1965-ம் ஆண்டில் ஒரு நாள்…
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில், நடந்து வந்து கொண்டிருந்தார், புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர்.பி.கே.ஆர் வாரியார் அவர்கள்.. அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர் இருப்பதை கவனித்தார், டாக்டர் வாரியார். தனது கண்களை நம்ப முடியவில்லை அவரால், மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார்.
ஆமாம், அவர்கள் வேறு யாரும் இல்லை. டாக்டர்.வாரியார் அவர்கள் சந்தேகப்பட்டது சரியே. அங்கே… அந்த திண்ணையில் இருந்தவர்கள், மார்க்சீய அறிஞரும், உலக வரலாற்றில், முதன்முறையாக, தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர், மக்களின் தோழருமான தோழர் ஈ. எம். எஸ். அவர்களும், அவரது மனைவியாரும் தான். அவர்கள் அருகில் ஒரு சோற்று பாத்திரமும் இருந்தது.
டாக்டர்.வாரியார் அவர்கள், ஓடிச்சென்று, தோழரிடம் சென்று, என்ன ஏது என்று விசாரித்த போது, தங்களது மகன், அனியன் என்ற இ.எம்.ஶ்ரீதரனுக்கு, ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார் தோழர் ஈ.எம்.எஸ். கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வருக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவதற்கு தயாராக இருப்பதாக, டாக்டர்.வாரியார் தோழரிடம் கூறினார்.
ஆனால், அதை மிகவும் நாகரீகமாக, மறுத்துவிட்டார் தோழர் ஈ.எம்.எஸ் என்ற எளிய தோழர்! பண்பட்ட, தொழிலாளி வர்க்க பண்பாடு………..!
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, டாக்டர்.வாரியார் ஈ.எம்.எஸ். தம்பதியினரை தனது வீட்டுக்கு உணவுக்கு வருமாறு அழைத்தபோது, தங்களிடம் இருந்த சோற்று பாத்திரத்தைச் சுட்டி காட்டியபடி, தங்களது உணவை, தங்களது வீட்டிலிருந்து எடுத்து வந்துள்ளதாக கூறினார் தோழர் ஈ.எம்.எஸ் என்ற எளிய தோழர்.
டாக்டர் வாரியார், தனது வீட்டுக்கு சென்று உணவுக்கு பிறகு திரும்பி மருத்துவமனைக்கு வரும்போது, அதே திண்ணையில் அமர்ந்து, தங்களது உணவை உண்டு கொண்டிருந்த, தோழர் ஈ.எம். எஸ். அவர்களையும், அவரது மனைவியையும், பிரமிப்பை அடக்க முடியாமல் கடந்து சென்று கொண்டிருந்தார், டாக்டர்.வாரியார்.
இப்படியும் தலைவர்கள் இருந்தார்கள்….
*ஐ.வி.தாஸ் எழுதி, கேரள பாஷா இன்ஸ்டியூட் வெளியிட்ட “ஈ.எம்.எஸ் வாழ்க்கையும், காலமும்” என்ற நூலில், டாக்டர்.பி.கே.ஆர். வாரியார் எழுதிய ஒரு கட்டுரை…
ஏனோ, இன்று இதை எழுத வேண்டும் என்று தோன்றியது…
- பத்திரிகையாளர் தோழர் விஜயசங்கர் பதிவு
#ஈஎம்எஸ் #ஐவிதாஸ் #ஈஎம்எஸ்வாழ்க்கையும்காலமும் #Drவாரியார் #ஈஎம்எஸ். #DrPKRvaariyar #டாக்டர்பிகேஆர்வாரியார் #தோழர்ஈஎம்எஸ் #கேரளா #கம்யூனிஸ்ட் #ems #ivdoss #ems #emsvaazhkaiyumkaalamum #EMSNamboodiripad