பெண்கள்தான் ஆண்களிடம் வரதட்சணை கேட்க வேண்டும்!

பாரதி நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். உரை

1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதன் தொடக்க விழாவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

நேற்றைய நிகழ்ச்சியையும், இன்றைய நிகழ்ச்சியையும் எடைபோட்டுப் பார்க்க வேண்டும் – நேற்று பேசிய பெண்களின் பேச்சுப் போராட்டத்துக்குத் தயாராக இருந்தது.

இன்று இங்கே பேசிய ஆண்களின் பேச்சு சமாதானத்துக்கு வழி வகுப்பதாக இருந்தது.

நேற்று எழுச்சியுடன் நடைபெற்ற மகளிர் பேரணியை ஊர்வலம் என்று சொல்வதா? பேரணி என்று சொல்வதா? போராடச்செல்லும் வீராங்கனைகளின் அணி வகுப்பு என்று சொல்வதா? என்று எண்ணிப்பார்க்கும்போது எந்தப் பெயர் சொல்லி அழைத்தால் பொருத்தமாக இருக்குமோ அந்த பெருமைக்கு வழி வகுத்த அந்த வீராங்கனைகளுக்கு நான் தலை வணக்கம் செலுத்துகிறேன்.

என் வாழ்நாளில் இதுபோன்ற ஊர்வலத்தை இதுவரை நான் கண்டதில்லை –பொதுமக்களும், அரசில் வேலை செய்யும் அதிகாரிகளும், தங்களை ஊர்வலத்தில் இணைத்துக்கொண்டு சில கிலோ மீட்டர் தூரம் நடந்துவந்த நிகழ்ச்சியை இதுவரை நான் கண்டதே இல்லை.

செல்வி ஜெயலலிதா அவர்கள் நேற்று ஒரு கருத்தைச் சொல்லி அதனை உடனே செயல்படுத்த வேண்டும் என்று சொன்னார் – அது பத்திரிகைகளில் எல்லாம் வந்துள்ளது.

வரதட்சணைக்காக, பெண்களைக் கொடுமை படுத்துவோரை தூக்கில் போட வேண்டும் என்று சொன்னார்.

திருமணம் செய்துகொள்ள வரும் ஆண்கள், தட்சணை கேட்பது என்றால், அது நியாயமில்லை. நான் சொல்வதெல்லாம், ஆண்களிடம் பெண்கள் தட்சணை கேட்க வேண்டும் என்பதுதான்.

“நான் படித்தவள் – பணியாற்றுகிறேன். எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?” என்று பெண்கள் கேட்க வேண்டும்.

பாரதியார் 39 வயதில் மறைந்திருக்கிறார் – இன்று சொல்ல முடியாத விஷயங்களைக்கூட அன்றே சொல்லியிருக்கிறார் – பாரதியின் கருத்துகள் உயர்ந்தது மட்டுமல்ல – சிறந்ததும் ஆகும்.

39 வயதுக்குள் அவ்வளவு கருத்துகளை – மகத்தான கருத்துகளைச் சொல்லி சென்றிருக்கிறார் – எந்த நாட்டிலும் இப்படி ஒரு கவிஞன் வந்ததில்லை என்று சொல்வதில் தமிழ்நாட்டுக்கு உரிமை உண்டு.

மபொசி பேசும்போது, நாமெல்லாம் விலகி விட்டு பெண்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விடலாம் என்றார்.

இப்போதென்ன ஒப்படைக்காமலா இருக்கிறோம்? எப்பவோ இந்தியாவை இந்திராகாந்தியிடம் ஒப்படைத்து விட்டோமே! சரோஜினி நாயுடு கவர்னராக இருக்கவில்லையா?

முன்பும் பெண்கள் இந்த தகுதியுடன் இருந்துள்ளனர் – ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள சமுதாயத்துக்கு மனம் இல்லை – ஆதிக்கத்துக்கு வந்து விட்டவர்களுக்கு அதனை விட்டுக்கொடுக்க மனம் இருப்பதில்லை.

பதவி நாற்காலிகளுக்கு வந்தவர்கள், மற்றவர்கள் வெகுநேரமாக நிற்கிறார்களே, அவர்கள் உட்காரட்டும் என்று நினைப்பதில்லை

தேசிய ஒருமைப்பாடு என்பது வெறும் வார்த்தையில் மட்டுமில்லை – எழுத்தில் மட்டுமில்லை – ஜாதிப் பாகுபாடு இல்லாத நிலையில் – மத உணர்வு இல்லாத நிலையில், மனிதன் என்று பொருளாதாரத்தில் வெற்றி பெறுகிறானோ, அன்றுதான் ஒருமைப்பாடு வரும்.

பதவி நாற்காலி பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் எங்கள் பணியை செய்கிறோம் – மதம், மொழி, ஜாதி, வேறுபாடின்றி பாரதியை கொண்டாடிய எல்லோருக்கும் நன்றி.

போஸ்டர் ஒட்டியவர் முதல் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்’ என்று சொல்லி உரையை நிறைவு செய்தார் பொனமனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment