எஸ்.பி.முத்துராமன் 90 – கௌரவிக்குமா தமிழ் திரையுலகம்?

தமிழ் திரையுலகம் எத்தனையோ வெற்றிகரமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், இதர தொழில்நுட்பக் கலைஞர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், அவர்களில் எவரெல்லாம் ‘சினிமா’ மீது பிரியத்தையும் பாசத்தையும் குழைத்து தங்கள் உழைப்பின் வழியே வெளிக்காட்டினார்களோ, அவர்களை மட்டுமே தமிழ் சினிமா தன்னருகே தக்க வைத்திருக்கிறது. மிக அரிதான, மிகச் சிறிதான அந்தப் பட்டியலில் இடம்பெறுகிற திரையாளுமைகளில் ஒருவர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

படிப்படியான கற்றல்!

காரைக்குடியில் பிறந்து வளர்ந்த ராஜாராம் மோகன் எனும் முத்துராமன், தென்றல் பத்திரிகையில் ஆபீஸ் பாய் ஆக வேலைக்குச் சேர்ந்து பின்னர் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதெல்லாம் நாம் அறிந்த கதைதான்.

அதன்பிறகு ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள கதை இலாகாவில் சேர அவர் விரும்பியிருக்கிறார். அதில் நன்றாகப் பயிற்சி பெற்று ஒரு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராக வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்திருக்கிறது.

அதற்கு மாறாக, ‘எஸ்.பி.முத்துராமனை எடிட்டிங் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைங்க’ என்று ஸ்டூடியோ நிர்வாகிகளிடம் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் உத்தரவிட, அந்த ஆசை ‘பணால்’ ஆனது. ஆனால், ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது போல படத்தொகுப்பு மேஜையில் இருக்கும் நுட்பங்கள் அவருக்குத் தெரிய வந்தன.

அதேநேரத்தில், படப்பிடிப்பில் நிகழ்கிற தவறுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்? அவை எப்படி படத்தொகுப்பின் போது சரி செய்யப்படும் என்பதைக் கற்றுக்கொள்ள வைத்தது.

அதனால், படப்பிடிப்பு தளத்திற்குச் செல்லாமலேயே அங்கு தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள் என்னென்ன என்று அறிந்து கொண்டார் எஸ்.பி.முத்துராமன். பின்னாட்களில் அவர் உதவி இயக்குனராகப் பணியாற்ற அது உதவியதாக இருந்திருக்கிறது. குறுகிய காலத்தில் இயக்குனராக மாறவும் வித்திட்டிருக்கிறது.

இருபதுகளில் ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு வந்த எஸ்.பி.எம்., சுமார் பதினேழு, பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே இயக்குனர் ஆனார். அதுவரை கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், யோகானந்த், புட்டண்ண கனகல், கிருஷ்ணன் நாயர், ஏ.சி.திருலோகச்சந்தர் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். ஏவிஎம் நிறுவனம் சார்பில் பணியாற்றியதால், தயாரிப்பு நிர்வாகிக்கான ஞானமும் கூட அவருக்கு அத்துப்படி.

அந்த விரிவான கற்றல் தான் அவரை வெவ்வேறுபட்ட பட்ஜெட்டில், வெவ்வேறு வகைமையிலான திரைப்படங்களைத் திறம்பட உருவாக்கத் துணை நின்றது.

விதவிதமான படங்கள்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 72 படங்களை இயக்கியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். ’ப்ரியா’வை அவர் தமிழிலும் கன்னடத்திலும் ஒருசேர இயக்கியிருக்கிறார். தெலுங்கில் ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘குரு சிஷ்யன்’ ரீமேக் தவிர்த்து ‘ஜீவன சதரங்கம்’ எனும் படத்தை மட்டுமே இயக்கியிருக்கிறார். அதுவும் ரீமேக்தானா என்று தெரியவில்லை.

மற்றபடி தமிழில் அவர் தந்த படங்கள் அனைத்துமே வெவ்வேறுவிதமான திரையனுபவத்தைத் தந்தவை.

ஏவிஎம் போன்ற தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள இயக்குனர்கள், பெரும்பாலும் கதாசிரியர்களிடம் இருந்து கதைகளை வாங்கிப் படமாக ஆக்குவார்கள். அந்த வழக்கத்தைத் தொடக்கம் முதலே பின்பற்றியவர் எஸ்.பி.எம். அப்படித்தான் அவரது முதல் படமான ‘கனிமுத்து பாப்பா’ அமைந்தது.

தொடர்ந்து பெத்த மனம் பித்து, காசி யாத்திரை, தெய்வ குழந்தைகள், எங்கம்மா சபதம், அன்புதங்கை என்று அடுத்தடுத்த படங்களை இயக்கினார்.

எஸ்.பி.எம்மால் ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ மாதிரியான நகைச்சுவை படங்களையும் தர முடியும். ‘மயங்குகிறாள் ஒரு மாது’ மாதிரியான பெண்களை மையப்படுத்திய கதையையோ, ‘துணிவே துணை’ மாதிரியான ஆக்‌ஷன் த்ரில்லர் கதையையோ, ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ மாதிரியான இளமை துள்ளுகிற கதையையோ, பொருத்தமான வகையில் திரையில் தர முடியும். தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும் அவர்கள் சந்திக்கிற அனுபவங்களையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர்களால் மட்டுமே அது போன்ற கதை சொல்லைச் சாத்தியப்படுத்த முடியும். அது எஸ்.பி.முத்துராமனுக்கு இயல்பிலேயே இருந்தது.

அவரால் அப்போதைய இளைய தலைமுறையான ரஜினி, கமல் உடனும் பணியாற்ற முடிந்தது. விஜயகுமார், சிவகுமார், விஜயனோடு சிவாஜி கணேசன், முத்துராமன் போன்ற முந்தைய தலைமுறை ஜாம்பவான்களோடும் கைகோர்க்க முடிந்திருக்கிறது. ஒரு திரைப்படத்தைக் காண வரும் ரசிகர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்ற புரிதல் இருந்ததால் மட்டுமே அதனைச் செய்ய முடிந்திருக்கிறது.

ரஜினிகாந்தை நாயகனாகக் கொண்டு 25 திரைப்படங்கள் தந்திருக்கிறார் எஸ்.பி.எம். ’புவனா ஒரு கேள்விக்குறி’யில் தொடங்கிய அந்த பந்தம் ‘பாண்டியன்’ வரை தொடர்ந்திருக்கிறது. பிறகு ‘சிவாஜி’யிலும் எஸ்.பி.எம். தனது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வரை தந்த கையோடு ‘முரட்டுக்காளை’ மூலமாக ரஜினியை முன்வரிசைக்கு நகர்த்தியதும் இவரே. 1981-ல் மட்டும் ‘கழுகு’, ‘நெற்றிக்கண்’, ‘ராணுவ வீரன்’ என்று மூன்று ஆக்‌ஷன் படங்கள் தந்திருக்கிறார். அவற்றில் ‘நெற்றிக்கண்’ இப்போதும் நம்மைச் சுண்டியிழுக்கும்.

விசு இயக்கிய பல வெற்றிகரமான குடும்பப்படங்களுக்கு ‘பார்முலா’ அமைத்து தந்த ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தை இயக்கியதும் இவரே.

நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்திரர், குருசிஷ்யன் என்று ரஜினியை வெவ்வேறு பரிமாணங்களில் திரையில் காட்டியதும் இவரே.

போலவே, கமல்ஹாசனை நாயகனாகக் கொண்டு ’சகலகலா வல்லவன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘எனக்குள் ஒருவன்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’ படங்களைத் தந்ததும் இவரே. அப்படங்கள் கமலைக் கடைக்கோடி ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கச் செய்தன.

’கமர்ஷியல் சினிமா கிங்’ என்று சொல்கிற அளவுக்குத் தான் இயக்கியவற்றில் பெரும்பாலானவற்றை வெற்றிப்படங்களாகத் தந்தவர் எஸ்.பி.எம். அதுவும் திரையுலகமே திரும்பிப் பார்க்கிற வெற்றிகள். அந்த சாதனையை முறியடிப்பதற்கு இன்றைய இயக்குனர்கள் பெரும் உழைப்பைப் பல காலம் தொடர்ச்சியாகக் கொட்டியாக வேண்டும்.

ஓய்விலும் உழைப்பு!

இயக்குனராகப் பணியாற்றத் தொடங்கிய காலகட்டத்தில், ஆண்டுக்கு இரண்டு முதல் ஐந்து படங்களை இயக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் எஸ்.பி.முத்துராமன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஒரு திரைப்படம் வீதம் தொடர்ந்து உழைத்தவாறு இருந்திருக்கிறார்.

ஒரு படத்தின் கதை விவாதம், பாடல்களுக்கான இசை மற்றும் அரங்க அமைப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு வேலைகள், இறுதியாக பின்தயாரிப்பு பணிகள் முடிந்து  தியேட்டருக்கு திரைப்படம் வரும் வரை தொடர்ந்து வேலை செய்தாக வேண்டிய சூழல். 1972 முதல் 1992-ம் ஆண்டு வரை ஓய்வின்றி அதனைச் செய்திருக்கிறார் எஸ்.பி.எம்.

எழுபதுகளில் இந்த வாய்ப்புகளைப் பெற்றபோது, அவரது வயது நாற்பதைத் தொட்டிருந்தது. ‘இது போதும்’ என்று சின்னத்திரை நோக்கி நகர்ந்தபோது, அவரது வயது அறுபதைக் கடந்திருந்தது.

எஸ்.பி.எம். கடைசியாக இயக்கிய திரைப்படம் ‘தொட்டில் குழந்தை’. அதற்கு முன்னதாக, தனது படப்பிடிப்பு யூனிட்டில் தொடர்ந்து பணியாற்றியவர்களுக்குப் பலன் தரும் வகையில் அவர் தயாரித்து இயக்கிய படம் ‘பாண்டியன்’. இந்த படம் வெளியாகும் முன்னர், அவரது மனைவி கமலா மறைந்துவிட்டார்.

அதன்பிறகான நாட்களில், தான் பேசுகிற மேடைகளில் மனைவியின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு வந்தார் எஸ்.பி.எம். ’சினிமாவே உலகம் என்றிருந்ததால் மனைவி, குடும்பத்தின் அருமையை உணராமல் தவறவிட்டதாக’ வருத்தப்பட்டிருந்தார்.

தொண்ணூறுகளின் பிற்பாதியில் ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு என்று தனி அலுவலக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கொண்டு, ஏவிஎம் நிறுவனத்தில் சீரியல் பணிகளை அவர் மேற்பார்வையிட்டு வந்தார்.

அந்த நாட்களில் தினமும் பத்து மணிக்கு முன்னதாக அலுவலகம் வருபவர், மதிய உணவுக்குப் பிறகு சிறிதாக ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் ஆறு மணி வரை வேலைகள் சரியாக நடக்கிறதா என்று பார்த்துவிட்டு வருவார்.

அப்படியொரு நாளில், அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். ‘தினமலர்’ வாராந்திர இதழில் வந்த ஒரு தொடருக்காக பேட்டி கண்டிருக்கிறேன்.

அந்த வயதிலும் சோர்வு சிறிதுமில்லாமல் தனது வாழ்வை நினைவுகூர்ந்தார். இந்த சம்பவம் 2005 வாக்கில் நிகழ்ந்தது.

தான் தந்த வெற்றிப்படங்கள் குறித்த பெருமிதத்தையோ, அதற்குச் சம்பந்தம் சிறிதுமில்லாத அவரது பொருளாதார நிலை குறித்த வருத்தத்தையோ, அவரிடத்தில் காணவே இல்லை. ’எனது பார்வை அதுவல்ல’ என்பது போலத் தனக்கான தேவைகளைப் பூர்த்தி செய்த திருப்தி அவரிடத்தில் இருந்தது.

அதன்பிறகு ஊடகங்களில் அவர் பங்கேற்கிற வீடியோக்களை பார்க்கிறபோதும் அது மட்டுமே முதலில் தென்படும். அது அவரது குணாதிசயம். அந்த கணங்களில், பாராட்டுகளை எதிர்பார்க்கிற பாங்கும் அவரிடத்தில் துளி கூடத் தென்படாது. இது போல, அவரிடத்தில் பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள் ஏராளம்.

கடந்த ஏப்ரல் 7-ம் தேதியன்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். இந்த வயதிலும் தனது நினைவுகளை அசை போடத்தக்க வாழ்வைக் கொண்டிருக்கிரார்.

எஸ்.பி.எம்மின் படைப்புகளை நினைவுகூர்வதும், அதில் அவர் எதிர்கொண்ட அனுபவங்களை அவர் மூலமாகவோ அல்லது அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் மூலமாகவோ கேட்டறிந்து ஆவணப்படுத்த வேண்டியதும் திரையுலகினரின் கடமை. அவை திரைப்படங்களை உருவாக்க மட்டுமல்லாமல் சாதாரண மனிதர்களின் வாழ்வைப் பண்படுத்தவும் நிச்சயம் உதவும்.

குறைந்தபட்சமாக, எஸ்.பி.முத்துராமனைக் கௌரவித்து ஒரு பாராட்டு விழாவையாவது நடத்தியாக வேண்டும். அதற்குத் தயாராகுமா திரையுலகம்?!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment