கவிஞர் ராசி அழகப்பன்: வயதை வெல்லும் வாலிபர்!

- பால சாண்டில்யன்

செஞ்சிக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே உள்ள ஒரு சிறிய ஊர் இராயம்பேட்டை. நெசவாளர் சமூகத்தில் இருந்து இன்று இலக்கிய மற்றும் திரையுலகில் ஒளிரும் நட்சத்திரம் தான் நமது நாயகர் நண்பர் ராசி அழகப்பன் அவர்கள்.

ராசி என்பது இன்று ஒரு பிராண்ட். அதை உருவாக்கிட இவர் பெரிய சிரமங்கள் மேற்கொண்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர் வி.சேகர், தமிழகத்தின் காவல்துறை தலைமை அதிகாரி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் படித்த வேட்டவலம் பள்ளியில் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்துள்ளார்.

இவருக்கு பள்ளிப் பருவத்திலேயே வாசிக்கும் மற்றும் கவிதை எழுதும் பழக்கமும் ஆற்றலும் இருந்திருக்கிறது. அதனை ஊக்குவித்து இவரை மேம்படுத்தியது இவரது ஆசிரியர் திரு கே.அரிகிருட்டினன் அவர்கள் தான்.

அப்போதே இவர் உவமைக் கவிஞர் சுரதா அவர்களிடம் இருந்து பெற்று இருக்கிறார்.

இவர் கல்லூரிக் காலம் தொட்டே பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி என்று எல்லாவற்றிலும் கலந்துகொண்டு பரிசு பெறுவார்.

அப்போது நான் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் இருந்து அப்படியான போட்டிக்கு சென்று பங்கு பெறுவேன். அது 1978-79 சமயம்.

என்னுடன் நண்பர் திரு ராஜசிம்மன் அவர்கள் எங்கள் கல்லூரியின் மாலைக் கல்லூரி மாணவர். நாங்கள் இருவரும் நிறைய பரிசுகள் வென்று இருக்கிறோம்.

மற்றபடி அந்த சமயத்தில் பிற கல்லூரிகளில் இருந்து த.ராமலிங்கம், சுதா சேஷன், மற்றும் எங்கள் சீனியர்களாக வருவார்கள்.

அந்த சமயத்திற்குப் பின்னர் நான் நண்பர் ராசி அழகப்பன் அவர்களை உரத்த சிந்தனை அமைப்பின் நிகழ்ச்சியில் தான் சந்தித்து எங்கள் நட்பைப் புதிப்பித்துக் கொண்டோம்.

இப்போது ராசி அவர்களின் உயரமே வேறு. இலக்கியம், ஊடகம், சினிமா என்று பலதுறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து நிற்கிற அற்புத மனிதராக இருக்கிறார். அதன் பின்னால் எத்தனை கடின உழைப்பு அவரே அறிவார்.

இவரது முதல் சிறுகதை ஒன்றுக்கு அரும்பு மாத இதழ் முதல் பரிசு வழங்கியது. பின்னர் இலக்கியவீதி அமைப்பின் சிறுகதைப் பரிசு என்று இவருக்கு பரிசு மழை தொடங்கி விட்டது.

ஆனந்த விகடன் இவரது ‘விருட்சம்’ என்ற கதைக்கு ரூபாய் 5000/- பரிசு வழங்கி முத்திரைக்கதை வரிசையில் பிரசுரம் செய்தது.

தினமணி கதிர் சிறுகதைப் போட்டி, ஸ்டேட் வங்கி இலக்கியப் பரிசை இவர் மூன்று முறை பெற்றுள்ளார்.

கல்லூரியில் படிக்கும் பொழுது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒட்டர் தெருவில் இவர் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்துள்ளார்.

அதுபோல இன்றும் பல கல்லூரிகளில் சென்று எழுச்சியுரை ஆற்றுகிற வல்லமை படைத்தவராக உள்ளார்.

உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரதி பற்றியும் கவிதை பற்றியும் உணர்ச்சிமிகு உரைகள் பலமுறை நிகழ்த்தி வருகிறார்.

இவரது நூலுக்கு ‘கவிதை உறவு’ அமைப்பின் விருது கிடைத்துள்ளது. உரத்த சிந்தனை ஆடிட்டர் என்.ஆர்.கே விருது இவரது நூலுக்கு கிடைத்தது.

எல்லாவற்றிற்கும் மகுடம் போல இவரது ‘ராசி அழகப்பன் கவிதைகள்’ நூலுக்கு தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு கிடைத்த பொழுது இவர் பெரிய வெளிச்சத்திற்கு வந்து விட்டார்.

இவரது ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படத்திற்கு சிறந்த குடும்ப நெறிமுறைகளுக்கான திரைப்படம் விருது கிடைத்தது.

அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் மணிமேகலை பிரசுரம் சார்பாக இவருக்கு மிக முக்கியமான ‘தமிழ்வாணன் விருது’ மற்றும் ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.

பாரதிதாசன் வாழ்வும் படைப்பும் என்று ஒரு மணி நேர ஆங்கிலத்தில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் குறும்படம்; தவிர மேலும் பல குறும்படங்கள் எடுத்துள்ளார்.

தவிர, இவரது ‘குழந்தைகள் பாராளுமன்றம்’ என்ற சிறுகதையை தேர்வு செய்த சாகித்திய அகாதெமி அமைப்பு, இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தது இவரது மகுடத்தில் ஒரு சிறகு எனலாம்.

ஏற்கனவே பல ஆண்டுகள் சாவி இதழோடு தொடர்பில் இருந்து தொடர்ந்து படைப்புகள் வழங்கிய இவர், கமலஹாசன் அவர்களின் மையம் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல, இவர் அபூர்வ சகோதரர்கள், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன், விருமாண்டி, மைக்கேல் மதன காமராஜன் போன்ற பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். ‘குகன்’ எனும் திரைப்படத்தை இவரே இயக்கியுள்ளார்.

இவரது ‘சைக்கிள்’ எனும் சிறுகதையை ‘குரங்கு பெடல்’ எனும் திரைப்படமாக மாறியது. அது இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இவர் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் சினிமா, அரசியல் போன்ற தலைப்புகளில் ஒரு இயக்குநர் மற்றும் அரசியல் விமர்சகர் என்ற முறையில் தொடர்ந்து கொள்கிறார்.

இவரால் தினமும் ‘சும்மா’ இருக்க முடியாது. ஒரு நாள் பாண்டிச்சேரி முதல்வர் அருகில் இருப்பார், ஒரு நாள் ஸ்டுடியோவில் பாட்டு எழுதுவார், ஒருநாள் இவரே பாடுவார், ஒருநாள் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை வழங்குவார்.

இவருக்கு ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சி தினமுமே செய்தாக வேண்டும். உள்ளூரில் வீதிகளில், கடற்கரையில், வெளியூர் சென்றாலும் அங்கே ஓடுவார். அதனைப் புகைப்படம் எடுத்து பிறரை அப்படி செய் என்று மறைமுகமாகத் தூண்டி ஊக்குவிப்பார்.

பல நேரம் பெரிய பெரிய ஆளுமைகளுடன் தேநீர் அருந்திக் கொண்டு பற்பல விஷயங்களை விவாதிப்பார்.

மிகவும் துறுதுறுப்பான எழுச்சிமிகு இளைஞர் நமது ராசி அழகப்பன் அவர்கள்.

இவர் தொடாத துறைகளே இல்லை என்பதற்கு சான்று தான் இவரின் அண்மை ப்ராஜெக்ட்.

‘கனவை விதைக்கலாம் வா’ என்று 30 சிறார் பாடல்கள் எழுதி அவற்றை முறையாக இசையமைத்து ஆல்பம் தயாரித்துக் கொண்டு இருக்கிறார். சில பாடல்களை இவரே பாடியுள்ளார்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று இதுவரை 50+ நூல்கள் எழுதியுள்ளார். சிறுவர் நாடக நூல் ஒன்றும் இதில் அடக்கம்.

இதுவரை இவர் 10 திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார். தனிப்பட்ட விதத்தில் மூன்று ஆல்பங்களுக்கான பாடல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். ஆச்சரியம் என்னவென்றால் இவர் நடிக்கவும் செய்துள்ளார்.

மகளிர் மட்டும், ஜேம்ஸ் பாண்ட், மைக்கேல் மதன காமராஜன் போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் தோன்றியுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் திரைப்படம் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆக, ஒரு கிராமத்தில் இருந்து வந்த இளைஞர், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பொன்னான வாய்ப்பாக மாற்றிக்கொண்டு நல்லதொரு உதாரணமாக விளங்குகிறார் என்றால் அது மிகையல்ல.

பெயர் ராசியோ, ஊர் ராசியோ அல்ல இவரது வெற்றிக்கு காரணிகள். முழுக்க முழுக்க உழைப்பு, உற்சாகம், புதிய சிந்தனைகள், பல்வேறு தொடர்புகள்,

விடாமுயற்சி, தோல்விகளை கண்டு துவளாமை, எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் எல்லோருடனும் பழகுதல், கடுமையான உழைப்பு,

பல பெரியோர் மற்றும் பிரமுகர்களுடன் தொடர் தொடர்பில் இருந்து அவர்களோடு இணைந்து பயணிக்கும் ஆற்றல் மற்றும் மனோபாவம் எல்லாமே இவரை இந்த இடத்திற்கு நகர்த்தி முன்னேற்றியுள்ளது.

எப்போதும் எளிமையாக இருப்பதால் தான் இவரது முகவரி இப்போதும் நகரத்தில் ‘விலேஜ் ரோட்’ என்று எனக்குத் தோன்றும்.

நல்ல கணவர், நல்ல தந்தை, நல்ல நண்பர் என்பதைத் தாண்டி உற்சாகமான நல்ல மனிதர் என்று இவரைக் கூறலாம். இவரது மக்கள் தொடர்பு இவரது சமூக வலைத்தளங்கள் (முகநூல் பதிவுகள்) மூலம் நாம் அறியலாம்.

மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்கிற இவரது வேட்கை நிச்சயம் இவரை இன்னும் உயரத்தில் கொண்டு போய் சேர்க்கும். பல அங்கீகாரங்கள் இவருக்கு காத்துக் கொண்டிருப்பது கண்களுக்குத் தெரிகிறது.

இன்றே முன்கூட்டியே இவரை வாழ்த்தி வைப்போம் இந்த பதிவின் மூலம். நீங்களும் இவரை வாழ்த்துங்கள் இந்த தமிழ்க் காதலரை, கவிஞரை, படைப்பாளரை.

Comments (0)
Add Comment