தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் களத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும், திமுக கூட்டணி மொத்தமாக அள்ளியது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், இந்தக் கூட்டணி அப்படியே தொடரும் வாய்ப்புகளே அதிகம்.
நேர் மாறாக, எதிர்க்கட்சிகள், பல்வேறு துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, துணைக்கு ஆள் இல்லாமல் துவண்டு கிடக்கிறது.
கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள சீமானின் நாம் தமிழர், திரளான ரசிகர் படையைக் கொண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் எந்த பக்கம் சாய்வதென தெரியாமல் மதில் மேல் பூனையாக நிற்கின்றன.
இந்தச் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். அவரது பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
டெல்லியின் சாகேத் பகுதியில், அதிமுகவுக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்துக்குச் சென்று பார்வையிட்ட பழனிசாமி ‘கட்சி அலுவலகத்தைப் பார்க்கவே டெல்லி வந்தேன்‘ என தெரிவித்தார்.
ஆனால், இரவில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. டெல்லியின் கிருஷ்ணன் மேனன் மார்க் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லம் உள்ளது. அந்த வீட்டில் அவரை இரவு 8.30 மணி வாக்கில் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் இருந்தார்கள். பின்னர், அதிமுக நிர்வாகிகளை வெளியே அனுப்பிவிட்டு, அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் மட்டும் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்
அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டதாக இரு கட்சிகளின் மூத்தத் தலைவர்கள் தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமித்ஷா, நேற்று இரவில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அமித்ஷா, தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில், ’2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் – இந்த அரசு அமைந்த பின், மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும்’ என்று பதிவிட்டுள்ளார்.
வலுவான கூட்டணி அமைகிறது:
பாஜக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே, வட மாவட்டங்களில் வலுவான கட்சியான பாமக உள்ளது.
தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் ஆகியோரும் பாஜக அணியில் தான் இருக்கிறார்கள். தமாகா போன்ற கட்சிகளும் உள்ளன.
அதிமுக தலைமையிலான அணியில் தேமுதிக, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. நாம் தமிழர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் உள்ளிட்டோரும், இந்த அணியில் இணைய வாய்ப்புகள் உண்டு.
மொத்தத்தில் பாஜகவும், அதிமுகவும் முந்தைய கசப்பான நிகழ்வுகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, திமுக அணிக்கு மாற்றாக ‘மெகா’ கூட்டணியை உருவாக்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இரு வலிமையான கூட்டணிகளுக்கு மத்தியில், புதிய கட்சி ஆரம்பித்துள்ள விஜய் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.