மனதின் விஸ்வரூபத்தை மனிதர்களுக்குக் காட்டிய ஹுசைனி!

ஷிஹான் ஹுசைனி. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைபடாத அல்லது அடைக்க முடியாத தமிழ் ஆளுமைகளில் ஒருவர். எளிய பின்னணியில் இருந்து வந்து மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவர்.

எத்தனை வயதானாலும் கற்றலுக்கு முக்கியத்துவம் தந்தவர். எத்தகைய பின்னடைவுகளில் இருந்தும் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைத்துக் கொண்டிருப்பவர்.

அவருடைய வாழ்வைப் பல அத்தியாயங்களாகப் பிரித்தால், ஒவ்வொன்றின் முடிவிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிகள் மிளிர்வதைக் காண முடியும்.

அவர் எதிர்கொண்ட தோல்விகளின் சதவிகிதம் மிகச்சொற்பமாகத்தான் இருக்கும்.

காரணம், மனப்பரப்பின் விசாலத்தையும் அதில் நிறைந்திருக்கும் ஆற்றலின் விஸ்வரூபத்தையும் அவர் உணர்ந்திருந்தது தான்.

எளிய தொடக்கம்!

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. இவரது முழுப்பெயர் சையத் அலி முர்துஸா ஹுசைனி. இவரது தந்தை பேராசிரியராக இருந்தவர் என்றும், தாத்தா கலை ஆர்வலராகர் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அதனால், சிறு வயதில் இருந்தே கல்வியிலும் கலையிலும் விளையாட்டிலும் இவர் சிறந்து விளங்கியிருக்கிறார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பயிலும்போது நடிப்பு, இசை, பேச்சு, பாட்டு தொடர்பான பல்வேறு கலைப்போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை அள்ளியிருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் இஷின்ரியூ கராத்தே கற்பதிலும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார். இதுபோகச் சிற்பங்கள் செய்வது, ஓவியங்கள் வரைவது போன்றவற்றிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

இப்படிப் பன்முகத்திறமை கொண்டவராக இருந்த ஹுசைனி, சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதுகலை பயின்றிருக்கிறார்.

எண்பதுகளில் மதுரையில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்திருக்கிறார் ஷிஹான் ஹுசைனி.

தன்னிடம் இருக்கும் கலை, விளையாட்டு மற்றும் நடிப்புத் திறமையை உலகறியச் செய்யும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அப்படித்தான் தமிழ் திரையுலகில் அவரது அறிமுகம் நிகழ்ந்திருக்கிறது.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் இரண்டொரு காட்சிகளில் வில்லனாக நடித்தவர், அவர் தயாரித்த ‘வேலைக்காரன்’ படத்தில் ரஜினியோடு சண்டைக்காட்சியில் தோன்றினார்.

பின்னர் அமீர்ஜான் இயக்கிய ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’ படத்தில் நாசருடன் இணைந்து முதன்மை வில்லனாக நடித்தார்.

ஆனாலும், ஹுசைனியின் ஆதரவாளர்கள், ரசிகர்கள் அதனை ஏற்கத் தயாராக இல்லை. ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில் பல தற்காப்புக் கலைகளில் அவர் தனது திறன் எத்தகையது என்று வெளிக்காட்டி வந்ததுதான்.

சுமார் 140 லிட்டர் பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீப்பற்ற வைத்தது, 4 ராஜநாகங்களைத் தன்னுடலில் கடிக்க வைத்தது, ஐஸ்கட்டிகளை தலையால் முட்டி உடைத்தது, கைகள் மீது நூற்றுக்கணக்கான கார்களை ஏறச் செய்தது உட்படப் பல சாதனைகள் இவர் வசமுண்டு.

அவற்றைச் சாதனைகள் என்று சொல்வதைவிட, இவரது கராத்தே பயிற்றுவிக்கும் திறமைக்கான கவன ஈர்ப்பு செயல்பாடுகள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

இதன் பலனாக, கிட்டத்தட்ட 7 நாடுகளில் சுமார் 554 கராத்தே பயிற்றுவிக்கும் பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவற்றில் கராத்தே பயின்றிருக்கின்றனர். அவர்களில் சுமார் 2,300 பேர் ‘பிளாக் பெல்ட்’ பயிற்றுநர்களாக இருக்கின்றனர். சர்வதேச அளவில் 70 கராத்தே சாம்பியன்களையும் இப்பள்ளிகள் தந்திருக்கின்றன.

அதேபோல, இந்த இஷின்ரியூ கராத்தே முறையில் இந்திய மற்றும் ஜப்பானிய பாரம்பரியத்தைக் கொண்ட ஆயுதங்களைக் கையாள்வதிலும் ஷிஹான் ஹுசைனி வல்லுநராக விளங்கியிருக்கிறார். அதனைத் தனது மாணவர்களில் சிலருக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.

டேக்வாண்டோ கலையின் நிறுவனரான ஜென் சோய் ஹாங் ஹியிடம் இவர் ஐந்தாவது டிகிரி பிளாக் பெல்ட் பெற்றிருக்கிறார்.

மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, தனது மத்திம வயதுகளில் சர்வதேசப் புகழை ஈட்டியிருக்கிறார். ஒரு எளிய தொடக்கத்தைக் கொண்டு அதனைச் சாதித்தது ஆச்சர்யமான விஷயம் தான்.

ஒரு அடையாளமாக உருவானார்!

தொண்ணூறுகளில் ஷிஹான் ஹுசைனி தன்னை ஒரு பிராண்டாக நிறுவத் தொடங்கினார் என்றே சொல்லலாம். அதுவரை அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியிலான வாழ்வை விமர்சனம் செய்த பலர், அதன்பின்னர் அவரது சாதனைகளால் அவருக்கு நெருக்கமானவர்களாக உணர்ந்தார்கள் என்றும் சொல்லலாம்.

அந்தக் காலகட்டத்தில், அவரது கராத்தே பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. டேக்வாண்டோ கலையிலும் தனது திறமையை அவர் நிரூபிக்கத் தொடங்கினார்.

சகோதரர் இஷாக் ஹுசைனியைத் திரையுலகில் நாயகராக அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். ‘மை இந்தியா’ படத்தையும் தயாரித்தார்.

சிறு வயதில் வில்வித்தையில் பயிற்சி பெற விரும்பிய ஷிஹான் ஹுசைனி, சில காரணங்களால் அதனைச் செயல்படுத்தும் முடிவைக் கைவிட்டார்.

பின்னாட்களில் அதிலும் தனது மனதைச் செலுத்தத் தொடங்கினார். கூடவே ஓவியம், சிற்பங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார்.

தனது ரத்தத்தை தானம் செய்து, அதனைக் குளிர்வித்து சுமார் 11.3 லிட்டர் ரத்தத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவத்தை ஆக்கினார். அது, அந்த நேரத்தில் சர்ச்சையாகவும் மாறியது. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் சிலையை ஆக்கியிருக்கிறார்.

நவீன ஓவியங்கள் மீது கொண்ட ஆர்வத்தில், தனது கற்பனைத்திறனில் அந்த வகையில் பலவற்றை வரைந்திருக்கிறார்.

இது தவிர கிதார், வயலின் வாசிப்பது, பாடல்கள் இசைப்பது போன்ற திறமைகளும் இவரிடத்தில் இருந்தன. தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகப் பேசுவதில் திறமையாளராக இருந்திருக்கிறார்.

இப்படிப் பல துறைகளில் இவர் வித்தகராக விளங்கியதற்குத் தனது மனதின் ஆற்றல் குறித்து அவர் கொண்டிருந்த நம்பிக்கையே காரணம். அதனால், தன்னை ஒரு ’மனப் பயிற்சியாளர்’ என்று அடையாளப்படுத்த விரும்பியிருக்கிறார்.

ஒருவர் ஒரே நேரத்தில் பல துறைகளில் சாதனை படைப்பது சாதாரண விஷயமல்ல. அசாதாரண உழைப்பு, தொடர் முயற்சிகளோடு அபாரமான மன வலிமையும் அதற்குத் தேவை. அதனை உணர்ந்தே, தனது மாணவர்கள் அனைவரும் முழுமையாகத் தங்களது மனதின் ஆற்றலைத் தெரிந்துகொள்ள வலியுறுத்தி வந்திருக்கிறார்.

‘உன்னால் முடியும்’ என்ற எண்ணத்தை ஒவ்வொருவரிடத்திலும் விதைப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

2020-ம் ஆண்டுவாக்கில் தென் கொரிய வில்வித்தை அணிக்கு மனப்பயிற்சி அளிப்பவராகப் பணியாற்றியிருக்கிறார்.

அப்போது கிடைத்த அனுபவமே, இந்திய வில்வித்தைக் குழுவும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டுமென்ற ஆசையை இவருக்குள் விதைத்திருக்கிறது.

அப்படித்தான் இவர் தமிழ்நாடு வில்வித்தை கூட்டமைப்பின் நிறுவனராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்திருக்கிறார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வில்வித்தை பயிற்சி மையத்தில் பயின்ற பலர் மாநில, தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

இத்தனைக்கும் நடுவே சமூக ஆர்வலராகவும் பல சேவைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார் ஷிஹான் ஹுசைனி.

நாட்டியம் குறித்த உரையாடல்களைப் பல நடன ஜாம்பவான்களுடன் நிகழ்த்தியிருக்கிறார்.

தொலைக்காட்சியொன்றில் சமையல் குறித்த நிகழ்ச்சியில் சமையலராகத் தோன்றியிருக்கிறார்.

தொண்ணூறுகளின் பிற்பாதியில் மருதநாயகம், ஜீன்ஸ் போன்ற திரைப்படங்களில் பிரபலங்களின் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும் நிறுவனமொன்றையும் நடத்தி வந்திருக்கிறார்.

அங்கு கிடைத்த பயிற்சியும் அனுபவங்களும் இன்று பலரை கார்பரேட் நிறுவனங்களில் உயர்தர பாதுகாப்பு அளிக்கும் நிறுவனங்களில் பணியாற்ற வைத்திருக்கிறது.

இந்த தகவல்கள் எல்லாம் நமக்கு ஆச்சர்யத்தை அளிப்பவையாக இருக்கும். காரணம், நம்மவர்களில் பலருக்கு அவரை ஒரு திரைப்பட நடிகராக, கராத்தே மாஸ்டராக, அவ்வப்போது செய்திகளில் இடம்பிடிக்கிற ஒரு ஆளுமையாக மட்டுமே தெரிந்திருக்கும்.

இப்படி ஷிஹான் ஹுசைனி தன்னைப் பலவிதங்களில் அடையாளப்படுத்த முயன்றிருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

அது தொடர்பாக மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டன.

அப்போதும் கூட, நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்திக்கொண்டு பாதிப்பிலிருந்து மீண்டு வரும் உத்வேகத்தோடு தென்பட்டார் ஷிஹான் ஹுசைனி. அப்படிப்பட்ட ஆளுமை இன்று நம்மிடையே இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி.

அனைத்தையும் தாண்டி, வெவ்வேறுபட்ட துறைகளில் தனது சீரிய முயற்சியை வெளிப்படுத்தி வெற்றிகள் பல கண்ட அவரது வாழ்வு அடுத்து வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கக்கூடியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மனதின் விஸ்வரூப ஆற்றலை மனிதர்களுக்கு உணர்த்துகிற முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவராக, அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment