மெல் ராபின்ஸ் எழுதிய “ஐந்து விநாடி விதி” (The 5 Seconds Rule) புத்தகத்தை முதலில் எடுத்தபோது, இதுவும் வழக்கமான சுய உதவி புத்தகமே என்று நினைத்தேன். ஆனால் 248 பக்கங்கள் முடிந்தபோது, இது சிந்தனையைச் சிக்கல் எடுக்கும் முயற்சி இல்லை, செயல் பற்றியது என்பதைப் புரிந்துகொண்டேன்.
ஒவ்வொரு அத்தியாயமும் நீங்கள் செய்ய நினைத்திருந்த நல்ல விஷயங்களைக் கொஞ்சமேனும் செய்யத் தூண்டுகிறது.
விமானப் பயணத்தின்போது இரண்டாவது முறையாக இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கணத்தில் கண்களை மூடிக்கொண்டேன். புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல கதைகளை நினைத்தேன்.
சாதாரண மக்கள், ஐந்து விநாடிகள் இந்த விதியைப் பின்பற்றி தங்கள் வாழ்க்கையைக் கொஞ்சமேனும் மாற்றிக்கொண்ட கதைகள்.
“அதுவா, அதுதான் எனக்குத் தெரியுமே!” என்று நாம் எத்தனை முறை ஆலோசனைகளை வீணடித்துவிடுகிறோம்! தெரிந்தால் மட்டும் போதாது; செயல்படுத்தி, பின்னூட்டம் பெற்று, செம்மையாக்கி வழக்கப்படுத்த வேண்டும்.
அப்போது உணர்ந்தேன்: செயல் என்பது சிந்தனையின் விளைவு இல்லை. செயல் என்பது சிந்தனையின் கிரியாவூக்கி (catelyst). செயல் என்பது சிந்தனையின் பாதையைச் சீர்திருத்துகிறது. செயல் என்பது சிந்தனையின் உரம்.
இந்த விதியின் எளிமை சற்றென்று ஏமாற்றிவிடக் கூடும். திட்டமிட்ட எதையாவது செய்யவேண்டும் என்று மனதில் தோன்றியதும் 5-4-3-2-1 என்று பின்வரிசையில் எண்ணிவிட்டு, சட்டென்று அது தொடர்பான ஏதேனும் ஒரு சிறு செயலைச் செய்ய வேண்டும். ஆமாம், அவ்வளவு தான்.
இது மிகவும் எளிமையானது. வாழ்க்கையின் பெருங்கணங்களின் விதைகள் இந்தச் சிறிய செயல்களில் காத்திருக்கின்றன.
மேற்கத்திய நாடுகளில், ஓர் உணவுப்பொருள் கைதவறிக் கீழே விழுந்துவிட்டால், ஐந்து விநாடிகளுக்குள் எடுத்துவிட்டால் பிரச்சனை இல்லை, சாப்பிடலாம் என்று ஒரு நடைமுறை விதி உண்டு. நெஞ்சத் துணிவுக்கும் செயலுக்கும் கூட ஐந்து வினாடிகள் தந்து மீட்டெடுத்துவிடலாம்.
– மெல் ராபின்ஸ் எழுதிய “ஐந்து விநாடி விதி” (The 5 Seconds Rule) என்ற நூலிலிருந்து.
நன்றி: பயணிதரன் முகநூல் பதிவு