செய்தி:
“டெல்லிக்குக் கடிதம் எழுதும் தமிழக அதிகாரிகள் தமிழில் கையெழுத்துப் போடுவதில்லை. தமிழ் வழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரி ஏன் தமிழகத்தில் இல்லை?”
– தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் எழுப்பிய கேள்வி.
கோவிந்த் கமெண்ட்:
இந்தி, மும்மொழிக் கொள்கை பற்றியெல்லாம் தமிழ்நாட்டில் காரசாரமான விவாதங்கள் இன்னும் ஓயாத நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களின் தமிழ் உணர்வுப் பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார் பிரதமர் மோடி.
ஏற்கனவே, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி சாத்தியப்பட்டிருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தமிழ் வழிக் கல்வி சாத்தியப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கான பதில் இதுவரை வராத நிலையில், தற்போது மோடி அதே கேள்வியை எழுப்பியருக்கிறார். அதோடு, டெல்லிக்கு எழுதும் கடிதங்களில் ஏன் தமிழில் கையெழுத்து இடுவதில்லை என்பதையும் குறிப்பிட்டுக் கேட்டிருக்கிறார். தமிழ் உணர்வாளர்களுக்கு இந்தக் கேள்வி வியப்பைத் தரலாம்.
அப்போது பணியாற்றிய வடமாநில அதிகாரிகள் கூட தமிழில் கையெழுத்திடப் பழகினார்கள். மகாத்மா காந்தி கூட சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தமிழில் கையெழுத்திட்டதை கொஞ்சம் நினைவுகூற வேண்டும்.
ஆனால், தற்போது தமிழில் கையெழுத்து என்பது கட்டெறும்பை விட சிறுத்துவிட்டதை மோடி சொல்லும்போது, நமக்குக் கடிக்கிறது.
இதற்கு செந்தமிழ் உணர்வாளர்கள் என்ன பதில் சொல்வார்கள்.
இதைப்போலவே மொழிப் பிரச்சனையினால், பெரும் இனப்போராட்டமே நடந்த இலங்கையில், தமிழ் வழியே மருத்துவக் கல்வி பயில்வது சாத்தியமாகியிருக்கிறது என்றால், மொழிக்காகப் போராட்டமே நடந்த மண்ணில் இன்னும் ஏன் தமிழ் வழியே மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இதற்கு யார் பதில் தரப்போகிறார்கள்?