வெளிநாட்டிற்குச் சென்று சிம்பொனி இசையை வெளியிட்டு தமிழகத்திற்கு திரும்பிய பிறகு இளையராஜா பல்வேறு ஊடகங்களுக்கு முன் தொடர்ந்து பேசி வருகிறார். நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார். தான் பட்ட சிரமங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த வரிசையில், இரு தினங்களுக்கு முன்பு இளையராஜாவின் விரிவான நேர்காணல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளிவந்தது.
ஏறத்தாழ, ஒன்றரை மணி நேர நேர்காணல். இந்த நேர்காணலை எடுத்தவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரான சமஸ்.
மற்ற தொலைக்காட்சிகளில் வெளிவந்ததைவிட கூடுதலான நேரம் ஒதுக்கி, மிகக் கூடுதலான அனுபவங்களையும் வெளிப்படையாக பகிர்ந்திருந்தார் இளையராஜா.
குறிப்பாக சிம்பொனி இசையின் மீது ஏன் இந்த அளவுக்கு ஈர்ப்புக் கூடியது என்கின்ற கேள்விக்கு விரிவாக விளக்கமளித்த இளையராஜா, பீத்தோவன் உள்ளிட்ட மேநாட்டு இசை நிபுணர்கள் வாசித்தளித்த சிம்பொனியின் இசை, அதற்காக அவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள், அலைச்சல்கள் போன்றவற்றை நேரடியான விவரணையைப் போல விவரித்துக் கொண்டு போனார்.
துவக்கத்தில், தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் பயில்வதற்கு காலை 4 மணிக்கு எழுந்து சைக்கிளில் சென்று கற்றுக்கொண்டு பிறகு கர்நாடக இசையை டி.வி. கோபால கிருஷ்ணனிடம் கற்றுக் கொண்டு, திரும்பி வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டுவிட்டு, இசையமைக்கும் கூடத்திற்கு சென்று இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி, மறுபடியும் கர்நாடக இசையைக் கற்க சென்று திரும்பும் வரையிலான தினசரி உழைப்பை அவர் விவரித்த விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேநாட்டு இசை – இவற்றில் எது உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்ற கேள்விக்கு, “மேநாட்டு கிளாசிக் இசை பிடிக்கும்” என்று பதில் சொன்ன இளையராஜா, அந்த முழு நேர்காணலையும் மேநாட்டு இசை அதற்காக பிரத்யேகமாக எழுதப்படும் நோட்ஸ்கள் அதன் தனி நுட்பம் என்று அதைப் பற்றியே பெரும்பாலும் பேசிக் கொண்டு போனார்.
கர்நாடக இசையில், திரைப்படப் பாடல்களுக்கு இடையே மிகவும் நுட்பத்துடன் பயன்படுத்தி இருக்கிறீர்களே, கர்நாடக இசைக் கலைஞர்கள் இந்த நுட்பத்தைக் கவனித்து, உங்களிடம் நேரடியாகப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்களா? என்கிற கேள்விக்கு மிக சுருக்கமாக பதில் வந்தது இளையராஜாவிடமிருந்து.
“திரை இசைப் பக்கமே இருப்பதால், நான் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்பு மிகக் குறைவு.
அவர்கள் சந்தித்தபோது, மிகச் சுருக்கமாகப் பாராட்டியிருக்கிறார்கள்” என்ற அவர், கண்ணதாசனைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டபோது, மிகவும் சிலாகித்தபடி இப்படிச் சொன்னார்,
“எங்கள் ஊர்ப் பக்கம் படிக்க நான் பல மைல்கள் டிபன் பாக்ஸோடும் புத்தகப் பையோடும் போகும்போது, தூரத்திலிருந்து காற்றில் சில சினிமாப் பாடல்கள் வந்து காதில் விழும்.
அதில், கண்ணதாசனின் பாடல்களும் காதில் விழும்போது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்” என்றவர்,
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகளைப் பாடி காட்டி, அந்த வரிகளில் வெளிப்பட்டிருந்த எளிமையையும், அற்புதத்தையும் பற்றி வியந்த மனதோடுப் பாராட்டினார்.
அபூர்வமாக தன்னுடைய குடும்பத்தைப் பற்றி சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக தனது அக்கா, அக்காவின் மகளும் மனைவியுமான ஜீவாவைப் பற்றியும் இளம் வயதில் அவருடன் நடந்த திருமணத்தைப் பற்றியும் குடும்பத்தை அவர் கவனித்துக் கொண்ட விதத்தைப் பற்றியும் மிகச் சுருக்கமாகப் பேசினார்.
அதோடு, அவரது குடும்பத்தில் தாயார், அண்ணன், அண்ணன் மறைவிற்கு பிறகு தனது மகளான பவதாரிணியின் இழப்பு ஏற்படுத்திய வெற்றிடம் குறித்தும் சுருக்கமாகப் பேசினார்.
இசைஞானி இளையராஜாவின் இசையை ரசிக்கும் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கு அவரைப் பற்றிய கூடுதல் செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கிறது சமஸ் எடுத்த இந்த நிறைவான நேர்காணல்.
– மணா