தி டோர் – படத்தைக் காக்கிறதா பாவனாவின் இருப்பு?

மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலமாகத் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அந்த காலகட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள், ஜெயம்கொண்டான் என்று தொடர்ந்து நடித்து வந்தவர் பின்னர் ‘அசல்’ படத்தில் அஜித்தோடு ஜோடி சேர்ந்தார். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் அவர் நடித்துள்ள ‘தி டோர்’ படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

பாவனாவின் சகோதரர் ஜெய்தேவ் இதனை இயக்கியிருக்கிறார்.

’தி டோர்’ படத்தின் ட்ரெய்லர் ஆனது ‘இது ஒரு ஹாரர் படம்’ என்பதைச் சொன்னது. இப்படம் தரும் காட்சியனுபவம் எத்தகையது?

‘தி டோர்’ கதை!

படத்தின் டைட்டிலை கேட்டதுமே, நமக்கு என்னவெல்லாம் தோன்றும்?

நாயகி புதிதாக ஒரு வீட்டுக்குக் குடி போகிறார். அங்குள்ள ஒரு அறையில் ஒரு கதவு இருக்கிறது. அது, அங்கு ஒரு பேய் வசிப்பதைப் பார்வையாளர்களான நமக்கு உணர்த்தும். அது அந்த நாயகியின் கண்களுக்குப் புலப்பட்டதா? அந்த பேய் ஏன் நாயகியைத் தேடி வந்தது? இந்த கேள்விகளுக்கான பதிலைப் படம் தருகிறதா என்றுதானே எதிர்பார்ப்போம்.

ஆனால், ‘தி டோர்’ படத்தின் கதை அப்படியொன்றாக அமையவில்லை.

கட்டுமான நிறுவனமொன்றில் ஆர்க்கிடெக்ட்டாக பணியாற்றும் மித்ரா (பாவனா), பணி நடக்குமிடத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு பழைய கோயிலை இடிக்க உத்தரவிடுகிறார். அது இடிக்கப்படுகிறது. அன்றிரவே சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்வது மித்ராவின் திட்டம்.

ஆனால், அடுத்த நாள் மதுரையில் மித்ராவுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று காத்திருக்கிறது. முந்தைய நாள் இரவு சாலை விபத்தில் அவரது தந்தை (நந்து) மரணமடைந்திருக்கிறார்.

அந்த விபத்து குறித்த நினைவுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் மித்ராவை மீண்டும் சென்னைக்கு அழைத்து வருகிறார் கட்டுமான நிறுவன உரிமையாளர் வேல்முருகன் (ஜெயபிரகாஷ்). அவர் ஏற்பாடு செய்த இடத்தில் தங்குகிறார். அங்கு சில அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்வதாக உணர்கிறார். ஆனாலும், அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இந்த நிலையில், மித்ரா வசித்து வரும் வீட்டுக்கு வருகிறார் தோழி (பிரியா வெங்கட்). அவரது முகம், உடல் தோற்றத்தைக் கண்டதும் ஏதோ ஒரு பிரச்சனையால் அவதிப்படுவதாக உணர்கிறார். உடனே, தனது நண்பர் ஒருவருக்குத் (ரமேஷ் ஆறுமுகம்) தகவல் சொல்லி வரவழைக்கிறார்.

அந்த நபர் அமானுஷ்யமான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து வருபவர். அவர், மித்ராவின் வீட்டில் ஒரு தாய் மகள் ஆவி இருப்பதை உணர்கிறார்.

அவரிடத்தில், கட்டுமானப் பணி மேற்கொள்ளுமிடத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டதையும், அதன்பின்னரே தன்னைச் சுற்றி சில விஷயங்கள் நிகழ்ந்ததாக உணர்ந்ததையும் சொல்கிறார் மித்ரா. மித்ரா கூறுவதில் இருந்து, அவரது தந்தையின் மரணத்திற்கும் அந்த ஆவிகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பிருப்பதாக உணர்கிறார் அந்த நபர்.

கட்டுமானப் பணி நடக்குமிடத்தில் ஏற்கனவே இருந்த வீடு யாருடையது என்று தெரிந்தால், அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் தெரிய வரும் என்கிறார்.

அதையடுத்து, அந்த வீடு யாருடையது என்றறியும் முயற்சியில் இறங்குகிறார் மித்ரா.

அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? அந்த ஆவிகள் ஏன் அவரைப் பின்தொடர்கின்றன? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘தி டோர்’ படத்தின் மீதி.

இந்தக் கதையில் ‘கதவு’ என்ற விஷயத்திற்கு முக்கியத்துவமே தரப்படவில்லை. ஆனாலும், கிர்ரென்ற சவுண்ட் எபெக்ட் உடன் ஒரு கதவைத் திறந்து மூடிப் பயமுறுத்தும் ஒரு ஷாட்டை கொண்டிருக்கிறது இப்படம். அதைத் தவிர, இப்படத்திற்கும் டைட்டிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பேய்ப்பட ரசிகரா நீங்கள்..?!

இப்படத்தில் பாவனாவோடு ஸ்ரீரஞ்சனி, நந்து உட்படச் சுமார் ஒரு டஜன் கலைஞர்கள் நடித்திருக்கின்றனர். அவர்களில் வெகு சிலர் மட்டுமே நம் பொறுமையைச் சோதிக்காமல் தங்களது நடிப்பு பணியைச் செவ்வனே செய்துவிட்டுச் செல்கின்றனர்.

ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராமன், சங்கீதா போன்ற தெரிந்த முகங்களோடு சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில் வேலவன் உள்ளிட்ட சில புதிய கலைஞர்களும் இதில் இருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் கௌதம் ஜி, கலை இயக்குனர் கார்த்திக் சின்னுடையான் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பே இப்படத்தின் பட்ஜெட்டை மறக்கச் செய்கிறது.

படத்தொகுப்பாளர் அதுல் விஜய் இப்படத்தின் பின்பாதியில் காட்டிய கவனத்தில் பாதியைக் கூட முன்பாதியில் வெளிப்படுத்தவில்லை.

இசையமைப்பாளர் வருண் உண்ணியின் ரீரிக்கார்டிங், பேய் படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் ‘டெம்ப்ளேட்’டான உணர்வை நமக்குத் தருகிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெய்தேவ். உண்மையைச் சொன்னால், இப்படத்தின் கதைக்கரு நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கக்கூடியது. ஆனால், அதற்கேற்ற உள்ளடக்கம் ‘தி டோர்’ திரைப்படத்தில் அமையவில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் இப்படத்தை வெளியிட முடிவு செய்தவர்கள் அதற்காகவும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்..!

‘டிமான்டி காலனி’ போன்ற திரைப்படங்கள் ‘ஹாரர்’ வகைமையின் அடிநாதத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்றவை அப்பின்னணியில் அமைந்து பயமுறுத்துவதோடு சிரிக்கவும் வைத்திருக்கின்றன. ‘யாமிருக்க பயமே’ போன்ற படங்களும் கூட, பேய்களுக்கான வரலாற்றை விளக்காமல் நம்மை மிரள வைத்திருக்கின்றன.

அவற்றை ஒப்பிட்டு நோக்கினால், ‘தி டோர்’ படத்தின் காட்சிகளைச் சிறு குழந்தைகள் கூட முன்கூட்டியே யூகித்துச் சொல்லிவிடும். பேய்ப்படங்களைத் தீவிரமாக ரசிக்கிறவராக இருக்கிற பட்சத்தில், இப்படம் ‘ஸ்பூஃப்’ ஆகவும் தெரியக்கூடும். அதுவே இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பாவனா தமிழில் நடித்திருந்தும் கூட, அவரது இருப்பு படத்தைக் காக்கவில்லை..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment