பொதுவாக, மரங்கள் என்றாலே உயிரினங்களின் வாழ்விடமாக அமைவது, வெயிலுக்கு நிழல் தருவது, உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை தருவது போன்று பல நன்மை பயக்குபவையாகவே உள்ளன.
ஆனால், நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல நன்மை என்று இருந்தால் தீமையும் இருக்கும் என்பதைப் போல விஷத்தன்மை உள்ள ஆபத்தான மரங்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது.
அதில் ஒரு வகை தான் உலகிலேயே அதிக விஷத்தன்மை உள்ள மரம் என உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மன்சினில் மரம் (manchineel tree).
manchineel tree – என்றால் ஸ்பானிஷ் மொழியில் சிறிய ஆப்பிள் என்று பொருள். பெயருக்கு ஏற்றார் போல இந்த மரத்தின் பழங்கள் சிறிய ஆப்பிள் வடிவத்தில் இருக்கும்.
இந்த வகை மரங்கள் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரிபியன் கடற்கரை ஓரங்களில் அதிகமாக வளரக்கூடியவை.
இவை சராசரியாக 15 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவையாகவும் இலையின் நிறம் அடர் பச்சை நிறத்தில் பளபளப்பாகவும் காணப்படுகிறது.
இந்த மரத்தில் இலை முதல் வேர் வரை ஒவ்வொரு பகுதியும் விஷத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மரத்தில் உள்ள நச்சுத்தன்மை மனிதர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, குருட்டுத் தன்மை, சில சமயங்களில் மரணத்தைக் கூட ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளது.
இந்த மரத்திற்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. இதனை எரித்தால் வரும் புகை கூட நச்சுத்தன்மையுடன் இருப்பதாகவும் சிலர் இதன் நிழலில் கூட நிற்கக்கூடாது என்றும் நம்புகின்றனர்.
இந்த மரத்தின் இலையில் பட்டு வழியும் நீர் கூட தோளில் புண்களை ஏற்படுத்துமாம்.
எனினும் சில பழங்குடியின மக்கள் இந்த மரத்தின் சாற்றைப் பயன்படுத்தி அம்பு, ஈட்டி போன்றவற்றை விஷமாக்கிய ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையின் சக்தியின் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு என்பதை அறிந்து செயல்படுவோம்.
– V.சங்கீதா