உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும், அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘king maker‘ என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும், சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான இராம வீரப்பனின் குறித்த ஆவணப்படம் மிக பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் உள்ளிட்ட திரையுலகத்தின் முன்னணிப் பிரபலங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சிகளையும் சார்ந்த பல தன்னிகரற்ற அரசியல் தலைவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்று அவருடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து சிறப்பு செய்துள்ளனர்.
மேலும், ஒன்றிய அரசுக்கு செங்கோல் வழங்கிய தர்மபுரம் ஆதினம், மற்றும் காஞ்சிபுரம் மடத்தைச் சார்ந்த காஞ்சி பெரியவர் ஆகியோரும் இந்த ஆவணப்படத்தில் பங்கு கொண்டு ஆர்.எம்.வீயைப் போற்றியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது பல துறைகளைச் சார்ந்த வல்லுநர்களாகிய மூத்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், பத்மபூசன் விருது பெற்ற தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோரும், தமிழிலக்கியத் துறையைச் சார்ந்த கவிப்பேரரசு வைரமுத்து,
முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் ஆகியோரும் கலை, இலக்கிய கல்வித்துறையைச் சார்ந்த ஆன்றோர், சான்றோர் என அனைவரும் இந்த ஆவணப்படத்தில் பங்கேற்று சிறப்பு செய்துள்ளனர்.
திராவிட இயக்கங்களின் மகத்தான தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் இராம. வீரப்பன்.
எம்.ஜி.ஆர். என்னும் காலத்தில் அழியாத சிற்பத்தை செதுக்கியவர் இராம வீரப்பன்.
திராவிடம் மேலோங்க மாபெரும் பங்காற்றிய மட்டற்ற தலைவராகிய இவர் 5 முறை தமிழக அமைச்சராகவும் மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்
தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம்பிடித்த ஆளுமையான அருளாளர் இராம வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், உலகத்தரத்தில் ஒரு ஆவணப்படத்தை அவருக்காக சிறப்பாக தயாரித்து விரைவில் வெளியிட உள்ளது சத்யா மூவிஸ் நிறுவனம்.
இந்த ஆவணப்படத்தின் 8 நிமிட முன்னோட்டத்தை இராம வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று (ஏப்ரல்-9) சத்யா மூவிஸ் வெளியிட்டுள்ளது.
இந்த முன்னோட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இந்த ஆவணப்படம் காலத்தின் கட்டாயம்’ என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘he is a real king maker’ என மனம் உருகிப் பாராட்டியுள்ளார்.
அதில், பாட்ஷா பட விழாவில், தான் பேசியது குறித்தும், அதனால் ஆர்.எம். வீரப்பனின் அமைச்சர் பதவி பறிபோனது குறித்தும் பேசிய ரஜினிகாந்த்,
“எனக்கு நெருக்கமா, மரியாதையா அன்போட என் மேல அன்பைக் காட்டினவங்க நான்கு பேர். பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீ ஆகியோர். அவங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.
பாட்ஷா 100 நாள் விழாவில் ஆர்.எம்.வீ தயாரிப்பாளராக மேடையில் இருந்தார். அப்போது வெடிகுண்டு கலாசாரம் பற்றிப் பேசினேன்.
அவரை அமைச்சராக வைத்துக்கொண்டு நான் அதைப் பேசியிருக்கக் கூடாது. எனக்கு அப்போது அந்த அளவுக்குத் தெளிவு இல்லை.
“எப்படி நீங்க மேடையில் இருக்கும்போது, ரஜினி வெடிகுண்டு கலாசாரம் பற்றி அரசுக்கு எதிராகப் பேசும்போது நீங்க அமைதியா இருக்க முடியும்” என்று கேட்டு, அவரை அமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கிவிட்டார்.
அது தெரிஞ்சதும் எனக்கு ஆடிப்போச்சு. என்னாலதான் இப்படி ஆகிடுச்சுனு இரவு எனக்கு தூக்கமே வரல. போன் செய்தேன், யாரும் எடுக்கல.
காலைல போன் எடுக்கும்போது, “என்ன மன்னிச்சிடுங்க சார், என்னாலதான் ஆச்சு” என்று சொல்லும்போது, ஒன்றுமே நடக்காதது மாதிரி, “விடுங்க அதையெல்லாம் நெனச்சு வருத்தப்படாதிங்க.
நீங்க அத மனசுல வச்சிக்க வேண்டாம். சந்தோஷமா இருங்க. ஷூட்டிங் எங்க?” என்று சாதாரணமாக கேட்டாரு. ஆனா, எனக்கு அந்தத் தழும்பு போகல, எப்பவும் போகாது.
அன்னைக்கு (பாட்ஷா 100 நாள் விழா), நான்தான் கடைசியா பேசுனேன். கடைசியா பேசும்போது எப்படி மைக் புடிச்சு அவர் பேச முடியும்.
சிஎம் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேசுறதுக்குச் சில காரணங்கள் இருந்தாலும்கூட, இந்தக் காரணம் ரொம்ப முக்கியமானது.
அதுக்கப்புறம், நான் இதப் பத்தி பேசட்டுமானு அவர்கிட்ட சொல்லும்போது,
“அவங்க அவ்ளோ சீக்கிரம் மாத்திக்க மாட்டாங்க. நீங்க பேசி உங்க மரியாதைய இழக்க வேண்டாம்.
அப்படி நீங்க சொல்லி, நான் அங்க போய்ச்சேர வேண்டிய அவசியமும் இல்ல. நீங்க விட்டுடுங்க” என்று சொன்னாரு.
அந்த மாதிரி பெரிய மனிதர் அவர். உண்மையான கிங் மேக்கர்” என்று பேசியிருக்கிறார்.
இந்த முன்னோட்டத்தை சத்யா மூவிஸ் யூ டியூப் (youtube.com/sathyamoviesonline) மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.