நானும்… திருக்குறளும்…!

தந்தை பெரியாரின் பேச்சிலிருந்து ஒரு பகுதி.

புராணக் கருத்துக்களிலும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் தம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக் கருத்துக்கள் ஆட்டம் கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் மூடக் கருத்துக்களை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்துவந்தேன்.

இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு – பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப் பற்றிப் பேசுகிறேன்.

“குறளில் இப்படியிருக்கிறதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய்?” என்று கேட்காதீர்கள். நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில்தான் – நான் குறளை ஆதரிக்கிறேன்; அதை அப்படியே முழுவதையும் ஒத்துக் கொள்ளமாட்டேன்.

குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன்.

ஒரு கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும் என்றால், அந்தக் கடையில் உள்ள எல்லா சாமான்களையும் நாம் வாங்கிக்கொண்டு வருவோமா?

நமக்குத் தேவையான சாமான்களை மாத்திரந்தான் வாங்கிவருவோம்.

அதுபோலவே, குறளில் வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள் என்று கூறுகிறேன்.

திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக்கொள்ள முடியும்.

காலத்திற்கு ஏற்ற முறையில்தான் எண்ணங்களின் விரிவும், கொள்கை திட்டங்களும் இருக்க முடியும். போர் முறைப் பற்றி திருவள்ளுவர் – வில், வாள், வேல், கேடயம் என்ற ஆயுதங்களை வைத்துத்தானே எழுதியிருக்கிறார்? இன்று எழுதப்பட்டால், அணுகுண்டைப் பற்றி எழுதுவார்கள்; நாளைக்கு வேறொன்று.

இந்தப் படியாகத்தானே மாறிக்கொண்டே போகும்! அப்படியிருக்க, எதையும் மாற்றக்கூடாது என்பது என்ன நியாயம்?

ஆரியக் கருத்துக்கள், தத்துவங்கள் நம் நாட்டில் நுழையாதிருந்தால், நமக்குக் குறளே ஆதாரமாக – குறளே நம்முடைய மதமாக இருந்திருக்கும். ஆரியர்கள் திருவள்ளுவரை முதலிலேயே பிறப்பிலேயே இழிந்தவராக ஆக்கிவிட்டார்கள்.

வள்ளுவர் யார், எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்று நிச்சயமாய்க் கூறமுடியாது.

வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்; ஆரியக் கருத்துக்களைக் கண்டிப்பவர்; அவைகளை வெறுப்பவர் என்றுதான் நமக்குத் தெரிகிறது.  அத்தோடு, வள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவராகத் தெரியவில்லை.

இந்தப்படி எல்லோரும் போற்றுவதால்தான் திருக்குறள் ஒரு மதத்தைத் தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கையாள வேண்டிய வழி வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது.

வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியாக நடக்கவேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார்.

மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துக்களை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள்
 தொழாஅர் எனின்.

ஒரு மனிதன் நல்ல அறிவுடையவனாய் இல்லாதிருந்தால், நல்ல அறிவுக்கு ஆட்பட்டிருக்க வில்லையானால் – அறிவோடு நடந்துகொள்ளாவிட்டால், அவன் எவ்வளவு படித்து இருந்தாலும் என்னதான் அந்தப் படிப்பில் அவனுக்குப் பயன் ஏற்பட்டது என்று கூறமுடியும்?

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு, வெறுப்பு இரண்டும் இருக்காதவனுக்குத்தான் மன அமைதி இருக்கும்; விருப்பு, வெறுப்பு இருந்தால் மனிதனுக்கு மன அமைதி இருக்காது என்று கூறுகிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

என்று – பிறப்பினாலே பேதம் இல்லை; பேதம் கற்பிக்கவும் கூடாது; அடுத்து செய்கின்ற தொழிலாலும் பேதங்கள் கற்பிக்கக் கூடாது என்று – ஆரியக் கொள்கையின் அடிப்படைக்கே அடி கொடுக்கிறார்.

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

என்று கூறுகிறார். அதாவது, ஒரு மனிதன் தன் இனத்தவருக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தானானால் – அதாவது, பொதுநலத்துக்குப் பாடுபட வேண்டும் என்று முன்வந்தால், அவன் அந்தக் காரியத்துக்கு ஏற்ற நல்ல காலம் வரட்டும் என்று எண்ணிக் காத்திருக்கக்கூடாது.

இரண்டாவதாக, நாம் இந்தக் காரியத்தில் இறங்குகிறோமே; இதனால் இன்னின்ன கஷ்டங்கள் வருமே! நமக்குப் பலவிதத்திலும் அவமானம் ஏற்படுமே – மானம் போய்விடுமே என்று கவலைப்படக்கூடாது.

அந்தப்படியாகவெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் பொதுவாழ்வில் நாம் செய்யப் புகும் காரியமே கெட்டுவிடும் என்று மிகப் புரட்சிகரமாகக் கூறுகிறார்.

ஏன் புரட்சிகரமாகச் சொல்லுகிறார் என்று கூறுகிறேன் என்றால், மற்றொரு இடத்தில் காலம் பார்த்துச் செய்தால் ஞாலமும் கைகூடும் என்று கூறுகிறார்.

இன்னொரு இடத்திலே, ‘மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்’ போன்று மானம் நீங்குமானால் மனிதன் இறந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்.

மானமிழந்தால் மரணத்தைத் தழுவவேண்டும் என்று வள்ளுவர் கூறுவது ஏன் என்றால், மனிதனுடைய தனி வாழ்வில், அவனது சொந்த வாழ்வில் அவனுக்கு அவமானம் நேரிடின் உயிர்விட வேண்டும்.

உயிரைவிட மானத்தைப் பெரிதென மதித்து நடக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லுகிறார்.

இந்தக் குறள் பொது வாழ்வு பற்றியதாகும். பொதுவாழ்வில் எந்த மக்களின் நல்வாழ்விற்காக – முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறானோ, அந்த மக்களாலேயே வெறுக்கப்படலாம்; பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிடலாம்.

ஆனால், நாம் படுகின்ற பாடுகள் – அடைகின்ற அல்லல்கள் நன்மைக்காகத்தான் என்று கருதி வேலை செய்தால்தான், அவன் எண்ணிய காரியம் ஈடேறுமேயொழிய, மானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் காரியம் கைகூடிவராது என்று கூறுகிறார்.

இந்தப்படியாக வள்ளுவர் மக்களுக்கு நல்வாழ்வின் வழியையும், நல்லொழுக்கத்தையும் கூறுகிறார். இன்றைய தினம் திராவிடர்களுக்கு ஒழுக்க நூல் குறள்தான்.

– தமிழ்நாடு அரசு 2025-ல் வெளியிட்ட ‘அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா’ மலரிலிருந்து.

Comments (0)
Add Comment