‘திரையில் நாயகியாக அறிமுகமாகும் ஒரு நடிகையால் அதிகபட்சம் ஐந்து முதல் பத்தாண்டுகள் வரையே தாக்குப் பிடிக்க முடியும்’ என்ற எண்ணம் இன்றும் திரையுலகில் இருக்கும் சிலரிடம் உண்டு.
குறைந்தபட்சம் 15வது வயதில் அறிமுகமாகும் ஒரு நடிகையால் அதிகபட்சம் 25 அல்லது 30 வரை நீடிக்க வாய்ப்புண்டு.
அதிலும் மிகச்சிலரே திருமணத்திற்குப் பிறகும் திரையுலகில் தொடர்வார்கள். அவர்களும்கூட அக்கா, அண்ணி, அம்மா மற்றும் இதர பாத்திரங்களை நோக்கி நகர்ந்துவிடுவார்கள்.
அப்படியொரு சூழலில் சுமார் 30 ஆண்டுகளாக இளமையோடு உலா வருவதென்பது சாதாரண விஷயம் அல்லவே.
ஆம், அந்த சாதனையைச் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறார் ஸ்ருதி ராஜ்.
‘எந்தப் படத்தில் இவரைப் பார்த்தோம்’ என்று யோசிக்க வேண்டாம். தென்றல், ஆபிஸ், அழகு, தாலாட்டு என்று இவர் நடித்த சீரியல்கள் இன்றும் பிரபலம் தான்.
தொண்ணூறுகளில் தொடக்கம்!
‘பூவே உனக்காக’வைத் தொடர்ந்து வெளியான விஜய்யின் ‘மாண்புமிகு மாணவன்’ படத்தில் அறிமுகமானவர் ஸ்ருதி ராஜ்.
அதில் நடிகரும் இயக்குநரும் விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத்தின் ஜோடியாகத் தோன்றியிருந்தார். அதற்கு முன்னர் ‘அக்ரஜன்’ எனும் மலையாளப் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
1998இல் வெளியான ‘இனி எல்லாம் சுகமே’ படத்தில் அப்பாஸின் ஜோடியாக சங்கவி உடன் இணைந்து நடித்தார். அந்தப் படத்தில் இவரது பெயர் டைட்டிலில் ‘லக்ஸி’ என்றே குறிப்பிடப்பட்டது.
பிறகு ‘அந்தமான்’ என்ற படம் மூலமாகக் கன்னடத்தில் அறிமுகமானார். அதில் இவரது பெயர் சோனி என்று இடம்பெற்றது.
மலையாளம், கன்னடம், தெலுங்குப் படங்களில் ஓரளவுக்குப் பெயர் சொல்லும் பாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். இவற்றில் இவரது பெயர் ‘ப்ரீதி’ என்றே இடம்பெற்றிருக்கிறது.
ஒருவழியாக, ஒரு சுற்று முடித்துவிட்டு 2004இல் மீண்டும் தமிழுக்கு வந்தார். பிரசன்னா ஜோடியாக ‘காதல் டாட் காம்’ படத்தில் நடித்தார்.
இதனை இயக்கியவர் எஸ்.ஆர்.செல்வராஜ். இதில் அவரது பெயர் ‘ஸ்ருதி ராஜ்’ என்றே இடம்பெற்றது.
கூடவே, ‘கதாநாயகியாக அறிமுகம்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தன்னையே உயிராக எண்ணி அத்தை மகள் சுற்றி வர, அவரைப் பொருட்படுத்தாமல் பத்து வயதில் தன்னோடு பழகிய ஒரு பெண்ணை எண்ணிப் பருவ வயதில் காதல் கொள்ளும் நாயகனைச் சுற்றி இதன் கதை அமைந்திருந்தது. இக்கதையில் அந்த அத்தை மகளாக நடித்தார் ஸ்ருதி ராஜ்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘அத்தை பொண்ணு’ பாடல் ரசிகர்களிடையே பிரபலம். இதற்கு இசையமைத்தவர் பரத்வாஜ்.
இந்தப் படம் வெளியாகி இன்றோடு சரியாக 21 ஆண்டுகள் ஆகின்றன.
பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான பிரசன்னா, ‘ரகசியமாய்’ படத்திற்குப் பிறகு நாயகனாக நடித்த படமிது. வளரும் நாயகனுக்கு ஏற்ற ‘ஸ்பேஸ்’ இந்த ஸ்கிரிப்டில் இருப்பதைக் காண முடியும்.
அது மட்டுமல்லாமல், அந்தக் காலகட்டத்தில் இருந்த ட்ரெண்டையொட்டி இதில் பல காட்சிகள் இருந்தன. இன்று காணும்போது, அவை ‘மீம் மெட்டீரியல்’ ஆகத் தெரியலாம்.
தொடரும் பயணம்!
‘காதல் டாட் காம்’ படத்திற்குப் பிறகு தமிழில்தான் நடிப்பது என்று ஸ்ருதிராஜ் உறுதியாக இருந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் மந்திரன், ஜெர்ரி, இயக்கம் ஆகிய படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். வேறு மொழிகளில் கவனம் செலுத்தவில்லை.
ஆனால், அவருக்கு வேறொரு திசையில் வெளிச்சம் தென்பட்டிருக்கிறது.
2009இல் ‘தென்றல்’ எனும் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமானார் ஸ்ருதி ராஜ்.
தொடர்ந்து ‘திருமதி செல்வம்’, ‘ஆபீஸ்’, ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களூம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘அழகு’, ‘தாலாட்டு’ ஆகியவற்றில் நடித்தார்.
இதோ, இப்போது ‘லட்சுமி’ எனும் தொடரில் நடித்து வருகிறார்.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில், தனது பதின்ம வயதுகளில் கேமிரா முன்னே நின்றிருக்கிறார் ஸ்ருதி ராஜ். கிட்டத்தட்ட ஒன்பதாண்டு கால போராட்டத்திற்குப் பின்னரே நாயகி ஆகியிருக்கிறார்.
ஆனால், அவ்வாறு நடித்த நான்கு படங்களும் வெற்றி பெறவில்லை. அது மட்டுமல்லாமல், ஆண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் அவை வெளியாகியிருக்கின்றன.
பெயர், புகழ், பணம் என்று எந்தப் பயனையும் பெரிதாகப் பெறாமல் இருந்த ஸ்ருதி, இதோ இன்று சின்னத்திரையின் குறிப்பிடத்தக்க நடிப்பாளுமையாக விளங்குகிறார்.
தனிப்பட்ட வாழ்வைப் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து கேமிரா முன்னே நிற்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
இத்தனை ஆண்டு காலமும் இளமைப் பொலிவைக் கொஞ்சமும் இழக்காமல் இருக்கிறார் அல்லது அதற்காகப் பெரிதாகப் பிரயத்தனங்கள் மேற்கொண்டு வருகிறார்.
திரையுலகில் ஒரு ஆண் இதனைச் செய்தால் நிறையவே நாம் பாராட்டக் கூடும். அதனை விளம்பரப்படுத்த, அந்த நபரே கூடப் பெரிதாக முயற்சிக்கக் கூடும்.
அப்படி எந்த யோசனையும் இல்லாமல் தொடர்ந்து ‘தானுண்டு தனது பணியுண்டு’ என்றிருந்து வருகிறார் ஸ்ருதி ராஜ்.
‘காதல் டாட் காம்’ வெளியான காலகட்டத்தில் டிஜிட்டல் ஊடகம் வளர்ச்சியைப் பெரிதாகக் காணவில்லை. ஆனால், ஸ்ருதிராஜ் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் பற்றுதலைக் காண இன்று அவை வெகுவாக உதவுகின்றன.
ஸ்ருதியின் வெற்றிகரமான திரைப்பயணம் குறித்துச் சிலாகிக்கும்போது இவற்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது!
– மாபா