டெஸ்ட் – இது கங்குலியின் ‘வாழ்க்கை’ கதையா?!

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திக் கணிசமான திரைப்படங்கள் இந்தியாவில் வந்திருக்கின்றன. தமிழிலும் சென்னை 600028, ஐ லவ்யூடா, ஜீவா, லால் சலாம் போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருந்து எந்த வகையில் வேறுபட்டு நிற்கப் போகிறது என்ற கேள்விக்கு உள்ளானது ‘டெஸ்ட்’ திரைப்படம். தயாரிப்பாளர் சஷிகாந்த் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகிற இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே அந்த கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. அதேநேரத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற தகவல் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியது.

தற்போது ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. வெகு அரிதாகவே ஓடிடி தளங்களில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன எனும் சூழலில், எப்படி இருக்கிறது இப்படம் தரும் காட்சியனுபவம்?

’டெஸ்ட்’ கதை!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சென்னையில் நடக்கவிருக்கிறது.

இப்போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரரான அர்ஜுன் (சித்தார்த்) இடம்பெறுவாரா என்ற கேள்வி ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. காரணம், இரண்டு ஆண்டுகளாகத் தொடரும் அவரது மோசமான ‘ஃபார்ம்’.

இந்த நிலையில், அணியினரோடு ஹோட்டலில் தங்காமல் வீடு திரும்புகிறார் அர்ஜுன். அவரது மகன் ஆதியும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வத்தைக் காட்டி வருபவர்.

அன்றிரவு அர்ஜுனை விமர்சிக்கும் வகையில் பேசுகிறார் ஆதி. அது அவருக்குப் பிடிப்பதில்லை. அது மட்டுமல்லாமல் குடும்பத்தினரோடு மனம் விட்டுப் பேசுவதில்லை. வெளியுலகையும் கூர்ந்து கவனிப்பதில்லை.

சென்னை டெஸ்ட் போட்டியில் விளையாடியே தீர வேண்டுமென்பது மட்டுமே அர்ஜுன் மனதில் இருக்கிறது.

இன்னொருபுறம், நீரில் இருந்து எரிபொருளைத் தயாரிக்கும் திட்டத்தை மாநில அரசிடம் சமர்ப்பிக்க முயற்சித்து வருகிறார் சரவணன் (மாதவன்). அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்த அவருக்கு அதுவே வாழ்நாள் கனவு. அதனை நிறைவேற்ற முடியாத விரக்தியில் அவர் மது போதைக்கு அடிமையானதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அது அவரது குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கிறது.

ஆசிரியராக வேலை பார்க்கும் சரவணனின் மனைவி குமுதாவுக்கு (நயன்தாரா) குழந்தைப்பேறு இல்லாதது பெருங்குறையாக இருக்கிறது. சரவணனின் குடிப்பழக்கமே அதற்குக் காரணம் என்று தெரிந்தும், கணவனின் குறைகளைப் பொறுத்துக்கொண்டு வாழ்கிறார்.

பள்ளியில் வேலை நேரம் போக, அங்கிருக்கும் குழந்தைகளோடு தனிப்பட்ட வகையில் நட்பு பாராட்டுகிறார் குமுதா. அர்ஜுன் மகன் ஆதியும் அதிலொருவர்.

அன்றைய தினம் ஆதியில் வீட்டில் இருந்து கார் வரத் தாமதமாக, அர்ஜுன் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று விடுகிறார் குமுதா. அப்போதுதான் அவர் தனது ஆரம்பகட்ட பயிற்சியாளர் மாணிக்கத்தின் மகள் என்ற நினைவு அர்ஜுனுக்கு வருகிறது. ஆனாலும், அவரிடம் மனம்விட்டுப் பேசுவதில்லை.

அதற்கடுத்த நாள் ஆதியின் பிறந்தநாளையொட்டி நடக்கும் விருந்தில் குமுதா கலந்துகொள்கிறார். விருந்து முடிவுறுகையில், அங்கு வரும் சரவணனை அர்ஜுனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இந்த நிலையில், பெட்டிங்கில் ஈடுபடும் கும்பலொன்று அர்ஜுனை வளைக்க முயற்சிக்கிறது. அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபரிடம்தான் தனது புராஜெக்டுக்காக சரவணன் கடன் வாங்கியிருக்கிறார். தான் நடத்தி வரும் கேண்டீனை மேம்படுத்தப் பணம் வேண்டுமென்று வாங்கிவிட்டு, அதனைத் தனது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

அதற்காக, அன்றுதான் மாநில அமைச்சர் புகழேந்தியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் சரவணன். ஆனால், அந்த புராஜக்டுக்கான ஒப்புதலைப் பெறவிடாமல் தடுக்கிறார் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் மெய்யப்பன் (ஸ்ரீராம்).

அந்த உண்மைகள் எல்லாமே சரவணனுக்குக் கடன் கொடுத்த சேட் தர்மேஷுக்கு தெரிந்திருக்கிறது. கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால், சரவணனையும் அவரது நண்பரையும் (காளி வெங்கட்) அவரது ஆட்கள் தாக்குகின்றனர்.

அவர்களிடத்தில் குமுதாவுக்குச் சொந்தமான மயிலாப்பூர் வீட்டின் பத்திரத்தைத் தருவதாகச் சொல்லிவிட்டு வருகிறார் சரவணன்.

வீட்டில் இருக்கும் குமுதாவோ, இன்னும் இரண்டு நாட்களில் மேற்கொள்ளவிருக்கும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கான பணத்தைக் கட்ட வேண்டுமே என்ற பதைபதைப்பில் இருக்கிறார்.

சண்டையும் சமாதானமுமாகக் குமுதாவோடு வாழ்ந்துவரும் சரவணனுக்கு, அன்றைய இரவும் அப்படியே கழிகிறது.

அடுத்த நாள் காலையில் இந்தக் கதையில் வரும் அனைவரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இறங்குகின்றனர்.

சென்னை டெஸ்ட் போட்டியில் தான் விளையாடுவதற்காக ஊடகங்களை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் அர்ஜுன்.

மயிலாப்பூர் வீட்டின் பத்திரத்தைப் பயன்படுத்த முடியாது என்று தர்மேஷின் ஆட்கள் சொன்னபிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார் சரவணன்.

கணவரின் கடன் பிரச்சனையால் தான் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போட முடியாது என்று நினைக்கிறார் குமுதா.

கிரிக்கெட் பெட்டிங்கில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிட முயற்சிக்கும் கும்பலோ, தர்மேஷை கொண்டு அர்ஜுனை வளைக்கப் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்கிறது.

இதற்கு நடுவே, தந்தை அர்ஜுனிடம் அடி வாங்கிய விரக்தியில் பள்ளியில் இருந்து வெளியேவரும் ஆதி வீடு திரும்பாமல் வேறிடம் செல்ல முடிவு செய்கிறார்.

ஒவ்வொருவரும் என்ன ஆனார்கள்? அன்றைய பொழுது யாருக்குச் சாதகமாக அமைந்தது? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘டெஸ்ட்’ படத்தின் மீதி.

கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நேரில் காண்பது போலக் கதை மந்தமாகத் திரையில் நகரத் தொடங்கினாலும் ஒருகட்டத்தில் விறுவிறுப்பை எட்டுகிறது. ஆனால், முழுமையாக அது நமக்குத் திருப்தி தருகிறதா என்பதுதான் கேள்வி.

சிறப்பான நடிப்பு!

படத்தில் இடம்பெற்ற அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

அதிலும் மாதவன், சித்தார்த், நயன்தாராவின் நடிப்பு பிரமாதம். தாங்கள் வரும் காட்சிகளில் தங்களுக்கான இடத்தை அறிந்து ‘ஸ்கோர்’ செய்திருக்கின்றனர்.

சித்தார்த், நயன்தாராவின் பாத்திரங்கள் ‘இவர் இப்படித்தான்’ என்று சொல்லத்தக்கவை. அதன் ஆதார மையத்தைப் புரிந்துகொண்டு திரையில் பிரதிபலித்திருக்கின்றனர்.

அவர்களை விட ஒரு படி மேலேறி சிக்சர் அடித்திருக்கிறார் மாதவன். மனைவி ‘கையாலாகாதவன்’ என்று நினைக்கிறாளோ என்ற பதைபதைப்போடு வாழ்கிற ஒரு மனிதன், ‘மனைவி கேட்டதையெல்லாம் இனிமேல் தன்னால் நிறைவேற்ற முடியும்’ என்றெண்ணுகிற நிலைக்குச் செல்வதைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மீரா ஜாஸ்மின், மோகன் ராம், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், வினய் வர்மா ஆகியோர் குறைவான காட்சிகளில் நிறைவான ‘பெர்பார்மன்ஸை’ வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

நாசர் உட்பட மீரா கிருஷ்ணன், தீபா சங்கர், ஸ்ரீராம் உள்ளிட்ட சிலர் ஓரிரு காட்சிகளில் வந்து போயிருக்கின்றனர். இது போக அஜித் கோஷி, ஷ்யாம் குமார் உட்படச் சிலர் திரையில் தலைகாட்டியிருக்கின்றனர்.

’ஒரு சீரியசான கதை சொல்லல் இருக்கிறது’ என்ற உணர்வை ஏற்படுத்தும்விதமாக அமைந்திருக்கிறது விராஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவு.

செயற்கைத்தனத்தைப் பூசியிருந்தாலும், ‘யதார்த்தம்’ போலப் பின்னணியைக் காட்ட முயற்சித்திருக்கிறது மதுசூதன் – ஸ்வேதா சாபு சிரிலின் தயாரிப்பு வடிவமைப்பு.

டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பில் காட்சிகள் திரையில் வழுக்கினாற் போல ஓடுகின்றன. ஆனாலும், சில காட்சிகள் ‘மிஸ்’ ஆன உணர்வைத் தவிர்க்க முடிவதில்லை.

சக்திஸ்ரீ கோபாலன் இசையில் பாடல்கள் ‘ஓகே’வாக உள்ளன; அதேநேரத்தில், பின்னணி இசையில் மனுஷி கலக்கியிருக்கிறார். பின்பாதியில் சில இடங்களில் அவரது இசை காட்சியின் தன்மையை மேலேற்ற உதவியிருக்கிறது.

பாத்திரங்கள் என்ன பேசுகின்றன என்பது சில இடங்களில் சரியாகக் காதில் விழாதபோது, ’லைவ்’ சவுண்ட் உத்தி மீது எரிச்சல் ஏற்படுகிறது. பாத்திரங்கள் குரல் ஒலிக்கும் அளவுக்கு ‘அட்மாஸ்பியர் சவுண்ட்’டுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

டிஐ, விஎஃப் எக்ஸ் உள்ளிட்ட சில அம்சங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த படத்தின் எழுத்தாக்கத்தை சுமன் குமார் என்பவருடன் இணைந்து கையாண்டிருக்கிறார் சஷிகாந்த்.

மகன் விளையாடும் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் கண்டு எரிச்சலடையும் சித்தார்த் பாத்திரம், பின்பாதியில் அதே ஷாட்டை முயற்சித்துப் பார்க்கும். திரைக்கதையில் இது போன்ற அம்சங்கள் கமர்ஷியல் வெற்றிகளுக்கு கைகொடுக்கும். அவற்றைக் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த முயற்சித்ததில் தவறில்லை.

ஆனால், இப்படியொரு கதையில் எந்த இடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதற்குத் தர வேண்டியதில்லை என்பதைத் தீர்மானிப்பதில் தவறியிருக்கிறது எழுத்தாக்கம்.

டெஸ்ட் போட்டியில் ஆடும் சித்தார்த்தை ‘பலிகடா’ ஆக்க பெட்டிங் கும்பல் முயற்சிப்பதுதான் மையக்கதை. அப்படியிருக்க, நாயக பாத்திரத்தோடு மீதமுள்ள 21 கிரிக்கெட் வீரர்கள் பாத்திரங்களும் திரைக்கதையில் தெளிவாகக் காட்டப்பட்டிருக்க வேண்டும். இப்படத்திலோ ‘ஊறுகாய்’ அளவில்தான் அவர்களது பயன்பாடு இருக்கிறது.

போலீஸ், கேங்க்ஸ்டர்ஸ் என்று ஒவ்வொருவரும் தாங்கள் தேடும் நபர்களின் இடங்களை அறிய நேரில் மட்டுமே செல்கின்றனர். இத்தனைக்கும் கதை 2024-ல் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒருவரது மொபைல் எண் கொண்டு வணிக நோக்கங்களுக்காக ஏதேதோ செயலிகளைப் பயன்படுத்தி ‘இதோ இந்த நபர் இந்த இடத்தில் இருக்கிறார்’ என்று கண்டறிந்து, அவர் முன்னே நேரில் ஆஜராகிவரும் காலகட்டத்தில் ’அந்த டெக்னிக்லாம் எங்களுக்கு அலர்ஜி’ என்பதாக இதில் வரும் போலீசாரும் கேங்க்ஸ்டர்களும் செயல்படுகின்றனர்.

கொஞ்சமாய் யோசித்துப் பார்த்தால், இதே கதை எழுபதுகளில், எண்பதுகளில் நடப்பதாகப் படம்பிடிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

குறிப்பாக, கதையின் மையமாக வரும் சில பாத்திரங்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை.

அது மட்டுமல்லாமல், ‘சீப்பை ஒளிச்சுவச்சா கல்யாணம் நின்னு போயிடும்ல’ என்று மேடை நாடகங்களில் கதையைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன சில காட்சிகள்.

ஏன் இந்த பாகுபாடு?

இந்தக் கதையில் கிரிக்கெட் வீரர் பாத்திரத்திற்கு அர்ஜுன் வெங்கட்ராமன் என்று பெயரிட்டிருக்கும் இயக்குனர், அவரது மனைவியான பத்மாவை மலையாளத்தில் ஓரிடத்தில் பேச விட்டிருக்கிறார்.

அதேநேரத்தில் இதர பாத்திரங்களுக்கு சரவணன், குமுதா, மெய்யப்பன், கற்பகம் என்று பெயரிட்டிருக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறும் தமிழ்நாட்டவர்கள் குறிப்பிட்ட சமூகத்தினரே என்று விவாதம் நெடுங்காலமாக இருக்கும் நிலையில், இந்த பெயரிடுதல் திட்டமிட்ட செயலோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

‘இப்படித்தான் மூலிகையில இருந்து பெட்ரோல் எடுக்கறேன்னு ஒருத்தன் வந்தான். நீ தண்ணியில மெஷின் ஓடும்கற’ என்று சில ஆண்டுகளுக்கு முன் செய்திகளில் இடம்பிடித்த ஒருவரை ஒருமையில் குறிப்பிடுகிற வசனங்கள் இதில் இருக்கின்றன.

அதனைச் சொல்பவரிடம் ‘இவர் மசாசுசெட்ஸ்ல டபுள் டாக்டரேட் வாங்கினவர்’ என்று பதில் சொல்கிறது ஒரு அமைச்சர் பாத்திரம்.

‘பெரிய பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே அறிவியல் அறிவு இருக்கும். பாமரர்கள் தானாக அந்த அறிவைப் பெற்று எந்தக் கண்டுபிடிப்பிலும் ஈடுபட முடியாது’ என்கிற பார்வை அதிலிருந்து கிடைக்கிறது. பல காலமாக இது போன்ற பார்வைகள் இந்தச் சமூகத்தில் விவாதிக்கப்படுகிறது என்று தெரிந்தும், இப்படத்தில் அது தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.

இது போன்ற ‘மேட்டிமைத்தனங்களை’ இயக்குனர் சரிப்படுத்தியிருக்கலாம் அல்லது வெட்டி வீசியெறிருந்திருக்கலாம். அது நிகழாததால், ‘ஏன் இந்த பாகுபாடு’ என்று கேட்கத் தோன்றுகிறது.

அனைத்துக்கும் மேலே, சித்தார்த் ஏற்ற அர்ஜுன் பாத்திரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் எவரைப் பிரதிபலிக்கிறது என்ற கேள்விக்கு இயக்குனர் பதிலளிக்கவே இல்லை.

ஏனென்றால், இக்கதைக்கான மூலாதாரம் சௌரவ் கங்குலி என்பது தெளிவாகப் புலனாகிறது. ஆனால், அதனை மறைப்பதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் உட்படப் பலரது அடையாளங்கள் திரைக்கதையில் புகுத்தப்பட்டிருக்கின்றன. அவை கொஞ்சம் கூடப் படத்தோடு நம்மை ஒட்ட வைப்பதாக இல்லை.

‘டெஸ்ட்’ கங்குலியின் வாழ்வைத் தழுவி உருவாக்கப்பட்டது என்பது படக்குழுவினரின் எண்ணமாக இருந்தால், அதற்குரிய நியாயத்தைத் துளி கூட இப்படம் படைக்கவில்லை என்பதே எனது கருத்து. ஏனென்றால், அதனைச் செயல்படுத்தியிருந்தால் இக்கதை பார்வையாளர்களிடத்தில் தன்னம்பிக்கையைப் பலப்படுத்துகிற ஒரு படைப்பாக மலர்ந்திருக்கும்.

‘அதெல்லாம் இல்லைங்க. இந்தக் கதையை ஏதோ ஒரு எக்ஸ் ஒய் இசட்டுக்கு கூட பொருத்தி பார்க்கலாம்’ என்றால், ‘டெஸ்ட்’ ஒரு சுமாரான ’ஸ்போர்ட்ஸ் ட்ராமா’ திரைப்படம்.. அவ்வளவுதான்!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment