தமிழ் சினிமாவில் ‘தீனா’ மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என்று பல வெற்றிப்படங்கள் தந்திருக்கிறார். இதைத் தவிர்த்து தெலுங்கு, இந்தியிலும் படங்கள் இயக்கியிருக்கிறார். அவற்றில் இந்தி ‘கஜினி’ குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து ‘சிக்கந்தர்’ படத்தை இந்தியில் தந்திருக்கிறார். இதில் நாயகன் நாயகியாக சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றனர்.
இது எப்படிப்பட்ட எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்கும்? அதற்குத் தக்க பலனைத் திரையில் தந்திருக்கிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?
’சிக்கந்தர்’ கதை என்ன?
அப்படிப்பட்ட சஞ்சய், ஒருநாள் விமானத்தில் மகாராஷ்டிரா அமைச்சர் ராகேஷ் பிரதானின் (சத்யராஜ்) மகன் அர்ஜுனை பொழந்து கட்டுகிறார். அவரது பாதுகாவலர்களைப் பந்தாடுகிறார். காரணம், ஒரு முன்னாள் ‘போர்ன்’ பட நடிகையிடம் அர்ஜுன் ‘வாலண்டியராக’ சென்று வம்பிழுத்ததே. அவர் அப்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிறது.
அதனால் ஆத்திரமடையும் ராகேஷ், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான பிரகாஷை (கிஷோர்) ராஜ்கோட்டுக்கு அனுப்புகிறார். அவர் அரண்மனைக்குச் சென்ற நேரத்தில், காவல் நிலையத்தில் ஆஜராகிவிடுகிறார் சஞ்சய்.
ஆனால், அரண்மனையில் இருந்து திரும்ப முடியாதவாறு பிரகாஷ் சென்ற ஜீப்பை சுக்குநூறாக்கிவிடுகின்றனர் ராஜ்கோட் மக்கள். இது உங்களுக்கு ‘ஹீரோயிசமாக’ தெரிந்தால், இந்தப் படத்தில் அது போன்று பல காட்சிகளைப் பார்க்கலாம்.
இப்படி ஹீரோயிசம் காட்டுகிற சஞ்சய், ஒருநாள் மும்பைக்குச் செல்ல வேண்டியதாகிறது. அப்போது, அவரை அர்ஜுனும் ராகேஷின் ஆட்கள் சிலரும் பார்த்து விடுகின்றனர்.
சஞ்சயைத் துரத்திச் சென்று, பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் மேற்கொள்கிறார் அர்ஜுன். அதில் ஒரு பாட்டில் அவர் செல்லும் காருக்குள்ளேயே விழுகிறது. அதிலிருப்பவர்கள் அனைவரும் பஸ்பம் ஆகின்றனர்.
ஏற்கனவே சஞ்சய் மீது கொலை வெறியோடு இருக்கும் ராகேஷ் பிரதான் தனது மகன் இறந்த செய்தி கேட்டதும் என்ன செய்வார்? ’மகனைக் கொன்றவனை சும்மா விடமாட்டேன்’ என்று கர்ஜிக்கிறார். அப்போதும், மும்பையிலேயே இருக்கிறார் சஞ்சய்.
இது போன்ற சூழலில், ‘உன் குடும்பத்தைச் சும்மா விட மாட்டேன்’ என்றுதானே ஒரு வில்லன் நாயகனைப் பார்த்து கத்துவார். இதில், அதற்கு வேலை இல்லாமல் போகிறது.
ஏனென்றால், சஞ்சயின் மனைவி ராணி சாய்ஸ்ரீ (ராஷ்மிகா) ஏற்கனவே அகால மரணமடைந்திருக்கிறார். அதற்கும் கூட ராகேஷின் ஆட்களே காரணமாக இருக்கின்றனர்.
உடலுறுப்பு தானம் செய்த காரணத்தால், சாய்ஸ்ரீயின் உறுப்புகள் மும்பையிலுள்ள மூன்று நபர்களுக்குப் பொருத்தப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்றறியத்தான் மும்பைக்கு சென்றிருக்கிறார் சஞ்சய்.
இவ்வளவும் சொன்னபிறகு என்ன நிகழும்? வில்லனின் பார்வை அந்த மூன்று பேர் மீது தானே திரும்ப வேண்டும்? அதுவே ‘சிக்கந்தர்’ படத்திலும் நிகழ்கிறது.
பிறகு என்னவானது என்று சொல்கிறது இதன் மீதி.
’அட என்னங்க? ’நீ வருவாய் என’ பாணியில ஒரு கதைன்னு சொல்லாம இப்படி சுத்தி வளைக்குறீங்களே’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் நமக்குத் தந்திருப்பதும் கிட்டத்தட்ட இதே தொனியில்தான் அமைந்திருக்கிறது. தேவயானிக்குப் பதிலாக இதில் சல்மான்கான் இருக்கிறார். என்ன, கொஞ்சம் முஷ்டியை முறுக்கி அவ்வப்போது ‘ஹீரோயிசம்’ காட்டுகிறார்.
முருகதாஸ் எங்கே?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் சிறப்பே, ரசிகர்களிடத்தில் உணர்வெழுச்சியை உண்டாக்குகிற காட்சிகளைத் திறம்பட எழுதி, அதற்கேற்ற ஆக்கத்தைத் திரையில் வெளிப்படுத்தியிருப்பதுதான். அதற்காகச் சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கூட்டணி சேர்ப்பதும் அவரது வழக்கம். ‘சிக்கந்தர்’ரிலும் அதனை நிகழ்த்த முயற்சித்திருக்கிறார்.
திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை இரண்டும் இப்படத்தின் சிறப்பம்சங்கள்.
நாயகன் சல்மான் கானின் உருவத்தை ‘நாயகத்தனத்துடன்’ காட்ட முன்னவர் உதவுகிறார் என்றால், அது குறித்த எண்ணம் ரசிகர்கள் மனதில் படியும்விதமாக இசையை ஒலிக்கவிட்டிருக்கிறார் பின்னவர். ஆனாலும், திரைக்கதை நகர மாட்டேன் என்று அடம்பிடிப்பதால் அவர்களது பங்களிப்பு வீணாகியிருக்கிறது.
தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் சுப்ரதா சக்ரபர்த்தி, மந்தர் நகானோகர், அமித் ரே ஆகியோர் திரையில் கண்களுக்குக் குளுமையான பின்னணி தெரிய உழைப்பை நல்கியிருக்கின்றனர்.
பாடல்கள் தந்திருக்கும் இசையமைப்பாளர் பிரீதம், ரசிகர்கள் எழுந்து உற்சாகத்தோடு ஆட வழி வகுத்திருக்கிறார்.
மற்றபடி டிஐ, ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் சிறப்பாகத் திரையில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.
படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எப்படியாவது இயக்குனர்கள் சொல்கிற காட்சிகள் அனைத்தையும் திரையில் அடுக்கிவிட வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார். அதனால், நமக்குத்தான் போரடிக்கிறது.
அறிமுகக் காட்சியில் ‘வாவ்’ என்று ஆச்சர்யப்படத்தக்க வகையில் திரையில் தோன்றுகிறார் சல்மான் கான். அது போதும் என்பது போல அவர் பிற காட்சிகளிலும் வந்திருப்பதுதான் பிரச்சனை.
‘ஓவர் ஆக்டிங்’கில் பதக்கம் பெறத் தகுதியான ராஷ்மிகா கூட இப்படத்தில் வழக்கத்தைவிட மிகக்குறைவாகவே நடித்திருக்கிறார்.
இது போக காஜல் அகர்வால், பிரதீக் பப்பர், கிஷோர் ஆகியோருடன் சத்யராஜும் இதிலுண்டு.
வில்லனாக நடித்த சத்யராஜுக்கு யாரோ ஒருவர் இரவல் குரல் தந்திருப்பதை நம்மால் ஏற்க முடியாது. அந்த குரல்தான் அவருக்கு அடையாளம் என்றெண்ணும் நம்மவர்களால் இதனை சீரணிக்கவே முடியாது.
இது போக ஷர்மான் ஜோஷி, தான்யா பாலகிருஷ்ணன் உட்படச் சுமார் 3 டஜன் பேராவது இதில் நடித்திருப்பார்கள். நடித்தனர் என்று சொல்வதை விட, ‘ராஜா எப்பேர்பட்டவர் தெரியுமா’, ‘ராணியம்மா குணம் தெரியுமா’ என்று சல்மான், ராஷ்மிகா பாத்திரங்களைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
’இவர்களுக்கான பில்டப்பை ஏன் பார்க்க வேண்டும்’ என்று உங்கள் மனதுக்குள் ஒரு குரல் கேட்கலாம். அதுவே இயல்பு. அப்படிப்பட்டவர்களுக்கு ‘இது ஏ.ஆர்.முருகதாஸ் படம்தானா’ என்றே தோன்றும். அதேநேரத்தில், ‘ஸ்பைடர்’ போன்ற படங்களைப் பார்த்தவர்களுக்கு அந்த ஆச்சர்யம் துளியும் எழாது.
’சிக்கந்தர்’ படத்தின் வசூலோ, அதன் வெற்றியோ தமிழ் சினிமா ரசிகர்களை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. அதே நேரத்தில், ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகிவரும் ‘மதராஸி’யில் இது போன்ற திரையனுபவம் கிட்டிவிடக் கூடாது என்ற பயம் அவர்களை இன்னும் சில நாட்கள் வாட்டுவது நிச்சயம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்