வானகத்தில் நடைபெற்ற நம்மாழ்வார் விருதுகள் வழங்கும் விழா!

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 87 ஆவது பிறந்தநாளையொட்டி, வானகம் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அவரது நினைவாக விருது வழங்கும் விழா நடைபெற்றது.

நம்மாழ்வாரின் நெருங்கிய நண்பரும் 50 ஆண்டு காலம் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவருமான, திரு. வெள்ளைச்சாமி அவர்களோடு இணைந்து நம்மாழ்வாரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைதது.

அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நம்மாழ்வார் விருது, மரபு சார் கால்நடை மருத்துவ சாதனை படைத்த கால்நடை மருத்துவர் திரு. காசி பிச்சை அவர்களுக்கும்,

டங்ஸ்டனுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய சகோதரர் இளங்கோ கல்லாணை அவர்களுக்கும்,

இயற்கை வேளாண்மையில் சாதனை படைத்த திரு பெரியசாமி அவர்களுக்கும் கல்வியாளர் திரு பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

தனது எண்பதாவது வயதிலும் தனக்கும் நம்மாழ்வருக்கும் ஏற்பட்ட உறவு குறித்தும், பெரியாரிய பொதுவுடைமை சித்தாந்தங்களின் அடிப்படையில் நடைபெற்ற விவாதங்கள் குறித்தும், இன்றைய சூழலின் எதார்த்த நிலைகள் குறித்தும் சமூக அக்கறையோடு பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கல்விக்காக நம்மாழ்வாரின் பெயரிலான விருதினைப் பெற்ற கல்வியாளர், அன்பு நண்பர், தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களை கௌரவித்து, சிறப்பு செய்தது மகிழ்ச்சி.

இந்த விழாவில் உயிரியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் பணி நிறைவு முனைவர் திரு. குமார் உதயகுமார், சமூக செயற்பாட்டாளர் திரு தங்கப்பாண்டியன் மற்றும் துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள், நம்மாழ்வார் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்கள் என திரளானோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஏங்கல்ஸ் ராஜா வரவேற்புரை வழங்க,  குமரன் சிறப்புரையாற்ற, சிறப்புப் பேச்சாளராக கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து, நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர், மாணவிகளுக்கான சிறப்புப் பேச்சுப் போட்டி நடந்தது. சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட  தலைப்புகளில் மாணவிகள் சிறப்பாகப் பேசினர். தொடர்ந்து, அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் திரு பொன்னுசாமிக்கு மரியாதை செய்யப்பட்டது. 

அடுத்து வானகம் ஆண்டறிக்கையைப் பொருளாளர் திரு ரமேஷ்  வழங்கினார். தற்போது வானகம் அமைப்பு தற்சார்பு நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற மகிழ்வான செய்தியும் இதுவரை அங்கு நடைபெற்ற இயற்கை வேளாண் சார் பயிற்சி வகுப்புகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் பற்றி கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நம்மாழ்வாரின் மகள் திருமதி மீனா பங்கேற்று சிறப்பித்தார். முன்னதாக, நம்மாழ்வாரின் நலன் விரும்பியாகவும் சமையல் கலைஞராகவும் இருந்த கடலூரைச் சேர்ந்த அங்கப்பன் மறைவையடுத்து, அவரது திருவுருவப் படத்தை திருமதி மீனா திறந்து வைத்தார். நம்மாழ்வாருக்காவே வாழ்ந்த அவர், கடைசிவரை வேறெந்தப் பணிக்கும் செல்லவில்லை என்பது நினைகூரத்தக்கது.

– தமிழ்பாலன்

Comments (0)
Add Comment