‘என்ன தாஸ் லட்டுல வச்சேன்னு நினைச்சியா, நட்டுல வச்சேன்’ என்று ‘அயன்’ படத்தில் வில்லனாக வரும் ஆகாஷ்தீப் சைகல் பேசும் வசனம், இன்றளவும் மீம்ஸ்களில் பிரபலம். இத்தனைக்கும் அவர் அப்படம் தவிர்த்து தமிழில் ‘கவண்’ படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இவ்விரண்டு படங்களையும் இயக்கியவர் கே.வி.ஆனந்த். இரண்டு படங்களில் நடித்த ஒரு நடிகரையே நம் நினைவில் நிற்க வைத்திருக்கிறார் என்றால், அவரது இயக்கத்தில் நடித்த நாயகர்களின் நிலைமை பற்றிக் கேட்கவா வேண்டும்.
அப்படிப் பார்த்தால், நடிகர் சூர்யாவின் ஆகச்சிறந்த ‘கமர்ஷியல்’ சினிமா என்று கொண்டாடத்தக்கது ‘அயன்’.
தமிழில் ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான காட்சியாக்கத்தைத் தாண்டி தெலுங்கு, இந்தி மொழிப் படங்களின் தாக்கம் அதில் நன்கு தெரியும். ஆனால், அதுபோன்ற அம்சங்கள் அப்படத்தின் உள்ளடக்கம் உருவாக்கிய பிரமாண்டத்தில் மறைந்து மாயமாகின. அதுபோன்ற ஜாலங்கள் வெகு அரிதாகத்தான் நிகழும். அதனாலேயே, ‘அயன்’ சம்பந்தப்பட்ட படக்குழுவினரால் இன்றளவும் மறக்க முடியாத படைப்பாக விளங்குகிறது.
’படு கமர்ஷியலான’ உள்ளடக்கம்!
போலீசார், கஸ்டம்ஸ் அதிகாரிகள், எதிரிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து கடத்தல் தங்கம், வைரம், புதிய திரைப்பட சிடிகளை லவட்டி வருகிற நாயகனின் சாகசங்களைக் காட்டியது இப்படம். அந்த வேலையில் அவரை ஈடுபடுத்துகிற ரவுடி, நாயகனுக்கு ‘காட்பாதராக’ இருப்பார்.
நண்பனாக வரும் ஒருவர், எதிரியோடு கைகோர்த்தது நாயகனுக்குத் தெரியவரும். ஒருகட்டத்தில் அவரது பக்கமிருக்கும் நியாயமும் நாயகனுக்குப் புரியும்.
‘அயன்’ படத்தின் தொடக்கக் காட்சிகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து நாயகன் கொண்டு வந்த புதுப்பட சிடியை தீபாவளியன்று வில்லன் கோஷ்டி லவட்டிச் செல்வதைக் காட்டும் விதமாக இருக்கும். அதன் தொடர்ச்சியாக, வில்லனோடு நாயகனுக்கு உள்ள மோதல் காட்டப்படும்.
பிறகு நாயகனின் காட்பாதர், நண்பன், தாய் போன்றவர்களின் அறிமுகம் காட்டப்படும். நாயகனுக்கான ‘ஹீரோயிச’ பாடல் வரும்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரை நாயகி குறித்த எந்தவொரு குறிப்பும் திரையில் தெரியாது. அதன்பிறகே தமன்னா திரையில் தெரிவார். நாயகனோடு அவர் தோன்றுகிற காட்சிகள் திரைக்கதை ஓட்டத்தில் இருந்து விலகி நிற்காது.
நாயகியை நாயகன் தன் தாயோடு அறிமுகப்படுத்துகிற காட்சியின் இன்னொரு பாதியில் வில்லன் கோஷ்டி அவர்களைக் கொல்ல முயன்ற சதி தெரிய வரும்.
இப்படி ஒரு சில காட்சிகளிலேயே பல காட்சிகளுக்கான உள்ளடக்கத்தை திணித்த பாங்கே, ‘அயன்’ திரைக்கதையைச் சுவைமிக்கதாக மாற்றியது.
சில வித்தியாசங்கள்!
வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருக்கும் விஷயங்கள் ‘அயன்’னில் நிறையவே இருந்தாலும், அவை வழக்கமான முறையில் திரையில் காட்டப்படவில்லை. ‘கில்லி’யில் விஜய்யின் தாயாக நடித்த ஜானகி சபேஷை வில்லனின் ஆளாகவும், கலைராணியைப் பாலியல் தொழில் செய்யும் பெண் குழுவின் தலைவியாகவும் இதில் காட்டியிருப்பது ஒரு உதாரணம். இப்படி நிறைய சொல்லலாம்.
பிரபு, கருணாஸ், பொன்வண்ணன், ரேணுகா, டெல்லி கணேஷ், சுபலேக சுதாகர் என்று இதில் பலரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். குறிப்பாக, சின்னத்திரையில் உலா வந்த ஜெகனை இதில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் கே.வி.ஆனந்த்.
வெளிநாடுகளில் தவழ்ந்த கேமிராவை வடசென்னையில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கும் கொண்டு சென்றார் எம்.எஸ்.பிரபு. அவர் பணியாற்றிய கமர்ஷியல் படங்களில் இது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ராஜீவனின் கலை வடிவமைப்பு, கனல் கண்ணனின் ஸ்டண்ட் கொரியோகிராஃபி, நளினி ஸ்ரீராமின் ஆடை வடிவமைப்பு, ஆண்டனியின் அபாரமான படத்தொகுப்பு உத்தி என்று பல சிறப்புகள் இதன் உள்ளடக்கத்தை மிகச்சிறப்பானதாக மாற்றின.
எண்பதுகளில் வந்த படம் போல, இதில் கொய்னா மித்ரா ஆடிய ’ஹனி ஹனி’ பாடலின் காட்சியாக்கம் இருந்தது. இது போக ‘பளபளக்கிற’, ‘நெஞ்சே நெஞ்சே’, ‘விழி மூடி’, ‘ஓயாயியே’ பாடல்களைச் சிறப்பானதாகத் தந்திருந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். டைட்டில் காட்சியில் வரும் ‘ஓ சூப்பர் நோவா’ பாடல் பின்னாட்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
எழுத்தாளர்கள் சுபாவின் கதை சொல்லும் திறமையோடு தனது திரையுலக அனுபவத்தை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து ‘அயன்’ படத்தில் வெளிக்காட்டியிருந்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு அயர்ச்சியுறும் தருணங்களில், ‘நான் பார்த்துக்குறேன்’ என்று கேமிரா முன்னர் அமர்ந்துவிடுவாராம் ஆனந்த். ஒரு திரைப்பட உருவாக்கத்தின் ஒவ்வொரு பிரேமையும் ரசித்து உருவாக்குபவர்களால் மட்டுமே அப்படிப்பட்ட உழைப்பைக் கொட்ட முடியும்.
அந்த உழைப்பு இப்படத்தில் நிச்சயம் இடம்பெறும் என்று நம்பினார் ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன்.
இயக்குனர் எஸ்.பி.எம். பெயர்!
அனைத்தையும் தாண்டி, இப்படத்தின் இணை தயாரிப்பாளராக எஸ்.பி.முத்துராமன் இருந்தார்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் நீளும் சாத்தியமுள்ள உள்ளடக்கத்தைச் சுமார் 160 நிமிடங்களாகச் சுருக்கியதில் கண்டிப்பாக அவரது பங்கு இருக்கும். தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த கமர்ஷியல் பட இயக்குனரான அவரது பெயரும் இப்படத்தில் இடம்பெற்றது ‘அயன்’ குழுவினருக்குப் பெருமை தருகிற விஷயம் தான்.
இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட ‘அயன்’, முன் தயாரிப்பு பணிகள் முதல் இறுதியாக திரையரங்கை அடையும் வரை பல மாறுதல்களையும் தாங்கி நின்றது. எல்லா வெற்றிப் படைப்புகளுக்கும் நேர்கிற ஒன்றுதான் அது.
ஜெகன் பாத்திரத்தின் மரணம், ஹனி ஹனி பாடல் காட்சி, சில சண்டைக்காட்சிகளில் தென்படும் அதீத வன்முறையைக் கடந்துவிட்டால், ‘அயன்’ தருகிற திரையனுபவம் மீண்டும் மீண்டும் காணத்தூண்டுவதாகவே இருக்கும். காக்க காக்க, கஜினி, ஆறு, வேல், சிங்கம், ஆதவன், ஏழாம் அறிவு என்று எத்தனையோ வெற்றிப்படங்களைத் தந்தாலும், சூர்யாவின் திரை வாழ்வில் அவரே தாண்டிச் செல்ல முடியாத வெற்றியாக இன்று வரை அமைந்திருப்பது ‘அயன்’ தான்.
அதனைத் தோற்கடிக்கும் விதமான படைப்பொன்றைத் தருவதுதான் அவர் முன்னிருக்கும் உடனடி சவால். அதனை நினைவூட்டும்விதமாகப் பதினாறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது இப்படைப்பு!
– உதய் பாடகலிங்கம்