சென்னை சிங்கங்கள் சறுக்குவது ஏன்?

டெஸ்ட் ஆடத்தான் லாயக்கு என்று சொந்த ரசிகர்களே சபிக்கும் அளவுக்கு இந்த ஐபிஎல்லில் மிக மோசமாக ஆடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புள்ளிப் பட்டியலிலும் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சென்னை அணியின் இந்த சொதப்பலுக்கான காரணங்களைப் பார்ப்போம்.

தோனியின் முதுமையும், பேட்டிங் ஃபார்மும்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் புகழின் உச்சாணிக் கொம்புக்கு அழைத்துச் சென்றவர் தல தோனிதான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

மற்ற நகரங்களுக்கு ஆடச் சென்றால் சென்னை அணிக்குக் கிடைக்கும் அமோக வரவேற்புக்கு காரணம் தோனிதான் என்பதிலும் சந்தேகம் இல்லை.

ஆனால், எந்த தோனி, அணிக்கு மகுடமாக இருந்தாரோ, அதே தோனி இப்போது அணிக்கு முள் கிரீடமாக மாறியிருக்கிறார். தான் இளமையுடன் இருப்பதாக நினைக்கும் தோனி 43 வயதிலும் சென்னைக்காக ஆடுகிறார். ஆனால் அவரது முதுமை பேட்டிங்கில் தெரிகிறது.

முன்போல் அவரால் அதிரடி காட்ட முடியவில்லை. ஒரு காலத்தில் தேவைப்படும் ரன்ரேட் என்னவாக இருந்தாலும் துரத்திப் பிடித்த தோனி, இப்போது கடைசி ஓவர்களில் நுரைதள்ள நிற்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

இது அவரை மட்டுமின்றி அணியையும் கடுமையாகப் பாதிக்கிறது.

இந்த நிலையிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் காப்பாற்ற தோனியால்தான் முடியும்.

தன்னால் அடித்து ஆட முடியாது என்பதை உணர்ந்து அவராகவே அணியில் இருந்து விலகிப் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவது நல்லது.

ஏமாற்றிய ரச்சின் ரவீந்திரா:

கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடர்களில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை அதிகமாக நம்பியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் பெரிதும் நம்பியிருந்தது.

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருதை ரச்சின் ரவீந்திரா வென்றிருந்தார். அவர் மீதான நம்பிக்கையை இது அதிகப்படுத்தி இருந்தது.

இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அரை சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா, அதற்கு அடுத்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக 31 பந்துகளில் 41 ரன்களைக் குவித்தார்.

ஆனால், அதன்பிறகு அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் கடுமையாக பாதித்துள்ளது.

நொறுங்கிப் போன பேட்டிங் முதுகெலும்பு:

ஒரு அணியின் பேட்டிங் முதுகெலும்பு என்று அதன் மிடில் ஆர்டரைச் சொல்லலாம். 4-வது முதல் 7-வது இடம் வரை ஆடும் பேட்ஸ்மேன்களையே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்று அழைக்கிறோம்.

அந்த வகையில் பார்க்கப் போனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் முதுகெலும்பு நொறுங்கிப் போய்க் கிடக்கிறது.

கடந்த 4 போட்டிகளில் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எடுத்துள்ள மொத்த ரன்கள் 283. அவர்களின் ஸ்டிரைக் ரேட் 116.

மற்ற அணிகளின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சராசரியாக 200-க்கு மேல் ஸ்டிரைக் ரேட் வைத்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்க நொண்டியடிப்பது அணியைக் கடுமையாக பாதிக்கிறது.

தொடர்ந்து கடைபிடிக்கும் பழைய ஃபார்முலா:

கடந்த ஆண்டுமுதல் ஐபிஎல் கிரிக்கெட்டின் குணம் மாறி இருக்கிறது. ஒரு அணி வெற்றி பெற வேண்டுமானால், குறைந்தது நான்கைந்து அதிரடி பேட்ஸ்மேன்களாவது தேவைப்படுகிறார்கள்.

ஆனால், சென்னை அணியில் ருதுராஜ், திரிபாடி, ரச்சின் என்று நின்று நிலைத்து ஆடும் வீரர்கள் இருக்கும் அளவுக்கு அதிரடி பேட்ஸ்மேன்கள் இல்லை.

அணியில் இருக்கும் ஒரே அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே மட்டுமே. அவரும் பெரிய அளவில் சோபிக்காதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடுமையாக பாதித்துள்ளது.

இளம் வீரர்கள் மீது நம்பிக்கையின்மை:

மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் இளம் வீரர்களை நம்பி களத்தில் இறக்குகிறார்கள். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் புதிய வீரர்களை நம்பி களத்தில் இறக்க யோசிக்கிறது.

உதாரணமாக அன்சுல் கம்போஜ் மிகச்சிறந்த இளம் பந்துவீச்சாளராக இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை நம்பாமல் வாய்ப்பு தராமல் இருக்கிறது.

அதேபோல் இளம் அதிரடி பேட்ஸ்மேனான ஆந்திரே சித்தார்த்துக்கும் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்காமல் இருக்கிறது.

இதனால் சென்னை அணி வெற்றி வாய்ப்பை இழப்பதுடன், அந்த இளம் வீரரின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

இன்னும் காலம் கடந்துபோய் விடவில்லை. 4 போட்டிகள்தான் முடிந்துள்ளன. இன்னும் 10 போட்டிகள் உள்ளன.

அதற்குள் குறைகளைக் களைந்து புதிய வீரர்களுக்கு வாய்ப்பும் சுதந்திரமும் கொடுத்து ஆடினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லலாம்.

அதைவிட்டு பழைய ஃபார்முலாவைவே பிடித்து செண்டிமென்ட் காரணங்களால் பழைய வீரர்களை வைத்துக்கொண்டு ஆடினால் தொடர்ந்து கடைசி இடங்களிலேயே இருக்க வேண்டியதுதான்.

பிரணதி

Comments (0)
Add Comment