‘க.மு. க.பி.’ – ‘கல்யாணமான’ காதலர்களுக்கானது!

திரையுலகில் மிகச்சிறப்பான முயற்சிகள் அவ்வப்போது நிகழும். அவற்றில் சில பட்ஜெட் குறைபாடு மற்றும் வேறு சில காரணிகளால் முழுமையடையாது போகும்.

அதையும் மீறி, அவை பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும். அவற்றின் உள்ளடக்கம் அதற்குக் காரணமாக இருக்கும்.

அப்படியொரு படமாகக் காட்சியளிக்கிறது ‘க.மு. க.பி’. ‘கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின்’ என்பது இதற்கான விளக்கம். அது ‘டேக்லைன்’ போல டைட்டிலில் சொல்லப்பட்டிருக்கிறது.

 இதனைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். விக்னேஷ் ரவி, சரண்யா ரவிச்சந்திரன், டிஎஸ்கே, பிரியதர்ஷினி, நிரஞ்சன், அபிராமி முருகேசன் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர்.

‘க.மு. க.பி’ படத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது?

‘க.மு. க.பி’ கதை!

‘டைட்டிலே கதையைச் சொல்லிவிடுகிறது’ என்பது இப்படத்திற்குப் பொருந்தும். ஏனென்றால், படத்தின் தொடக்கமும் அதற்கேற்றாற் போல் உள்ளது.

அன்பு (விக்னேஷ் ரவி), அனு (சரண்யா ரவிச்சந்திரன்) இருவரும் தம்பதிகள். குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

பரஸ்பரம் விவாகரத்து கோருவதால் இருவருக்கும் ‘கவுன்சலிங்’ கொடுக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படுகிறது.

கவுன்சலிங் தருபவரிடம் அன்புவும் அனுவும் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றியும், கடந்த காலம் பற்றியும், கூடவே காதல் பற்றியும் விவரிக்கின்றனர். திரையில் அதுவே கதையாக விரிகிறது.

ஐடி நிறுவனமொன்றில் வேலைப் பார்க்கையில் அன்புவும் அனுவும் சேர்ந்து பழகத் தொடங்குகின்றனர். மிகச்சில நாட்களிலேயே இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

அந்த நேரத்தில் அனுவின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்குகின்றனர். ஒருநாள் அனு தன் வீட்டுக்குச் செல்கிறார்.

அப்போது அன்பு அவரைக் காதலிப்பது தெரிந்து குடும்பத்தினர் ‘கெடுபிடி’ போடுகின்றனர். வீட்டில் சிறை வைக்கின்றனர்.

ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வருகிறார் அனு. பெற்றோர் எதிர்ப்பை மீறி அன்புவைத் திருமணம் செய்கிறார்.

திகட்டத் திகட்டக் காதலுடன் இருவரும் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர்.

இதற்கிடையே, சினிமாவில் இயக்குநர் ஆகும் ஆசையை அனுவிடம் வெளிப்படுத்துகிறார் அன்பு. ‘நான் வேலை பார்க்குற சம்பளத்துல நாம வாழலாம். நீ படம் பண்ண ட்ரை பண்ணு’ என்று அவருக்குத் தைரியம் தருகிறார் அனு.

அதையடுத்து உதவி இயக்குநராகப் பயணத்தைத் தொடங்குகிறார் அன்பு.

எல்லாமே சரியாகப் போகிறது. ஒருகட்டத்தில் தினசரி வாழ்வின் அலுப்புகளும் அவமானங்களும் இருவரையும் தடம் புரட்டுகின்றன. பிறகு, புரிதல் காணாமல்போய் சண்டைகளும் சச்சரவுகளும் மட்டுமே நிறைந்ததாக மாறுகிறது வீடு.

சிறு பிளவு பெரிதாகும்போது, ஒவ்வொரு முறையும் யாராவது ஒருவர் அதனைச் சரி செய்ய முயற்சிக்கின்றனர். அது மேலும் விரிசலை அதிகப்படுத்துகிறது. அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘க.மு. க.பி.’ யின் மீதி.

‘இது ஒரு வழக்கமான காதல் கதை. இதிலென்ன வித்தியாசம் இருக்கிறது’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

விவாகரத்து கேட்டு நிற்கும் அன்பு, பின்னர் ஒரு படத் தயாரிப்பாளரிடம் தனது சினிமாவுக்கான கதையைச் சொல்வதாக ஒரு காட்சி வருகிறது. அதில் வரும் நாயக பாத்திரமும் சினிமா வாய்ப்பு தேடும் ஒரு உதவி இயக்குநர் தான்.

அந்தப் பாத்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட காட்சிகள் அன்புவின் வாழ்க்கை சார்ந்தது.

அந்தக் கதையில் வரும் உதவி இயக்குநர் பாத்திரமும் திரைப்படம் இயக்கும் முயற்சியில் இருப்பதாகக் காட்சிகள் உண்டு. அதுவும் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறது.

என்ன, நிறையவே தலையைச் சுற்றுகிறதா?

அதாகப்பட்டது, ‘கதைக்குள் கதை’ என்பது போல ஒரு முயற்சியை இப்படத்தில் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார் இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்.

அதனால், இத்திரைக்கதையில் இரண்டு ஜோடிகள் வருகின்றன. இரண்டுமே காதல், ஊடல், பிரிவு போன்றவற்றைச் சுமக்கின்றன. இரண்டுமே ஒரே கதையைச் சொல்கின்றன.

இறுதியாக, அன்புவும் அனுவும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதைச் சொல்வதோடு படம் முடிவடைகிறது.

சிறப்பான முயற்சி!

இந்தப் படத்தில் அன்புவாக விக்னேஷ் ரவியும், அனுவாக சரண்யா ரவிச்சந்திரனும் நடித்திருக்கின்றனர். இருவரது நடிப்பும் இப்படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது.

வெவ்வேறு ஹேர்ஸ்டைல், தலைமுடி, உடல்வாகு என்று இருவருமே வேறுபாடு காட்டியிருக்கின்றனர்.

அதில் தோற்றம் சார்ந்த வேறுபாடு விக்னேஷ் ரவியிடம் ‘பளிச்’சென்று தெரிகிறது. காதலில் இருக்கையில் குழைவதும், தினசரி வாழ்வின் அழுத்தங்களால் கொதிப்பதுமாகத் தொடரும் காட்சிகளோடு பொருந்தி நிற்கிறார்.

இதற்கு முன்னர் சில படங்களில் மிகச்சிறிய பாத்திரங்களில் சரண்யா ரவிச்சந்திரனைப் பார்க்கையில், ‘நன்றாக நடிக்கிறார்’ என்று தோன்றியிருக்கிறது. ஆனால், ‘இதில் ’நடிப்பு ராட்சசியாக தெரிகிறாரே’ என்று சொல்ல வைத்திருக்கிறார்.

‘குழந்தை பிறந்தா இதை வாங்கணும் அதை வாங்கணும்’ என்று பட்டியலிடுகிற ஒரு காட்சி மட்டும் ‘திருஷ்டி’ கணக்கு.

அதில் சிரித்தவாறே அவர் வசனம் பேசியதைச் சரிப்படுத்தியிருக்கலாம். படக்குழு அக்காட்சியை என் ‘ஒன்மோர்’ ஆக்கவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

நாயகன் விவரிக்கும் திரைப்படக் காட்சிகளில் தோன்றும் ஜோடியாக டிஎஸ்கேவும் பிரியதர்ஷினியும் நடித்திருக்கின்றனர்.

பிரியதர்ஷினி மிகச்சில ஷாட்களில் மட்டுமே காட்டப்பட்டிருக்கின்றார். சிறப்பாக நடித்தபோதும், அவர் ‘ஸ்கோர்’ செய்யப் போதுமான இடம் தரப்படவில்லை.

டிஎஸ்கே தனக்குத் தரப்பட்ட இடத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

இதுபோக, டிஎஸ்கேவின் நண்பராக நிரஞ்சனும் அவரது மனைவியாக அபிராமி முருகேசனும் நடித்திருக்கின்றனர்.

அவர்களது பாத்திர வார்ப்பு, நடித்திருக்கும் விதம் எல்லாமே ‘ஓகே’ என்றபோதும், திரைக்கதையில் அவை இணைக்கப்பட்டவிதம் போதுமானதாக இல்லை.

மேற்சொன்ன ஆறு பேர் தவிர்த்து இன்னும் சிலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். அதில் நாயகன், நாயகியின் நண்பர்களாகவும், தோழிகளாகவும், பக்கத்து வீட்டினராகவும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

பெரும்பாலான காட்சிகள் ‘குளோஸ் அப்’ ஷாட்களால் நிறைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நியாயம் சேர்க்கும் அளவுக்கு நடிப்புக்கலைஞர்களிடம் வேலை வாங்குவது அசாதாரணமான வேலை. இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம் அதனைச் சாதித்திருப்பது பாராட்டுக்குரியது.

கல்யாண பந்தத்தில் இணைந்த காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தானாகத் தீர்வுகளை உணர்கிற வகையில் உள்ளது இப்படம்.

அதேநேரத்தில், தற்போது காதலில் திளைக்கும் ஜோடிகளும் முன்கூட்டியே அதனை உணர்ந்து தெளியும் நோக்கோடு இதனைப் படைத்திருக்கிறார் இயக்குநர்.

கேமிரா கோணங்கள், நகர்வு, லைட்டிங் என்று தனது பக்கமிருந்து ஒத்துழைப்பை நல்ல முறையில் வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.எம்.சுந்தர்.

கலை இயக்குநர் கார்த்திக், பின்னணி இசை தந்திருக்கும் தர்ஷன் ரவிகுமார், பாடல்கள் தந்திருக்கும் இசையமைப்பாளர் ஷாம்நாத் நாக் உள்ளிட்ட அனைவருமே தங்களது பங்களிப்பினால் படத்திற்கு உயிரூட்டியிருக்கின்றனர்.

என்ன, படத்தொகுப்பாளர் சிவராஜ் பரமேஸ்வரன் மட்டுமே நமது அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார். அதற்காக, அவரை மட்டுமே குறை சொல்லிட முடியாது. ஏனென்றால், இயக்குநர் அமைத்திருக்கும் திரைக்கதை அப்படியிருக்கிறது.

‘கதைக்குள் கதை’ என்றானபிறகு, காட்சிகள் வழியே அவர்களுக்கு இடையேயான காதலும் மோதலும் அடுத்தகட்டத்திற்குத் தாவுவதைத் தெளிவாகச் சொல்லியாக வேண்டும்.

ஆனால், இத்திரைக்கதையில் ஜோடிகளுக்கு இடையேயான காதலும் மோதலும் விரிவாகக் காட்டப்பட்ட அளவுக்கு, அவற்றின் உருமாற்றத்தைத் தெளிவுற விளக்கவில்லை.

போதாக்குறைக்கு, ஒரு ஜோடியின் கல்யாண வாழ்வு சிக்கல்களுக்கு நடுவே இன்னொரு ஜோடியின் காதல் அற்புதங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றை ‘முரண்’களாகத் திரையில் காட்ட இயக்குநர் எடுத்த முயற்சி சிறப்புற அமையவில்லை.

அதேநேரத்தில், எடுத்துகொண்ட காட்சியைச் சிறப்பாக எழுதியிருப்பதும் அதனை மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பதும் ‘க.மு. க.பி.’ யின் ‘ப்ளஸ்’ ஆக உள்ளன. அதனாலேயே, இதன் ஆக்கத்தைப் பாராட்ட வேண்டியிருக்கிறது.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

‘அலைபாயுதே’ திரைக்கதையில் ‘பிளாஷ்பேக்’குகளை காட்ட ஒரு உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கும். படத்தொகுப்பில் அப்படியொரு ‘ட்ரான்சிஷன்’ உத்தியைப் பயன்படுத்தி இந்தக் ‘கதைக்குள் கதை’ விஷயத்தைச் சொல்லியிருக்கலாம்.

அதன் வழியே சமகால நிகழ்வுகளையும் திரைப்படக் கதை சொல்லலையும் வேறுபடுத்திக் காட்டியிருக்கலாம்.

படத்தொகுப்பாளர் சிவராஜ் பரமேஷ்வரன் அதனைச் செய்யாததில் வருத்தமே.

அதற்காக, இயக்குநரும் சில காட்சிகளைச் சேர்த்திருக்க வேண்டும். அது நிகழாமல் போனதற்குப் பின்னிருப்பது ‘பட்ஜெட் குறைபாடா’ அல்லது ‘மினிமலிசம் கொள்கையா’ என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

குறைந்த பட்ஜெட்டில் தயாரான படம் என்றபோதும், இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் கதையின் மீதான முழுக் காதலுடன் பணியாற்றியிருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது. அதுவே படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழ் திரையுலகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு கவன ஈர்ப்பைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது ‘க.மு. க.பி.’.

அடுத்த படத்தை இன்னும் சிறப்பானத் தரும் வாய்ப்பு இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகத்திற்குக் கிடைக்க வேண்டும் என வாழ்த்தும் அளவுக்கு உள்ளது இப்படைப்பு!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

#கமு_கபி_விமர்சனம் #Kamu_kapi_review #இயக்குநர்_புஷ்பநாதன்_ஆறுமுகம் #Director_Pushpanathan_arumugam #விக்னேஷ்_ரவி #Vignesh_ravi #சரண்யா_ரவிச்சந்திரன் #Saranya_ravichandran #டிஎஸ்கே #TSK #பிரியதர்ஷினி #Priyadharshan #நிரஞ்சன் #Niranjan #அபிராமி_முருகேசன் #Abirami_murugesan #ஒளிப்பதிவாளர்_ஜிஎம்_சுந்தர் #Cinematographer_JM_Sundar #இசையமைப்பாளர்_ஷாம்நாத்_நாக் #Music_director_Shamnath_nag 

Comments (0)
Add Comment