வெண்கலக் குரலுக்கு ஓர் சீர்காழி கோவிந்தராஜன்!

ஊர் பெயரே ஒரு மனிதனை குறிக்கும் பெயராக பரிணமிப்பது அபூர்வம். சீர்காழி என்றதும் எதுகையை தொடரும் மோனையாக நம் மனதில் விரியும் பெயர் கோவிந்தராஜன்.
கோவிந்தராஜன் 1933 ஜனவரி 19-ம் தேதி சீர்காழியில் பிறந்தார். அப்பா சிவசிதம்பரம். அம்மா அவையம்பாள். ஆரம்ப கல்வியை சீர்காழியில் உள்ள வாணி விலாஸ் பாடசாலையில் பயின்றார்.
பள்ளியில் படிக்கும் போதே சீர்காழி கோவிந்தராஜன் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பாடல்களில் அப்போதே பிரபலமாகியிருந்தார். முதலில் தேவி நாடக சபாவில் இணைந்தார்.
பல நாடகங்களில் நடித்தார். அப்போது அவரது மாமா பி.எஸ்.செட்டியார் எல்லீஸ் ஆர்.டங்கனிடம் உதவி இயக்குனராக இருந்தார். அவர் கோவிந்தராஜன் இருக்க வேண்டியது நாடகம் அல்ல சினிமா என்று அவரை சினிமா பக்கம் நகர்த்திக் கொண்டு வந்தார்.
சீர்காழி கோவிந்தராஜன் முதலில் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தார். பிறகு 1949-ல் சென்னை இசைக் கல்லூரியில் பயின்று இசைமணி பட்டம் பெற்றார். அதன் பிறகு சங்கீத வித்வான் பட்டமும் பெற்றார். திருப்பாம்புரம் சுவாமிநாத ஐயரிடம் கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்கள் கற்றுத் தேர்ந்தார்.
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சென்னை சங்கீத வித்வத் சபா (இன்றைய மியூசிக் அகடாமி) நடத்திய பல போட்டிகளில் பரிசுகள் பெற்றார். அன்றைய காலத்தில் அவருக்கு விருப்பமாக இருந்தவை தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, பி.யூ.சின்னப்பா ஆகியோர் பாடிய பாடல்கள் தான்.
1954-ல் வெளியான பொன்வயல் படத்தில் இடம்பெற்ற சிரிப்புதான் வருகுதைய்யா பாடல்தான் சீர்காழி சினிமாவுக்காக பாடிய முதல் பாடல். துறையூர் ராஜகோபால சர்மா இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்.
உண்மையில், இந்தப் படத்திற்கு முன்பு ஜெமினி ஸ்டுடியோவின் அவ்வையார் படத்தில் சீர்காழி ஆத்திச்சூடி பாடியிருந்தார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறாமல் போனது.
பிறகு வந்த திரைப்படங்களில் அவர் பாடிய மாட்டுக்கார வேலா…, கல்லிலே கலைவண்ணம் கண்டார்…, உள்ளத்தில் நல்ல உள்ளம்…, காதலிக்க நேரமில்லை…, தேவன் கோவில் மணி…, ஆடி அடங்கும் வாழ்க்கை…, பணம் பந்தியிலே…, வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா… போன்ற பாடல்கள் அவருக்கு நிலைத்த புகழை பெற்றுத் தந்தன.
இசை என்றால் நுண்ணிய நாதமாக குரல் ஒலிக்க வேண்டும் என்ற கருத்து நிலவிய காலத்தில் தனது வெங்கல குரலால் அதனை மாற்றி எழுதியவர் சீர்காழி கோவிந்தராஜன். இசை விமர்சகர் சுப்புடு ஒருமுறை பேசுகையில், ‘சீர்காழிக்கு மைக் தேவையில்லை. அவர் மாங்காட்டில் நின்று பாடினால் மகாபலிபுரத்தில் கேட்கும்’ என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.
ஏவிஎம்மின் ராமு படத்தில் இடம்பெற்ற, கண்ணன் வந்தான்.. ஒரு எவர்கிரீன் ஹிட் பாடல். அதில் ஆன்மிக முதியவர் ஒருவர் பாடுவார். பிறகு அதனையொட்டி ஜெமினிகணேசன் பாடுவதாக காட்சி. முதியவர் குரலுக்கு சீர்காழி பாடிவிட்டார்.
ஜெமினிக்கு குரல் கொடுக்க பலரை முயன்றும் யாருடைய குரலும் சீர்காழியின் குரலுக்கு சமமாகவில்லை. அது மலையென்றால் மற்றவர்கள் குரல் மடுவில் ஒலித்திருக்கிறது. கடைசியில் சிங்கக் குரலோன் டிஎம் சௌந்தர்ராஜனை பாட வைத்து ஒலிப்பதிவு செய்தார்கள்.
காத்திருந்த கண்கள் படத்தில் இடம்பெற்ற, ஓடம் நதியினிலே கீழ் ஸ்தாயியில் அமைந்த பாடல். பொதுவாக பிபி ஸ்ரீநிவாஸ் பாடுவது. அதை எம்எஸ்வி சீர்காழிக்கு தருகிறார். ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்தால் ஒன்றிரண்டு இசைக்கலைஞர்கள் தான் இருக்கிறார்கள்.
என்ன இது ஆர்கெஸ்ட்ரால ஆளே இல்ல என்று அவர் வருத்தத்துடன் குறிப்பிட, எம்எஸ்வி அவர் தொண்டையை செல்லமாக தொட்டு, ‘எனக்கு வேண்டிய ஆர்கெஸ்ட்ரா இங்க இருக்கு’ என்று சொல்லியுள்ளார். அந்தப் பாடல் ஒரு மைல் கல்லாக இன்றும் நிலைத்திருக்கிறது.
சீர்காழி 1963-ல் நடராஜர் தரிசனம் என்ற படத்தில் நந்தனராக நடித்தார். ஆனால், அந்தப் படம் வெளியாகவில்லை. 1967-ல் அவர் நக்கீரராக நடித்த கந்தன் கருணை திரைப்படம் வெளியானது. அதுவே அவர் நடித்த முதல் படமாகும்.
அகத்தியர், ராஜராஜ சோழன், திருமலை தென்குமரி என வரிசையாக பல படங்களில் சீர்காழி நடித்தார். விரைவிலேயே பாடகராகவும், நடிகராகவும் புகழ்பெற ஆரம்பித்தார்.
சீர்காழி சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், தேசபக்தி பாடல்கள் என 8000-க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். இசைமணி என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தெய்வம் எங்கே என்ற படத்தையும் சீர்காழி ஆரம்பித்தார். அவரது குரு சுவாமிநாத பிள்ளையும், அவரது குடும்பமும் படத்தயாரிப்பை எதிர்க்க, படத்தயாரிப்பை கைவிட்டார்.
குரல்வளம் என்பது பிறவியிலேயே அமைகிற கொடை. சிலர் அதனை பயிற்சியின் மூலம் சிறப்பாக்குகிறார்கள். ஆனால், பரம்பரையாக குரல்வளம் கிடைப்பது அரிது. மாறாக சீர்காழி கோவிந்தராஜனின் மகன் சீர்காழி சிவசிதம்பரமும் தந்தையையொத்த குரல்வளத்துடன் பாடல்கள் பாடுவது சிறப்பு.
1988 மார்ச் 24 அன்று தனது 55 வது வயதில் சீர்காழி மாரடைப்பால் உயிரிழந்தார். இசையுலகில் அவர் விட்டுச் சென்ற இடம் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது.
– நன்றி: நியூஸ் 18 இணைய இதழ்
Comments (0)
Add Comment