எனக்காக அவர் விட்டுட்டுப் போன சொத்து நடிப்புதான்!

கே.ஏ.தங்கவேலுவின் மனைவி எம்.சரோஜா நெகிழ்ச்சி

1951 ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘சர்வாதிகாரி’. இதில் எம்.ஜி.ஆருடன் இணைந்து எம்.சரோஜா நடித்திருந்தார்.

தனது முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற எம்.சரோஜா அடுத்தடுத்து கல்யாணப் பரிசு, அறிவாளி, வணங்காமுடி, மருதநாட்டு வீரன், அன்னக்கிளி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். 

‘சர்வாதிகாரி’ திரைப்படத்தைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்படத்தில் எம். சரோஜா பேசி நடிக்கும் வசனத்தைக் கண்டு வியந்து எம்.சரோஜாவை தொடர்ந்து பத்துப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டது.

ஒரே நேரத்தில் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து 10 படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற பெருமைக்குரியவர் எம்.சரோஜா. திரைத்துறையில் இதுவரை வேறு எந்த நடிகைக்கும் நிகழ்ந்திராத ஒன்று.

இவர் நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அன்றைய காலகட்டத்தில்தான் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துப் பிரபலமானவர் தங்கவேலு.

நகைச்சுவை வேடங்களில் கே.ஏ. தங்கவேலுவுடன் 1950 முதல் 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தங்கவேலுவுடன் பல படங்களில் எம்.சரோஜா நடித்ததையடுத்து இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு கே.ஏ. தங்கவேலுவும் சரோஜாவும் காதல் திருமணம் புரிந்து கொண்டனர்.

இருவரும் இணைந்து நடித்துக் கலக்கிய திரைப்படம் ‘கல்யாண பரிசு’. இந்தப் படத்தில் இந்த ஜோடியின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது.

உண்மையிலேயே சிலோன் ரேடியோவில் நகைச்சுவைக் காட்சிகளில் அதிகம் இடம்பெற்ற படக்காட்சி அது.

அந்தக் காலத்தில் மாப்பிள்ளைகள் வேலை இல்லாமல் இருந்தால், “என்னடா மன்னார் & கம்பனியில் வேலையா…”ன்னு விசாரிப்பார்கள். 

ஒருமுறை பேட்டி ஒன்றில் தன் மனைவி சரோஜா பற்றி பேசிய தங்கவேலு, ‘’இவங்களோட அத்தனை படங்கள்லே ஜோடி சேர்ந்து நடிச்சாச்சு. சேர்ந்து வாழ்றதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும். அது எனக்குக் கிடைச்சிருக்கு..” என்று நெகிழ்வோடு கூறினார்.

தங்கவேலுவின் மறைவிற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட சரோஜா, “என்னுடைய கணவர் எனக்கு விட்டுட்டுப்போன சொத்து என்றால் நடிப்புதான்.

அந்த நடிப்பை விற்று நான் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. எவ்வளவோ பெரிய கம்பெனிகள் மற்றும் சின்ன கம்பெனிகள் நடிக்க அழைப்பு விடுத்தாலும் என் மனம் திரைப்படங்களில் நடிக்க அனுமதிப்பதில்லை” என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மனம் ஒன்றி வாழ்ந்த தம்பதிகளுக்கு உதாரணம்  கே.ஏ. தங்கவேலு – எம்.சரோஜா ஜோடி.

Comments (0)
Add Comment