அறிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமானின் கதை, முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் கதை, மயிலுக்கு போர்வை அணிவித்த பேகனின் கதை இப்படி மனித வாழ்வின் விழுமியங்களை கதைகள் கடத்திகொண்டே இருக்கின்றன.
கதை உரைக்கப் பெருகும் என்பதே உண்மை நாம் ஒரு கதையை சொல்லசொல்ல அது அடுத்த அடுத்த பரிணாமத்தில் பெருகிக்கொண்டே இருக்கும்.
கதைகள் என்பது வெறும் பொழுது போக்கிற்காக சொல்வது மட்டும் அல்ல. கதைகள் நாள்தோறும் மனிதர்களை பண்படுத்துவது. மெருகேற்றுவது.
கதைகள் வாழ்க்கைக்கு அவசியமா
முதலில் நம் எதிர்வினை என்பது கதையடிக்காத என்பதே.
ஆனால் உண்மையில் அதைச் சொல்லலாமா என்றால் உளவியல் நிபுணர்கள் கூடாது என்றே எச்சரிக்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் தினமும் அவர்களிடம் கதைபேசி, கதை சொல்லச் சொல்கிறார்.
நாள்தோறும் இரவு படுக்கும்போது குழந்தைகளிடம் நாம் கதை சொல்ல வேண்டும். கதைகள் என்பது குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
நாம் சொல்லும் கதைகள் அவர்களின் குணங்களை உருவாக்குவதிலும், அவர்களின் நற்பண்புகளை வளர்ப்பதிலும், அவர்களின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதிலும், கற்பனை திறனை தூண்டுவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.சரி எதுவெல்லாம் கதை
கதை என்பதற்கு கால் இல்லை என்பதே உண்மை. கதை சொல்வதற்கோ, கேட்பதற்கோ, எழுதுவதற்கோ எந்த வரையறையும் உருவாக்கப்பட வில்லை. நாம் சொல்லும் அனைத்தும் கதைகள்தான்.
கதைகள் வழியாக ஒரு மனிதன் தன் வாழ்வின் உள்ள மொத்த அறிவையும் தன் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறான்.
கதைகள் நம்மை சுற்றி மரங்கள் செடி கொடிகளின் உயிர்ப்பை, விலங்குகளின் குணாதிசயங்களை, மனிதர்களின் பாடுகளை என அனைத்தையும் குழந்தைகளுக்கு கடத்துகிறது.
காலப்போக்கில் கதைகளின் வழி வாழ்வின் நெறிமுறைகளையும் நாம் நடத்த தொடங்குகிறோம்
தமிழகத்தின் ஆதி கதைகள்
தமிழகத்தில் இன்றும் காக்கா கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற எழுதப்படாத கதைகள் இருந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் அது ஒருவகையில் கதையல்ல பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் கப்பல் பயணத்தின் போது திசையை கண்டறிய காக்கையைப் பயன்படுத்தி உள்ளனர்.
அந்த கதை தலைமுறை தலைமுறையாக இன்றும் கிராமத்து திண்ணையில் இருக்கும் ஏதோ ஒரு கிழவியால் சொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
அதேபோல் கிடைப்பதற்கு அறிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமானின் கதை, முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் கதை, மயிலுக்கு போர்வை அணிவித்த பேகனின் கதை இப்படி மனித வாழ்வின் விழுமியங்களை கதைகள் கடத்திகொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் உலகம் முழுவதும் இந்த கதை சொல்லலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் 1991ல் சுவீடன் நாட்டில் இலக்கிய அன்பர்களால் ‘அனைத்துக் கதை சொல்லிகள் நாள்* என்று தொடங்கப்பட்டது.1997ல் ஆஸ்திரேலியாவில் ஐந்து வார கதைக் கொண்டாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்கெனவே தேசிய கதை சொல்லிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 2002ல் ஸ்காண்டிநேவியா இலக்கிய ஈடுபாட்டாளர்கள் ‘ராட்டாடோஸ்க்’ என்ற பெயரில், கதை சொல்வதற்கென்றே ஒரு வலைத்தளத்தைத் தொடங்கினார்கள்.
இப்படி படிப்படியாக எடுக்கப்பட்ட முயற்சி ஒரு கட்டத்தில் மார்ச் 20 ம் தேதி உலக கதை செல்லல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அடுத்த தலையை அறத்தின் பக்கம் நின்று வாழ வைக்கும் கதையை நாம் ஒவ்வொருவரும் சொல்ல முயல்வோம்
தலைமுறை தலைமுறையாய்
முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கைப் பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று கதைகள்தான் இன்றைய தலைமுறைகளுக்குத் தெரியப்படுத்தி வருகின்றன.
இன்றைய தலைமுறைகளின் ஏக்கங்களை நீங்களாவது நிறைவேற்றுங்கள் என்று கதைகள்தான் நாளைய தலைமுறைகளுக்குத் தெரியப்படுத்தப் போகின்றன.
கனவுலகத்திற்குள் குழந்தைகளை இட்டுச் செல்லும் மாயக்கதைகள் முதல், நனவுலகத்தை நல்லபடியாக்குவதற்குக் கொண்டுசெல்லும் மகத்தான படைப்புகள் வரையில் இது உயிரோட்டமாகத் தொடர்கிறது.
கொரோனாவால் வீட்டுக்குள் விரட்டப்பட்ட வாழ்க்கையின் கசப்புகளை மாற்றியதில் இணையவழி கதை சொல்லல் நிகழ்வுகளுக்குப் பெரும் பங்கு உண்டு.
குறிப்பாகக் குழந்தைகளுக்குக் கதை சொல்கிற குழுக்கள் உருவாகி, நேரலைத் தளங்களில் சிறார் இலக்கியங்களை அவர்களிடம் கொண்டுசென்றன.
குழந்தைகளுடன் பேசுகிற அத்தைகளும் மாமாக்களும் பாட்டிகளும் தாத்தாக்களும் புறப்பட்டு அவர்களைக் கதைகளால் அணைத்துக்கொண்டார்கள்.
குழந்தைகளே கதை சொல்கிறார்கள். தாங்கள் படித்த கதைகளைச் சொல்லத் தொடங்கியவர்கள், தாங்களே படைத்த கதைகளையும் சொல்கிறவர்களானார்கள்.
அந்தக் கதைகள் அச்சுப் புத்தகங்களாகவும், மின்னியல் நூல்களாகவும், அச்சுப் புத்தகங்களிலேயே காணொளி அனுபவத்திற்கு இட்டுச்செல்கிற புதிய தொழில்நுட்பங்களோடும் வெளிவந்திருக்கின்றன.
நண்பர் குழுக்களும், இலக்கிய அமைப்புகளும் ஆழமான கதை சொல்லல் நிகழ்வுகளுக்கு இணையத்தள மேடையமைத்துக் கொடுத்தன.
நேரடியாக மக்கள் முன் மேடையேறிக் கதை சொல்லி உணர்ச்சிமயமாக்கியவர்கள் இப்போது இணையத்தள மேடைகளின் நேரலைகளில் தோன்றினார்கள்.
பார்வையாளர்களின் எதிர்வினைகளை நேருக்கு நேர் காண்கிற அனுபவத்திற்கு நிகராகாது என்றாலும், இடைக்கால மாற்றாக இந்த மேடை கைகொடுத்தது.
கதைகள் இடம்பெற்ற புத்தகங்களையும், படைப்பாளிகளின் இதர புத்தகங்களையும் வாசிக்கிற விருப்பம் தூண்டப்பட்டிருக்கிறது.
களமாடுவோர் கவனத்திற்கு
கதையாசிரியர்கள் போலவே கதை சொல்லிகளிலும் தனித்திறனோடு உலா வருகிற நட்சத்திரங்கள் ஒளிர்கிறார்கள்.
படைக்கிறவர்களுக்கும் கேட்கிறவர்களுக்கும் இடையே அவர்கள் சொற்பாலம் அமைக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமல்ல, எல்லோருமே ஏதோவொரு வகையில் கதை சொல்லிகள்தான். நடந்தது என்ன என்று கேட்கிறவர்களிடம் நடந்ததை நடந்தபடியே யாரும் சொல்வதில்லை.
ஏற்ற இறக்கங்களோடு, உணர்ச்சி கலந்துதான் சொல்கிறோம். அப்படிச் சொல்கிறபோதே எதை வெளிப்படுத்தலாம், எதை உள்ளேயே வைத்துக்கொள்ளலாம் என்று தேர்வு செய்து சொல்கிறோம்.
இதை இப்படிச் செய்திருந்தால் அப்படியாகியிருக்காது என்ற விமர்சனத்தையும் சேர்த்துச் சொல்கிறோம்.
நீங்களாவது புரிந்துகொண்டு இனிமேல் சரியாகச் செய்யுங்கள் என்ற நேரடி அறிவுரையோடு அல்லது உள்ளார்ந்த உணர்த்துதலோடு சொல்கிறோம்.
இப்படி ஏற்ற இறக்கங்களோடும், உணர்ச்சி கலந்தும், தேர்வு செய்தும், விமர்சனம் சேர்த்தும், உணர்த்துவதுதானே இலக்கியம்?
நாட்டுப்புறக் கதைகள், புராணக் கதைகள், இதிகாசக் கதைகள், வரலாற்றுக் கதைகள், வாழும் காலத்துக் கதைகள், அறிவியல் புனைவுக் கதைகள், உளவியல் புரிதலுக்கான கதைகள் என அனைத்துவகை கதை இலக்கியங்களும் இதைச் செய்துவந்திருக்கின்றன.
சமூகத்தைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிட விரும்புகிறவர்கள் இருக்கிறார்கள்தான்.
பழைய நாட்காட்டிகளுக்குத் திரும்ப முடியாவிட்டாலும் சமூகத்தைப் புதிய தேதிகளுக்குப் போகவிடாமல் இப்படியே வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறவர்களும் கதைபேசும் உத்திகளைக் கையாளுகிறார்கள்.
பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவன வளாகங்களில் கூட கதை சொல்லல் நிகழ்த்தப்படுகிறது. வெற்றிகரமான அரசியல் தலைவர்களின் உரைகளில் நிச்சயமாகக் கதைகள் இருக்கும்.
கதை எழுதுகிறவர்களும் சொல்கிறவர்களும் மட்டுமல்லாமல், சமூக மாற்றங்களுக்காகக் களமாடுவோர் எல்லோருமே இதையும் கவனத்தில் கொண்டு கதையாட வேண்டியிருக்கிறது.
- நன்றி : முகநூல் பதிவு