சொற்கள் காலம் கடந்து நிற்பவை!

1883-ஆம் ஆண்டு பிறந்த கலீல் ஜிப்ரான் ஒரு லெபனானிய அமெரிக்கர். கவிதை, எழுத்து, ஓவியம், சிற்பம் மற்றும் தத்துவம் ஆகிய துறைகளில் புலமை பெற்று, பல்துறை வித்தகராக விளங்கினார்.

லெபனானின் பஷ்ரி நகரில் பிறந்து பின் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து கல்வியையும் கற்றார்.

அரபு, ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் தன்னுடைய படைப்புகளைக் கொடுத்தார். நவீன அரபு இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்.

இவரது புத்தகங்கள் விற்பனையில் மிகச்சிறந்த இடத்தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

கலீல் ஜிப்ரான் அவரது வாழ்க்கைப் பாடங்களில் இருந்து மக்களுக்காக அளித்த சொற்கொடைகள் சில:

நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்களை போகவிடுங்கள்; அவர்கள் திரும்பி வந்தால், எப்போதும் உங்களுக்குரியவர்கள்; திரும்பி வரவில்லையென்றால், ஒருபோதும் உங்களுக்குரியவரல்ல.

நட்பு எப்போதும் ஒரு இனிமையான பொறுப்பே தவிர, அது ஒருபோதும் வாய்ப்பு அல்ல.

உண்மைக்கு மட்டுமே பணிந்து செல்லுங்கள், அழகை மட்டுமே பின்பற்றுங்கள், அன்பிற்கு மட்டுமே கீழ்படியுங்கள்.

மனிதனின் கண்கள் மைக்ரோஸ்கோப் போன்றது, இந்த உலகை உண்மையைவிட பெரிதாகவே காட்டும்.

வாழ்க்கையின் இரண்டு தலைமைப் பரிசுகள், அழகும் உண்மையும். முதலாவது அன்பான இதயத்திலும், இரண்டாவது தொழிலாளியின் கையிலும் காணப்படுகிறது.

பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது.

அன்பு இல்லாத வாழ்க்கை என்பது, பூக்கள் அல்லது பழங்கள் இல்லாத மரத்தினைப் போன்றது.

நம்முடைய மகிழ்ச்சி மற்றும் துக்கம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கு முன்பாகவே நாம் அவற்றை தேர்வு செய்துவிடுகிறோம்.

உங்கள் இதயம் ஒரு எரிமலையென்றால், அதில் பூக்கள் பூக்கும் என்பதை நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?

நேற்று என்பது இன்றைய நினைவு மற்றும் நாளை என்பது இன்றைய கனவு.

இரண்டு தோட்டங்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள சுவர் போன்றது துன்பம்.

மனிதனுக்கு பெருமை, அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை. அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில் தான் உள்ளது!

இரண்டு பெண்கள் பேசிக்கொள்ளும்போது அதில் ஒன்றும் இருப்பதில்லை! ஆனால் ஒரு பெண் மட்டும் பேசும்போது அவள் வாழ்க்கை முழுவதும் வெளிப்படுகிறது.

பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்….! நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்…!

ஒரு தனி மரம், தன் சுய சரிதையை எழுதினால், அது கூட ஓர் இனத்தின் வரலாறு போலவே தெரியும்!

சொற்கள் காலம் கடந்து நிற்பவை…! அதைப் புரிந்துகொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும்!

உன் வாயில் உணவு நிறைந்திருக்கும்போது உன்னால் எப்படி பாட முடியும்? கையில் நிறையப் பணம் உள்ளபோது மற்றவர்களை வாழ்த்த எப்படிக் கைகளை உயர்த்த முடியும்….?

அநேக பெண்கள் ஆண்களின் இதயத்தைக் கடன் வாங்குகிறார்கள்….! ஒரு சிலரே அதைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்….

எந்த ஓர் ஆணும்…. இரு பெண்களை விரும்புகிறான்! ஒருத்தி அவன் கற்பனையின் படைப்பு…. மற்றவள் இன்னும் பிறக்கவில்லை!

பெண்களின் சிறிய தவறுகளை மன்னிக்காத ஆண்கள், அவர்களின் உயர்ந்த நற்பண்புகளை உணர மாட்டார்கள்.

நாம் எல்லோருமே சிறைக் கைதிகள் தான் – சிலர் சிறைக் கம்பிகளோடு…. சிலர் கம்பிகள் இல்லாமலேயே!

நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பை விட, நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில் தான் அதிகம் சுறுசுறுப்பைக் காட்டுகிறோம்.

மற்றவன் செய்த குற்றங்களைப் பெரிதுபடுத்துவதைவிட பெரிய குற்றம் ஏதுமில்லை!

பொறாமைப்படுபவனின் மௌனமே மிகவும் சப்தமானது.!

இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்!

நன்றி: இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment