சினிமாவில் எனக்குப் போட்டியாக இருந்தவர் ஜோதிகா!

நடிகை சிம்ரன்
சினிமாவில் எனக்குப் போட்டியாக இருந்தவர் ஜோதிகா!

‘வி.ஐ.பி.’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நடிகை சிம்ரன். அழகு, நடிப்பு இவற்றுடன் சிறப்பான நடனத்தையும் கொடுத்த இவர், ரசிகர்களைக் கட்டிப்போட்ட 90களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தார்.

சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட பல படங்கள்,  இவருக்கு தனித்துவமான நடிகை என்ற அடையாளத்தைக் கொடுத்தன. 

ஒரு வார இதழுக்கு அவர் அளித்த நேர்க்காணலில் இருந்து ஒரு பகுதி.

“முன்பு சினிமா துறைக்குள் நடிகையாக வருவதே கஷ்டம். ஆனால், எளிதாக வெளியே போய்விடலாம். அப்போது அதிக படங்கள் எடுக்க மாட்டார்கள். இப்போது நிறைய படம் எடுக்கிறார்கள்.

தற்போது எளிதாக ஒருவர் உள்ளே வந்துவிடலாம். ஆனால், தம்மை தக்கவைத்துக்கொள்வது அவரது கையில்தான் இருக்கிறது. போட்டி அதிகமாகிவிட்டது.

சினிமாவில் நடிக்கணும்னு வந்தால், நெருப்பு மாதிரி ஆர்வமா இருக்கணும், சும்மா வரக்கூடாது. சினிமாவில் நிலைத்து நிற்கணும் என்ற உறுதியான எண்ணத்தோடு வந்தால், நூறு சதவீதம் நின்றுவிடலாம்.

நான் இப்போது வந்தாலும், நல்ல நடிகையாக நின்றிருப்பேன். காரணம், நான் அதற்கேற்ற மனநிலையில் தான் இருந்தேன்.

சினிமாவில் நடிக்க விரும்புபவர்கள் நடனத்தில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். காமெடி ரோலில் நடிக்கத் தெரிஞ்சிருக்கணும். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு.

பொதுவாகவே, நான் கேமரா ‘ஆன்’ ஆனதும் வேறு ஒரு நபராக மாறிவிடுவேன். மன அழுத்தம் இருந்தால் கூட அப்போது மாயமாகிவிடும்.

சாதாரணமாக, மன அழுத்தமாக தோன்றும்போதெல்லாம் நான் சினிமாதான் பார்ப்பேன்.

‘வாலி’ படத்தில் நடித்த அனுபவம் நன்றாக இருந்தது.

எனக்கும் அஜித்துக்கும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்.

அஜித் நடித்துக் கொண்டிருக்கும் போது, நான் எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுப்பார்.

எஸ்.ஜே. சூர்யா சொன்னபடி நான் நடித்தேன் அவ்வளவு தான்.

அதேபோல், ‘பஞ்ச தந்திரம்’ படத்திலும் கே.எஸ்.ரவிகுமார் சார் சொல்லிக்கொடுத்தபடி நடித்தேன். ‘பம்மல் கே. சம்பந்தம்’ படம் முழுக்க மவுலி சார் வழிகாட்டுதல் படி, இப்படி இயக்குனரின் நடிகைதான் நான். அவங்க சொல்வதை நாம் மேம்படுத்தி நடிக்கனும்.

அதே மாதிரி, கதை கேட்கும்போது, அது நம் கண் முன்னாடி ஓடனும், நடிக்கும்போது அதை ‘பீல் பண்ணணும். அந்த உணர்வு வரவில்லை என்றால், கதையைத் தான் சரிப்படுத்தியாகணும்.

’12பி’ படத்தில் நானும், ஜோதிகாவும் சேர்ந்து நடித்தோம். அப்போது எங்களுக்கு இடையில் ஓர் ஆரோக்கியமான போட்டி இருந்தது. நானும் அவரும் நல்ல தோழிகள்.

என் தங்கச்சி மாதிரின்னு கூட சொல்லலாம். ஆனால் நடிப்பில் அவரது பாணி வேறு, என்னுடைய பாணி வேறு. அழகான, ஜாலியான கேரக்டர் ஜோதிகா வால்தான் பண்ண முடியும். நான் பல கனமான பாத்திரங்களிலும் நடிச்சிருக்கேன்.

எனது அடையாளமாக பலர், இடுப்பை கூறுவார்கள். அதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை, சந்தோஷந்தான்.

நான் ‘பிட்’டாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படவே செய்கிறேன்.

இடையில்தான் பூசணிக்காய் மாதிரி கொஞ்சம் வெயிட் ஏறிவிட்டது.

கலகலன்னு குறும்புத்தனமா இருப்பது என் சுபாவம். பள்ளி நாட்களிலேயே நான் இப்படித்தான்.

பள்ளியில் டிராயிங் மாஸ்டர் தூங்கும்போது அவர் முடியையெல்லாம் ‘கட்’ செய்திருக்கேன்.

‘காப்பி’ அடித்ததும் உண்டு. என்னைக் காப்பாற்ற அப்பா பலமுறை பள்ளிக்கு வந்திருக்கிறார்.”  என சிரிப்போடு சொல்லி முடிக்கிறார் சிம்ரன்.

 நன்றி: தேவதை, தினத்தந்தி. 

Comments (0)
Add Comment