இசையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இளையராஜா!

பிரதமர் மோடி புகழாரம்

1976-இல் வெளியான ‘அன்னக்கிளி’ என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் இளையராஜா. திரையிசைத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் விரைவாகப் பிரபலமானாா்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளாா்.

மேற்கத்திய செவ்வியல் இசையில், சிம்பொனி என்னும் இசை வடிவத்தின் கூறுகளுடன் கூடிய பாடல்களையும் இசைக்கோவைகளையும் இளையராஜா உருவாக்கினாா்.

இந்த நிலையில், வேலியன்ட் என்னும் சிம்பொனி இசைக்கோர்வையை கடந்த ஆண்டு இளையராஜா உருவாக்கினாா்.

மாா்ச் 8-ஆம் தேதி லண்டனில் உள்ள அந்த வேலியன்ட் இசைக்கோர்வையை ராயல் பில்ஹாா்மானிக் இசைக் குழுவுடன் இணைந்து அரங்கேற்றினாா்.

இதன் மூலம் முழு அளவிலான சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியா் எனும் சாதனையை இளையராஜா படைத்தாா்.

இந்த சாதனைக்காக இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் விழா எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறாா்.

இந்நிலையில் டெல்லியில் பிரதமா் மோடியை இளையராஜா நேற்று (18.03.2025) சந்தித்தாா். அவரிடம், சிம்பொனி இசைத்தது குறித்து பிரதமா் மோடி ஆா்வத்துடன் கேட்டுள்ளாா்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமா் தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

“நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி.

இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவா், சில நாள்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளாா்.

இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது. உலக அளவில் தொடா்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது” என்று  பாராட்டியுள்ளாா்.

Comments (0)
Add Comment