இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 48.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் நாடகக்கலை படித்து வந்த மனோஜ், 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ் மஹால்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கினார்.
அதைத் தொடர்ந்து, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி என பல படங்களில் நடித்தார். கடைசியாக ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார்.
‘சாதுரியன்’ என்ற படத்தில் நடிக்கும்போது, அதில் நாயகியாக நடித்த மலையாள நடிகை நந்தனாவை காதலித்த மனோஜ், பெற்றோர் சம்மதத்துடன் அவரை 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதிவதனி, அர்த்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர், 2023-ல் ‘கார்த்திகைத் திங்கள்’ என்ற படத்தை இயக்கினார். இதில் பாரதிராஜாவும் நடித்திருந்தார்.
இதேபோல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘எந்திரன்’ படத்தில் ரஜினி சிட்டி கெட்டப்பில் இருக்கும்போது எதிரில் வசீகரனாக இவர் தான் டூப் போட்டாராம்.
சிட்டி – வசீகரன் என இருவரும் ஒன்றாக வரும் காட்சிகளில் இப்படி இரண்டு ரோல்களுக்கும் மாறி மாறி இவர் டூப் ஆக நடித்து இருக்கிறார்.
தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்த மனோஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இருதய பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், மாரடைப்புக் காரணமாக நேற்று அவர் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மனோஜ் பாரதியின் உடல், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.