விட்டுச் சென்ற படைப்புகளும் கனவுகளும்…!

எழுபத்தைந்து வயதிலும் முதிர்ச்சியின் சலிப்பும், அலுத்துக்கொள்ளும் இயல்புமில்லாமல், இறுதிவரை எழுதிக் கொண்டிருந்த படைப்பாளியான சுந்தர ராமசாமி உடல்நலக் குறைவேற்பட்டு மறைந்திருக்கிறார்.

சிறுவயதில் இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் உடலுடன் துவங்கிய போராட்டம். வெவ்வேறு காலகட்டங்களில் அவருடைய இறுதிக்காலம் வரையிலும் தொடர்ந்திருக்கிறது.

பதினெட்டு வயதில் தமிழை சுயமாகக் கற்றுக் கொண்டு எழுதத் துவங்கி புதுமைப்பித்தனின் அடிச்சுவட்டைப் பிடித்து மேலேறித் தனக்கென்று வளமான மொழிநடையை உருவாக்கிப் படைப்புகளின் மூலம் செழுமைப்படுத்தியவர்.

நேர்ப்பேச்சின் மூலமும், எழுத்தின் மூலமும் தொடர்ந்து படைப்பாளிகளுக்குத் தூண்டுதலை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர், மொழிபெயர்ப்பின் நுட்பம் கூடி உள்வாங்கி வெளிப்படுத்தியவர். படைப்பு மொழியால் பல மொழி கடந்து வாசிக்கப்பட்டவர்.

கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்று பல வடிவங்களில் மொழியைக் கூர்வாள் மாதிரிப் பயன்படுத்தியவர்.

தான் வாழ்ந்த துவக்ககால மதிப்பீடுகளையே பிடித்து புனிதத்துடன் பாதுகாக்க வேண்டும் என்கிற இயல்பில்லாமல் நிகழ்காலத்தின் படைப்புகளுடனும், நிகழ்வுகளுடனும் இடையறாத உறவு கொண்டிருந்தவர்.

பிறப்பால் திணிக்கப்பட்ட கட்டுமானங்களை உயிரிழக்கும் தருணத்தில்கூட உடைக்க வேண்டும் என்று பிரயாசைப்பட்டவர்.

இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால், இவையனைத்தையும் விட அற்புதமான மனிதர்.

சுற்றியுள்ள சமூகத்தை, மனிதர்களை அங்கீகரிப்பது குறித்த கேள்விகளை மீறி, பலவீனங்கள், பலங்கள் என்கிற பாகுபாட்டை மீறி, தன்னைச் சுற்றி அடிக்கடி உருவாக்கப்பட்ட சர்ச்சைகளை மீறி, அதிருப்தியின் விளிம்பிற்குப் போகாமல் நேசித்த கலைஞர் சுந்தர ராமசாமி. காலத்தின் துரு அவருடைய நம்பிக்கைகளில் ஏறவில்லை.

நிறைய கனவுகளோடு நம் முன்பு காலத்தைக் கடந்து போயிருக்கிறார். அவருடைய கனவுகளுக்குச் சாட்சியங்களாக அவரது படைப்புகள் உயிர்ப்புடன் நம் முன் இருக்கின்றன. 

அவர் மூலம் உத்வேகம் பெற்று தன் வழியில் எழுத்தை உணர்ந்த படைப்பாளிகள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குளிர் நடுக்கும் பொழுதில் சிறு தீயை உண்டாக்கிவிட்டு உறங்கச் சென்றிருப்பதைப் போலவே நிகழ்ந்திருக்கிறது சுந்தர ராமசாமியின் மரணமும்.

  • நன்றி : புதிய பார்வை (நவம்பர், 2005)
Comments (0)
Add Comment