‘புதையலை பூதம் காக்கும்’ என்பதை நம்பாதவரா நீங்கள்?

ஓர் இடத்தில் புதையல் இருந்தால் அந்த புதையலை யாரும் எடுக்க விடாமல் தடுக்க, கூடவே ஒரு பூதமும் இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம்.

சின்ன வயதில் நாம் கேட்ட பாட்டி கதைகளில் புதையல் காக்கிற பூதங்கள் நிறைய வந்திருக்கும்.

ஒரு பெரிய புதையலையோ, அரியதொரு பொருளையோ பழங்காலத்திலே அக்கடாவென்று அப்படியே விட்டுவிட்டுப் போகிற வழக்கம் கிடையாது.

புதையலுக்குக் காவலாக யாரையாவது அல்லது எதையாவது வைத்துவிட்டுப்போகிறதுதான் வழக்கம்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி திருக்கோயிலில் அங்கிருக்கும் புதையலை எடுக்கவிடாமல் பி சேம்பர் அறைக்கு முன்னால் இரண்டு நாகபாம்பு உருவங்கள் செதுக்கப்பட்ட கதவு இருக்கிறது.

நாகபந்தனம் செய்யப்பட்ட அந்த கதவு கருடமந்திரம் சொன்னால்தான் திறக்கும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.

‘இண்டியா ஜோன்ஸ் தி லாஸ்ட் குருசேட்’ என்கிற படத்தைப் பார்த்திருந்தால் அதில் ஒரு காட்சி உங்களுக்குக் கண்டிப்பாக இன்னும் நினைவிருக்கும்.

இயேசு கிறிஸ்து திராட்சை ரசம் பருகிய ஹோலி கிரெய்ல் என்கிற புனித கிண்ணம் ஒரு மலைக்குகைக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதைப் பாதுகாக்க ரொம்ப ரொம்ப வயதான சாகவே சாகாத சிலுவைப்போர் காலத்து நைட் வீரர் ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பார்.

லார்ட் ஆப் த ரிங் படத்தில் கூட ஒரு மலைப்பகுதியிலே இருக்கிற புதையலை ஸ்மாக் என்கிற டிராகன் காவல் காப்பதாகக் காட்டப்பட்டிருக்கும்.

(ஐரோப்பிய மொழிகளில், டிராகோன் (Drakon) என்ற சொல் காவலாளியைக் குறிக்கும். டிராகனில் இருந்துதான் டிராகோன் வந்திருக்க வேண்டும்.)

கரிபியன் பகுதி கடற்கொள்ளையர்களிடம் அந்தகாலத்தில் ஒரு நல்ல பழக்கம் இருந்திருக்கிறது. தங்கக் கட்டிகள், தங்க நாணயங்களை ஒரு பெட்டியில் போட்டு ஏதாவது ஒரு தீவில் அவர்கள் புதைத்து வைப்பார்கள்.

அந்த புதையல் பெட்டிக்கு சற்றுமேலே தங்கள் ஆள் ஒருவரையே சேம் சைடு கோல் போட்டு கொன்று புதைத்து விடுவார்கள்.

கொல்லப்பட்ட அந்த கடற்கொள்ளைக்காரரின் ஆவி அந்த புதையலை காவல் காக்கும் என்பது நம்பிக்கை. தவிர, யாராவது இந்த புதையலை தோண்டி எடுக்க வந்தால் முதலில் அவர்களை நோக்கி கபகபவென சிரிக்கப் போவது மண்டையோடும், எலும்புக்கூடும்தான்.

புதையல் தேட வந்தவர் தெறித்து ஓடிப்போய்விடுவார். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

அமெரிக்காவிலே செரூக்கி என்கிற செவ்விந்திய இனத்தவர்கள் வாழ்ந்த ஒரு மலைப்பகுதி குகைக்குள்ளே ஸ்பானிஷ்காரர்களின் புதையல் இருப்பதாக நம்பி ஒருவர் உள்ளே நுழையப் பாரத்திருக்கிறார்.

அது நிலத்தடி குகை. அவர் நுழையப் பார்த்தபோத ஒரு கை அவரைத் தடுத்து நிறுத்தி, ‘அப்படியே திரும்பிப் போயிடு. உள்ளே இருக்கிறது புதையல் இல்லை. மரணம் மட்டும்தான்’ என்று அவரை எச்சரித்திருக்கிறது. அவர் தலைதெறிக்க ஓடி வந்துவிட்டார்.

புதையல்களைப் புதைத்து வைக்கிற இடத்திலே அதை காவல் காக்கிற பூதத்துக்காக சிலர் தின்பண்டங்களைப் படையல் போட்டு புதைத்து வைப்பது உண்டு.

காகம் அந்த படையலைக் கண்டுபிடித்து அதை எடுப்பதற்காக மூக்கால் மண்ணைத் தோண்டும் என்றுகூட ஒரு நம்பிக்கை இருக்கிறது.

(அடுத்தமுறை காகம் மண்ணைத் தோண்டுறதைப் பார்த்தீங்கன்னா அதை துரத்திட்டு நீங்க தோண்டுங்க ப்ரோ. புதையல் கன்பார்ம்)

நான் இவ்வளவு சொன்னபிறகும் ‘என்னங்க பதிவு இது? பூதமாவது புதையலைக் காக்கிறதாவது?’ என்று நினைக்கிறவரா நீங்க?

உங்களுக்கு பூதம் புதையல் விடயங்களில் நம்பிக்கை வருவதற்காகச் சொல்கிறேன்.

‘இந்தியாவில், தொழிலாளர் வைப்புநிதியில் 8,500 கோடி ரூபாய் பணம் இதுவரை பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது’ என மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே அண்மையில் தெரிவித்திருக்கிறார்.

உங்களுக்கு பழைய பி.எஃப். தொகை எதுவும் இருந்து, பி.எஃப். அலுவலகத்துக்குப் போய் அந்தப் பணத்தை திரும்பப்பெற முயற்சி செய்து பாருங்களேன்.

அங்கிருக்கும் பூதங்கள் உங்களை அவ்வளவு எளிதில் பணத்தை எடுக்க விடாது. அப்படியே உங்களை அலைக்கழிக்கும்.

அப்புறம், புதையலை பூதம் காக்கும் என்ற நம்பிக்கை கண்டிப்பாக உங்களுக்கு ஏற்பட்டுவிடும்.

ஆரம்பத்தில் நான் கூட பூதம் புதையல் காக்கும் என்பதை எல்லாம் நம்பாமல்தான் இருந்தேன். இப்போது நம்புகிறேன். நம்ப வச்சிட்டாங்க!

– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment