
பன்னிரண்டாவது இரவு (Twelfth Night) நாடகத்தில், ‘காதலர் சந்திப்பில் பயணம் முடிகிறது’ என்று ஒரு வரி வரும். பார்க்க சாதுவாகத் தெரிந்தாலும் அது சாதுவான வசனம் அல்ல.
குறிப்பிட்ட சில பிறவிகளுக்குப் பிறகு மனிதனின் ஆன்மா இரண்டாகப் பிரிகிறது. அந்த இரட்டை ஆன்மா ஆணும், பெண்ணுமாக பூவுலகில் பிறந்து பிறகு காதலர்களாக மீண்டும் ஒன்று கூடுகிறது என்று ஒரு நம்பிக்கை உண்டு.
ஷேக்ஸ்பியரின் ‘காதலர் சந்திப்பில் பயணம் முடிகிறது’ என்று வரி அதைத்தான் கனகச்சிதமாகக் குறிப்பிடுகிறது.
‘பிரியாவிடை பெறுகிறேன். கடவுளுக்குத் தெரியும் நாம் மீண்டும் எப்போது சந்திக்க வேண்டும் என்று’ இது ஹாம்லெட் நாடகத்தின் இறுதியில் வரும் வசனம்.
இந்த வசனம் இறப்புக்குப் பிறகு வரும் மறுவுலக வாழ்வை குறிப்பதாகக் கருதப்பட்டதால் அந்த காலத்து ரசிகர்களால் மிகவும் வியப்புடன் பார்க்கப்பட்டிருக்கிறது.
ஆக, அக்கல்ட் (Occult) என்ற அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுட விடயங்களில் ஷேக்ஸ்பியருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.
– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு