கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!

“சமூகவாதக் கல்வி தான் இந்த சமூகத்தை செம்மைப்படுத்த உதவுமேயன்றி தேசியவாதக் கல்வி அல்ல” என்கிறார் பேராசிரியர் ஜவஹர் நேசன்.

******

11  மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு தேர்வுகள்‌ முடியும்‌ நாளன்று மாணவர்கள்‌ அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல, பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும்‌, வெளியேயும்‌ உள்ளூர்‌ காவல்‌ நிலையங்கள்‌ மூலம்‌ காவலர்களைப் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்திடுமாறு பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த உத்தரவு இப்போது பேசுபொருளாகியுள்ளது.

17 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் இந்த செய்தி என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

காவல் நிலையம் என்பது சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து மக்களின் பாதுகாப்புக்கும் சமூகத்தின் பாதுகாப்புக்கும் துணை நிற்பது. குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது என்று தான் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

மாணவர்கள் தேர்வு எழுதச் செல்வது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தின் பாதுகாப்பு உதவியை நாடுவது என்பது எத்தகைய துயரம் என்பதை கல்வி குறித்து கவலை கொள்ள வைக்கிறது.

சம்மந்தப்பட்ட பள்ளி, பெற்றோர் இவர்களைச் சார்ந்து தான் மாணவர்கள் இருக்க வேண்டும், அதை விடுத்து இப்படி ஒரு அறிவிப்பு நமது கல்வி முறையின் மீது நம்பிக்கை இழக்க வைக்கிறது.

மாணவர்களை மாணவர்களாக வாழ விடாமல் குற்றவாளிகளாக உருவாக்கி வைத்துவிட்டதா இந்தக் கல்வி முறை என்று சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

மாணவர்களை மன அழுத்தத்தில் வைத்திருக்கும் கல்விச் செயல்பாடுகளே இங்கு செயல்படுத்தப்படுகின்றன என்பதை உறுதி செய்வதாகத் தோன்றும் செய்தியாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது.

இது குழந்தைகளின் கல்வி உளவியல் சார்ந்த சிக்கல், கல்விக்குள் இருக்கும் சமூகச் சிக்கல் இவற்றைக் களைந்து உண்மையான சமூகவாதக் கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், சமூகத்தை நேசிப்பவர்கள் என அனைவரும் இதை முன்னெடுக்க முன்வர வேண்டும்.

இல்லையென்றால் எதிர்கால சந்ததியின் சமுதாயத்தை வீழ்ச்சியடையச் செய்த குற்றத்திற்கு நாம் ஆளாவோம்.

சு. உமா மகேஸ்வரி.
TNHHSSGTA,
ஆசிரியர்,
கல்விச் செயற்பாட்டாளர்.

Comments (0)
Add Comment