ஒருகாலத்தில் தூள், சாமி, அந்நியன் என்று வித்தியாசமான ‘கமர்ஷியல்’ படங்களில் பக்காவாக பொருந்தி நின்றவர் விக்ரம். கதைக்காகத் தனது தோற்றத்தையும் நடிப்பையும் மெலிய வைப்பதும் பெருக்கிக் காட்டுவதும் அவருக்குக் கைவந்த கலை.
அறுபது வயதைத் தொட்டபிறகும் இம்மியளவு கூடப் பிசகாமல் அதனைத் தொடர்ந்து வரும் அவருக்குச் சமீபகாலத்தில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிப்படங்கள் அமையவில்லை.
அந்தக் குறையைப் போக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘வீர தீர சூரன்’ பட அறிவிப்பு. தற்போது டீசர், ட்ரெய்லர் வெளியீடு உள்ளிட்ட சம்பிரதாயங்களைக் கடந்து, முதல் நாள் தியேட்டர் வெளியீட்டில் சிக்கல்கள் சில கடந்து ஒருவழியாக ரசிகர்களை வந்தடைந்திருக்கிறது.
எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா, பிருத்விராஜ், துஷாரா விஜயன், மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி, பாலாஜி, ரமேஷ் இந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு அறிமுகமாகியிருக்கிறார்.
‘வீர தீர சூரன்’ நமது மனதை வாகை சூடுகிறாரா?
நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஒரு ஊர். அங்கு திருவிழா நடக்கிறது. அக்கம்பக்கத்து ஊர்களில் இருப்பவர்கள் எல்லாம் அங்குத் திரண்டு வருகின்றனர்.
அப்படியொரு சூழலில், ஒருகாலத்தில் ரவுடியாக இருந்து தற்போது குவாரி உரிமையாளராக உருவெடுத்திருக்கும் பெரியவர் ரவி (பிருத்விராஜ்)
வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
ரவியின் மகன் கண்ணன் (சூரஜ் வெஞ்சாரமூடு) வீட்டு வாசலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். ‘நீங்க இதையெல்லாம் பண்ணனுமா’ என்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கேட்டவாறே அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில், அங்கு ஒரு பெண்மணி தனது குழந்தையோடு வருகிறார். ‘என் புருஷனை எங்கன்னு சொல்லிடுங்க. இல்லேன்னா போலீசுக்கு போயிடுவேன்’ என்று கத்திக் கூச்சல் போடுகிறார்.
அவரது பேச்சு கோபத்தை ஏற்ற, அவரை அடித்து துரத்துகிறார் கண்ணன். கோபாவேசத்தோடு அந்தப் பெண்ணும் அங்கிருந்து அகல்கிறார். சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் அந்த வீட்டுக்குள் நுழைகிறார்.
அதற்குப் பின் சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து, ‘மனைவியையும் மகளையும் காணவில்லை’ என்று கூறி காவல்நிலையத்திற்குச் செல்கிறார் அந்தப் பெண்ணின் கணவர்.
தன்னைத் தேடித்தான் அவர்கள் பெரியவர் வீட்டிற்குச் சென்றதாகவும், தனக்கும் கண்ணனுக்கும் இடையே பகை இருப்பதாகவும் அவர் புகார் தெரிவிக்கிறார். அது காவல் கண்காணிப்பாளர் அருணகிரியின் (எஸ்.ஜே.சூர்யா) பார்வைக்குச் செல்கிறது.
‘அப்பனையும் மகனையும் என்கவுண்டர்ல போட இதுதான் சரியான சந்தர்ப்பம்’ என்றெண்ணுகிறார் அருணகிரி. அதற்கான அனுமதி உள்ளிட்ட வேலைகளை அவசர அவசரமாக மேற்கொள்கிறார்.
இந்த விஷயம் பெரியவர் காதுக்கு போக, அடுத்த நாள் காலையில் மகன் கண்ணனை நீதிமன்றத்தில் சரணடையச் சொல்கிறார். அதுவரை தலைமறைவாக இருக்குமாறு கூறுகிறார்.
ஆனால், ரவியோ கண்ணனோ நினைப்பது போல அது சுலபத்தில் நடப்பதாகத் தெரியவில்லை. அதனால், அருணகிரியைக் கொல்வதுதான் சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்கிறார் ரவி. அதற்குச் சரியான ஆள் காளி மட்டும் தான் என்று எண்ணுகிறார்.
யார் அந்த காளி?
ஒருகாலத்தில் ரவியிடம் அடியாளாக இருந்த காளி (விக்ரம்) இப்போது மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மனைவி கலைவாணி (துஷாரா விஜயன்), தாய் (ஸ்ரீஜா ரவி) மற்றும் ஒரு மகள்,
மகனோடு அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்.
காவல்துறை அதிகாரி அருணகிரியைக் கொல்ல வேண்டுமென்று காளியைத் தேடிச் சென்று கேட்கிறார் ரவி. ஆனால், அவர் ‘என்னால் முடியாது’ என்கிறார். மீண்டும் ரவுடித்தனத்தில் இறங்கினால் தான் கைக்கொண்ட அமைதி வாழ்வில் இல்லாமல் போய்விடும்’ என்கிறார்.
சட்டென்று ரவி அவரது காலில் விழ, அனைத்தும் தலைகீழாகிறது. அருணகிரியைக் கொல்வதாக வாக்குறுதி தருகிறார் காளி. விஷயமறிந்து கலைவாணி காளியிடம் கதறி அழுகிறார். ‘இந்த நிம்மதியான வாழ்க்கையை நாம விடணுமா’ என்று கேட்கிறார்.
அதேநேரத்தில், காளி மீது கடுப்பில் இருக்கும் கண்ணனுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. ‘காளியை விட்டா வேற ஆளே இல்லையா? அவன் இந்த வேலைய முடிக்கலேன்னா அவன் குடும்பத்தையே சிதைச்சிடுவேன்’ என்கிறார்.
ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும் அவர்களது சிந்தனையையும் அறிந்திருக்கும் காளி, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதைத் தவிர வேறெதையும் யோசிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருகிறார். தனக்குத் தேவையான ஆயுதங்களுடன் வன்முறைக் களத்தில் குதிக்கிறார்.
அடுத்த சில மணி நேரங்களில் இவர்கள் அத்தனை பேரின் வாழ்வும் கேள்விக்குறியாகிறது. தனது குடும்பத்தைக் காக்க வேண்டுமென்று நினைக்கும் இந்த மனிதர்கள் அனைவருமே அதற்காக அடுத்தவர் குடும்பத்தைச் சின்னாபின்னாமாக்கத் தயங்குவதில்லை.
முடிவில் வென்றவர் யார் என்று சொல்கிறது இந்த ‘வீர தீர சூரன்’.
மேற்சொன்ன கதையில் ஒருவித ‘rawness’ தென்படும். இப்படத்தின் பலமும் பலவீனமும் அது மட்டுமே.
அந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு, நாம் இதுவரை காணாத திரையனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார். ‘வீர தீர சூரன்’ படத்தின் யுஎஸ்பி அதுவே.
அசத்தும் ‘காஸ்ட்டிங்’!
‘எப்புட்றா’ என்று என்பது போல அமைந்திருக்கிறது ‘வீர தீர சூரன்’ படத்தின் காஸ்ட்டிங். இந்தப் படத்தில் நடித்தவர்கள் என்று சுமார் ஐம்பது, அறுபதுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இறுதியாக வரும் ‘ரோலிங் டைட்டிலில்’ இடம்பெறுகின்றன.
இது போக திருவிழா கூட்டம், அடியாட்கள், போலீசார் என்று பெருமளவில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்களும் உண்டு. அவர்களது இருப்பு, ஒரு இரவில் இக்கதை நிகழ்வதாக நம்மை நம்ப வைக்கிறது. இது போக, இதிலொரு ‘பிளாஷ்பேக்’கும் இருக்கிறது.
விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா அசத்தியிருக்கிறார். பிருத்விராஜ், சூரஜ்ஜின் வில்லத்தனம் சூப்பர். துஷாரா விஜயனின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது என்று தனித்தனியாகப் பாராட்டத் தேவையில்லை.
காரணம், இதில் சிறியதொரு ஷாட்டில் தலைகாட்டியவர் கூடச் சிறப்பாகத் திரையில் தெரியும் அளவுக்கு நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.
அதனால் மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி முதல் இப்படத்தில் நடித்த பலரும் நம் மனம் கவர்கின்றனர். அவர்களில் விக்ரமுடன் திரிபவராக வரும் பாலாஜி, பிளாஷ்பேக்கில் பெரியவராக வரும் கன்னட நடிகர் ரமேஷ் இந்திரா மற்றும் சூரஜ்ஜின் தங்கையாக வருபவர் நம் கவனத்தைக் கவர்ந்திழுக்கின்றனர்.
உண்மையைச் சொன்னால், ‘வீர தீர சூரன்’ படத்தின் உண்மையான நாயகன் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தான்.
ஒரு நாள் இரவில் நடக்கிற கதை என்பதை நாம் நூறு சதவிகிதம் நம்புகிற அளவுக்கு ‘லைட்டிங்’கில் அசத்தியிருக்கிறார். கேமிரா கோணம், நகர்வு, பிரேமிங் உருவாக்கும் உணர்வு என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.
குறிப்பாக பின்பாதியில் நடக்கும் துப்பாக்கிச் சண்டை தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே ஷாட்டாக பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்கிறது.
அக்காட்சி இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். ஸ்டண்ட் கொரியோகிராஃபர் பீனிக்ஸ் பிரபு குழுவினரின் உழைப்பு அதில் அபாரம்.
கலை இயக்குநர் சி.எஸ்.பாலச்சந்தர் இந்தப் படத்திற்காகக் கொட்டியிருக்கும் உழைப்பு அளப்பரியது. குறிப்பாக, திருவிழா காட்சி திரையில் விரியும்போது நமக்குள் உருவாகும் பிரமிப்பைச் சொல்ல இயலாது.
ஜி.கே.பிரசன்னா இதில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். முன்பாதியில் இருக்கை நுனியில் நம்மை அமர வைப்பவர், பின்பாதியில் ‘ரிலாக்ஸ்’ ஆக பின்னால் சாய வைத்திருக்கிறார்.
இந்தக் கதையில், பிளாஷ்பேக்கில் வரும் விக்ரம் – துஷாரா காதல் காட்சி தேவையற்ற ஆணி. அதுவும் அந்த இடைவேளை ‘பிளாக்’, வித்தியாசம் என்ற பெயரில் ரசிகர்களை அயர்ச்சியுற வைக்கிறது.
இயக்குநர், நாயகன், இதர கலைஞர்களின் உழைப்புக்கு மரியாதை செலுத்துவதாக நினைத்து அந்த இடத்தில் அவர் கத்தரி போடாமல் விட்டிருந்தாலும் கூட அது தவறுதான்.
இவர்கள் தவிர்த்து ஆடியோகிராஃபி, காஸ்ட்யூம் டிசைன், மேக்கப், விஎஃப்எக்ஸ், டிஐ என்று பல தொழில்நுட்பங்களில் கலைஞர்கள் சிறப்புறப் பணியாற்றியிருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்களில் வழக்கம்போல தனது மாயாஜாலத்தைக் காட்டியிருக்கிறார். ஆனால் அதைவிடப் பின்னணி இசையில் அவர் காட்டியிருக்கும் கவனம்தான் அற்புதம்.
திரையில் தெரியும் பிம்பங்களுக்கும் நமக்கும் இடைவெளி விழுந்துவிடாமல் காக்கிறது அவரது பங்களிப்பு.
இதற்கு முன் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களில் நம்மை வித்தியாசமானதொரு உலகத்தைக் காணச் செய்தவர் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்.
அவர் இயக்கிய ‘சிந்துபாத்’தை நான் பார்க்கவில்லை. ஆனால், அது போன்றதொரு படமாக ‘வீர தீர சூரன்’ அமையாது என்று நம்பினேன். அந்த நம்பிக்கை பொய்யாகவில்லை.
இந்தப் படத்தின் இரண்டாம் பாதி செறிவுற அமையவில்லை என்பதே இதன் பெருங்குறை. குறிப்பாக, ஒரு சண்டைக்காட்சி முடிந்து இன்னொன்று அதற்கடுத்து வேறொன்று என்று நீள்வது நம்மைச் சோர்வடைய வைக்கிறது.
அதனால், ‘வித்தியாசமான ஆக்ஷன் படம்தான். ம்ஹ்ம்’ என்று நீண்ட ‘இழுவை’யோடு கருத்துகளைப் பகிர வேண்டியிருக்கிறது.
ஓரிடத்தில் ‘தூள்’ படத்தில் வரும் ‘மதுரவீரன் தானே’ என்ற பாடலைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சண்டைக்காட்சி பின்னணியில் அது ஒலிப்பதாக வடிவமைத்ததில் ஒரு சதவிகிதம் கூடப் புதுமை தெரியவில்லை.
அதற்குப் பதிலாக, துஷாரா – விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ‘உன் சமையலறையில்’ போன்ற வித்யாசாகரின் ஏதாவது ஒரு பாடலைக் கூடப் பயன்படுத்தியிருக்கலாம்.
என்ன இருந்தாலும், ஒரு இயக்குநரின் முடிவுக்குள் நமது விருப்பங்களைத் திணிப்பது சரியானதாக இருக்காது.
ஓரிரவில் கதை நிகழ்வதாக ‘கைதி’ உட்படச் சில படங்களை நாம் கண்டிருப்போம். அவற்றில் இருந்து வெகுவாக விலகி, அடுத்தடுத்து பல பாகங்கள் உருவாக்கும் அளவுக்குக் கதாபாத்திர வடிவமைப்பு,
அவற்றுக்கிடையே பல அடுக்குகளாக அமைந்திருக்கும் முரண்கள், சில பல நிகழ்வுகளை வார்த்தைகளில் விவரிக்கிற வசனங்கள், இதுவரை நாம் பார்த்திராத களம் என்று இதில் வேறொரு உலகத்தைக் காட்டியிருக்கிறார் அருண்குமார்.
கிட்டத்தட்ட ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக முயற்சித்திருக்கிறார். அதில் அவருக்கு ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம்.
ஆனால், தீவிர சினிமா ரசிகர்கள் அந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமே ‘வீர தீர சூரன்’ படத்தைக் காணலாம்!
-உதயசங்கரன் பாடகலிங்கம்