ஒன்றுகூடல் இருக்கும்வரை வீதி நாடகம் இருக்கும்!

நாடகக் கலைஞர் பிரளயன்

நாற்பது ஆண்டுகளைக் கடந்து நடைபோட்டு வரும் சென்னைக் கலைக் குழுவுக்குத் தலைமை வகிப்பவர் பிரளயன். அடிப்படையில் கவிஞர், எழுத்தாளர், பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.

ஆனால், ஓய்வறியா நாடகக் கலைஞர் என்பதுதான் அவருடைய முதன்மையான அடையாளம்.

தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழ் நாடகத் துறையில், வீதி நாடகத்தை மிக முக்கியமான ஓர் அங்கமாக, போராட்ட ஆயுதமாக மாற்றிக் காட்டிய கலைஞர். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

1984இல் தொடங்கி 40 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது ‘சென்னைக் கலைக் குழு’. ஒரு மாற்று நாடகக் குழு வெற்றிகரமாக இயங்குவதே வியப்பானது… இது எப்படிச் சாத்தியமானது?

ஒரு போராட்ட வடிவமாக இருந்த வீதி நாடகம், இன்று அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சி பற்றிக் கூற முடியுமா?

மக்களைத் தேடிச்சென்று நடத்தப்படும் வீதி நாடகம், அதிகாரத்தின் முகத்தின் முன்னால் உண்மையைப் பேசும் வடிவம்.

மக்களுடைய பொதுப்புத்திக்கு எதிராகவும் பேசுகிறது. அது தோன்றிய வரலாற்றுப் பின்னணியும் காரணமும் வேறாக இருக்கலாம். ஆனால், இன்று பல தளங்களில் வீதி நாடகம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசாங்கத்தின் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் கீழ் வீதி நாடகம் நடத்தப்படுகிறது.

தொண்டு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக வீதி நாடகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

அதைப் போராட்ட வடிவமாகவே பயன்படுத்திவரும் எங்களைப் போன்ற குழுக்களால் இந்த மாற்றம் சரியா, தவறா என்று சொல்ல முடியாது.

சென்னைக் கலைக் குழுவுக்கு அடையாளமும் பெயரும் பெற்றுக்கொடுத்த நாடகங்கள் எவை?

1987 சர்வதேச இளைஞர்கள் ஆண்டு. அப்போது ராஜரத்தினம் மைதானத்தில் போஸீஸ் வேலைக்கான ஆள் தேர்வின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி மனோகரன் என்கிற இளைஞன் இறந்தார்.

அந்தத் துயர நிகழ்வைப் பொறுக்க முடியாமல் ஒரு கவிதை எழுதினேன். அதையே பின்னர் நாடகமாக்கினேன்.

அந்த நாடகம் எழுப்பிய கேள்விகளுக்காகத்தான் நாங்கள் கைது செய்யப்பட்டோம். அடுத்து ‘பெண்’ என்கிற நாடகம். அவள், பிறப்பு முதல் இறப்புவரை எப்படிப் பாரபட்சமாக நடத்தப்படுகிறாள் என்பதை எடுத்துச் சொன்னது இந்த நாடகம்.

புத்தாயிரத்துக்குப் பிறகு சென்னைக் கலைக் குழு மேடையில் நடத்திய நாடகங்களில் பேசு பொருளானது ‘உபகதை’.

நம்முடைய புராணங்களையும் இதிகாசங்களையும் வீழ்த்தப்பட்ட சாமானிய மக்களின் கண்ணோட்டத்தில் பார்க்கவைத்த நாடகம்.

இது மக்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே மீட்டுக் கொள்வதை உண்மையின் பக்கம் நின்று சித்தரித்தது.

இது இந்திய அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றது.

‘உபகதை’ தெலுங்கில் மொழிபெயர்க் கப்பட்டு பலமுறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

பொருளாதார அறிஞர் அமர்த்திய சென்னின் மகளான அந்திரா தேவ்சென், ‘உபகதை’யின் முதல் இரண்டு அத்தியாயங்களான ‘ஏகலைவன்’, ‘சம்புகன்’ கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘ராமாயணம்’ பற்றிய சிறப்பு இலக்கிய மலரில் வெளியிட்டார்.

ராமாயணம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் பேராசிரியர் பௌலா ரிச்மென் ‘உபகதை’ குறித்து நேர்காணல் கண்டு எழுதியிருக்கிறார்.

நீங்கள் எழுதி, மேடையில் நிகழ்த்திவரும் ‘பாரிபடுகளம்’, ‘வேள் பாரி’ நாவலுக்கு முன்பே எழுதப்பட்டது இல்லையா?

ஆமாம்! சங்க இலக்கியத்தின் அடிப்படையில் எழுதினேன். சேர, சோழ, பாண்டியர்களும் தமிழர்கள். பாரியும் தமிழன்.

அப்படியிருக்க அவர்கள் ஏன் பாரியைக் கொல்ல வேண்டும் என்பதைப் பின்னணியாகக் கொண்டு சமூக வரலாற்றை உருவாக்கம் செய்யும் முயற்சிதான் ‘பாரி படுகளம்’.

புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத் துறை மாணவர்களுக்காக, தேசிய நாடகப் பள்ளியுடன் இணைந்து இந்த நாடகத்தைத் தயாரித்து 2008இல் அரங்கேற்றினோம்; தமிழ்நாட்டில் 14 இடங்களில் மேடையேற்றினோம். ‘சந்தியா’ பதிப்பகம் இதனைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.

டிஜிட்டல் காட்சி யுகத்தில் நாடகத்துக்கான தேவை தற்போது குறைந்துவிட்டதாக  நினைக்கிறீர்களா? 

உண்மையில் டிஜிட்டல் யுகம் பொழுதுபோக்கினை நுகரும் வழக்கத்தையே தலை கீழாக மாற்றிவிட்டது.

எல்லாமே தற்போது உங்கள் கையில் உள்ள செயல் திறன் பேசிகளில் கொண்டு வந்து பாய்ச்சப்படுகின்றன. ஆனால்; நாடகக் கலை, உங்கள் கைபேசியில் வந்து பாய்ச்சப்படாது.

நாடகம் ஏதேனும் ஓரிடத்தில் ஏதேனும் ஒரு தருணத்தில் நிகழும். அந்த நாடக அனுபவத்தை நீங்கள் பெறவேண்டுமெனில் அந்நாடகம் நிகழும் இடத்தில் அந்நாடகம் நிகழும் தருணத்தில் நீங்கள் அங்கே இருக்கவேண்டும்.

ஆமாம், நாடகத்தைப் பார்க்க நீங்கள்தான் மெனக்கெடவேண்டும். ஏனெனில் நாடகம் என்பது நிஜமான உயிருள்ள ஓர் அனுபவம்; தொட்டுணரக்கூடிய அனுபவம்; நாடகக் கலை நிகழ மனித ஒன்று கூடல் அவசியம்.

நாடக அனுபவம் என்பது மக்களின் உற்சாகமான ஒன்று கூடலில்தான் தான் கிடைக்கும். அது நிகழும் கால இட ஓர்மைதான் அதன் தனித்துவம்.

இதை வேறு எந்தக் கலை வடிவத்திடமும் பெறமுடியாது. ஒரு சமூகமாக, குழுவாக மனித ஒன்றுகூடல் எப்போதுவரை இருக்குமோ அப்போதுவரை நாடகம் என்கிற கலைவடிவமும் வாழும்.

_நன்றி: இந்து தமிழ் திசை 

Comments (0)
Add Comment