‘சுழல் 2’ – பெண் சக்தி ஒன்றிணைந்தால்…!

வெப்சீரிஸ் பார்ப்பதென்பதே ஒரு அலாதியான அனுபவம். ‘என்னய்யா இப்படியிருக்கு’ என்று சலிப்புடன் முதன்முறையாகப் பார்க்கத் தொடங்குபவர்கள் ‘என்னய்யா இப்படி இருக்கு’ என்று ஒவ்வொரு எபிசோடாக பார்த்துத் தள்ளுவார்கள்.

அப்படியொரு உத்வேகத்தைத் தருவதே சிறப்பாக உருவாக்கப்பட்ட வெப்சீரிஸின் அடிப்படைத் தன்மையாக இருக்கும்.

அந்த வரிசையில் இடம்பிடித்தது புஷ்கர் – காயத்ரி உருவாக்கத்தில் பிரம்மா ஜி மற்றும் அனுசரண் இயக்கத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ‘சுழல்’ வெப்சீரிஸ்.

அந்த இணையத்தொடரில் இரண்டாம் பாகம் பிப்ரவரி 28ஆம் தேதியன்று வெளியானது. புஷ்கர் – காயத்ரி உருவாக்கிய இப்படைப்பை பிரம்மா ஜி மற்றும் சர்ஜுன் ஆகியோர் இயக்கியிருக்கின்றனர்.

முதல் பாகத்தில் இடம்பெற்ற கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இதில் லால், சரவணன், அஸ்வினி அமித் பார்கவ், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், சாந்தினி தமிழரசன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஹரிணி சுந்தர்ராஜன், நிகிலா சங்கர், ஸ்ரீஷா, கலைவாணி பாஸ்கர், அபிராமி போஸ், அஞ்சலி அமீர், ஓஏகே சுந்தர், அருள் சங்கர், பாண்டி ரவி, டெலிபோன் ராஜ், திருமுருகன் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

ஒவ்வொருவரும் அவரவர்க்கான பாத்திரத்தின் தன்மை அறிந்து, சில காட்சிகளே என்றாலும் அதில் நாம் திருப்தியடைகிற வகையில் பெர்பெர்பாமன்ஸை வெளிக்காட்டியிருக்கின்றனர்.

முதல் பாகத்தைப் போன்றே இதிலும் எட்டு எபிசோடுகள் இருக்கின்றன. ‘பெண் சக்தி ஒன்றிணைந்தால் என்னவாகும்’ என்று சொல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது இதன் திரைக்கதை.

 கதை என்ன?

முதல் பாகத்தில் பாலியல் அத்துமீறலுக்குத் தன்னையும் தனது தங்கையையும் உட்படுத்திய உறவினரை நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) கொல்வதாகவும்,

அவரைச் சட்டத்தின் முன்னே இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி என்ற சக்கரை (கதிர்) நிறுத்துவதாகவும் சொல்லப்பட்டிருந்தது.

நந்தினி குற்றம் சாட்டப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வெளியாகும் நாள் அறிவிக்கப்படுவதில் இருந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது. இதன் பெரும்பகுதி காளிப்பட்டினம் எனும் ஊரில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நந்தினிக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் செல்லப்பா (லால்). நேர்மையான ஆள் என்று பெயரெடுத்தவர். காளிப்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர்.

தந்தையைச் சிறுவயதில் இழந்த சக்கரையை வளர்த்து ஆளாக்கியதில் செல்லப்பாவுக்குப் பெரும்பங்கு உண்டு. அதனால், அவரது வீட்டிலுள்ள அனைவரும் பரிச்சயம்.

நந்தினி வழக்கில் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும் என்று செல்லப்பா கூற, ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் சக்கரை அவருடன் காளிப்பட்டினம் செல்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் அஷ்டமாகாளி திருவிழாவைப் பார்க்க விரும்புகிறார்.

அன்றைய தினம் செல்லப்பா வீட்டில் மகிழ்ச்சியாகக் கழிக்கிறார் சக்கரை. இரவில் தனது மனைவியிடம் (அஸ்வினி) கடற்கரையோரமாக இருக்கும் பண்ணை வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் செல்கிறார் செல்லப்பா.

அடுத்த நாள் காலையில் அவரைத் தேடி பண்ணை வீட்டுக்குப் போகிறார் சக்கரை. அங்கு கதவு பூட்டப்பட்டிருக்கிறது.

வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாத காரணத்தால், அங்கிருக்கும் ஜன்னல் ஒன்றை உடைக்கிறார். அதன் வழியே, உள்ளே செல்லப்பா துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கும் காட்சித் தெரிகிறது.

அலறியடிக்கும் சக்கரை, உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் சொல்கிறார். செல்லப்பாவின் மனைவி, மகனுக்கு (அமித் பார்கவ்) விஷயத்தைத் தெரிவிக்கிறார்.

கதவை உடைத்துக்கொண்டு முதலில் சக்கரையும் இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் (சரவணன்) உள்ளே போகின்றனர். செல்லப்பா இறந்து கிடக்கும் விதம், அவர் தற்கொலை செய்து கொண்டது போன்று தோற்றமளிக்கிறது.

உள்ளிருந்து தாளிடப்பட்டிருப்பதே அதற்குக் காரணம். ஆனால், நடந்தது ஒரு கொலை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் சக்கரை.

அந்த நேரத்தில், ஒரு அறையில் சத்தம் கேட்கிறது. அலமாரிக்குள் ஒரு இளம்பெண் ரத்தக்கறையுடன் இருக்கிறார். ‘நான் தான் செல்லப்பாவைக் கொலை செய்தேன்’ என்கிறார்.

அதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை தொடங்குகிறது.

‘செல்லப்பா கொலை பற்றி சக்கரை விசாரிக்கட்டும்’ என்று உத்தரவிடுகிறார் உதவி கமிஷனர். உள்ளூர் இன்ஸ்பெக்டர் மூர்த்தியை அது எரிச்சல்படுத்துகிறது.

இந்த நிலையில், செல்லப்பா மரணம் பற்றித் திடீரென்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. உடனடியாக, காளிப்பட்டினம் அருகேயிருக்கும் சில ஊர்களில் காவல் நிலையங்களில் 7 இளம்பெண்கள் தாமாக முன்வந்து ‘சரண்டர்’ ஆகின்றனர்.

‘நான் தான் செல்லப்பாவைக் கொலை செய்தேன்’ என்று வாக்குமூலம் அளிக்கின்றனர். அனைத்தும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. ஆனால், அதைத் தாண்டி அவர்கள் எதுவும் சொல்வதாக இல்லை.

அவர்களது பெயர், செய்யும் வேலையைத் தவிர வேறெதுவும் போலீசாருக்கு தெரிய வருவதில்லை.

ஆனாலும், உண்மையில் செல்லப்பா கொலைக்குப் பின்னிருக்கும் உண்மை என்ன என்று கண்டறிய முயற்சிக்கிறார் சக்கரை. அவர் மனதுக்குள் ஒரு திட்டம் இருக்கிறது. மூர்த்தி உட்பட அவருடன் இணைந்து பயணிக்கிற எவராலும அதனை அறிய முடிவதில்லை.

செல்லப்பா மரணத்தால் நந்தினி வழக்கு மறுவிசாரணைக்கு உட்படுத்தப்படும் என்ற பேச்சும் கிளம்புகிறது. அது நந்தினியை மனதளவில் உடைத்துப் போடுகிறது.

இந்த நிலையில், நந்தினி இருக்கும் சிறைக்கு விசாரணை கைதிகளாக அந்த எட்டு பெண்களும் அனுப்பப்படுகின்றனர்.

அவர்களை வேவு பார்த்து உண்மை அறியுமாறு, நந்தினியிடம் சொல்கிறார் சக்கரை.

அதன்பின் என்ன நடந்தது? செல்லப்பாவைக் கொலை செய்தது யார்? அதற்கான காரணம் தெரிய வந்ததா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘சுழல் 2’ வின் மீதி.

மெதுவாக நகரும் திரைக்கதை!

‘சுழல்’ முதல் பாகம் விறுவிறுப்பாக நகர்ந்தது என்று சொன்னால், இந்த இரண்டாம் பாகம் அந்த அளவுக்கு இல்லை என்பதை உணர்ந்துவிட முடியும். அதே அளவுக்கு விறுவிறுப்பு இல்லாவிட்டாலும், மெல்லப் பற்றும் தீயாய் நகர்கிறது இதன் திரைக்கதை.

அதேநேரத்தில், முடிந்தவரை எந்தவொரு தகவலும் அம்சமும் விடுபடாமல் இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்த வெப்சீரிஸின் யுஎஸ்பி.

லால், சரவணன், அஸ்வினி, அமித் பார்கவ், ஓஏகே சுந்தர், சாந்தினி, பாண்டி ரவி, அருள் சங்கர், டெலிபோன்ராஜ், திருமுருகன் உட்படப் பலர் இதில் நடித்திருக்கின்றனர். அவர்களது காட்சிகள் ஈர்ப்பைத் தருகின்றன.

சரண்டர் ஆகும் எட்டு பெண்களாக நடித்தவர்களில் கௌரி கிஷன், மோனிஷா ப்ளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஹரிணி சுந்தர்ராஜன், நிகிலா சங்கர் ஆகியோருக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் ஸ்ரீஷா, கலைவாணி பாஸ்கர், அபிராமி போஸ் ஆகியோருக்குத் திரையில் கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், எட்டு பேரையும் காண்பிக்கும் ஷாட்களில் சமநிலை பேணப்பட்டிருக்கிறது.

இது போக அஞ்சலி அமீர், அர்ஷியா லக்‌ஷ்மண் உட்படச் சிலர் சிறைவாசிகளாகத் தோன்றியிருக்கின்றனர். அவர்களது பங்களிப்பும் சில காட்சிகள் நகர உதவியிருக்கிறது.

இது போக மஞ்சிமா மோகன், கயல் சந்திரன் மற்றும் எட்டு சிறுமிகள் சம்பந்தப்பட்ட ஒரு பிளாஷ்பேக் பகுதியும் உண்டு. அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆச்சர்யத்தைத் தரும்.

ஆப்ரகாம் ஜோசப் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

காவல்நிலையம், சிறை, கொலை நிகழும் இடம் மற்றும் சில களங்களைக் காட்டும்போது திரையில் இருண்மையும் ஒளியும் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்குமாறு கவனம் செலுத்தியிருக்கிறார்.

அதேநேரத்தில் காளி திருவிழா காட்சிகளின்போது கொண்டாட்டத்தையும் உக்கிரத்தையும் பெண்சக்தி போற்றுதலையும் நாம் உணரும் வண்ணன் காட்சியாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். அதன்பின்னே இருக்கும் பேருழைப்பு நம்மை வசீகரிக்கிறது.

தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடுவின் பங்களிப்பினால் திருவிழா காட்சிகள் நம்மை மிரள வைக்கின்றன.

படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின், ஒவ்வொரு காட்சியிலும் நிதானமும் அமைதியும் நிரம்பியிருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை இந்த வெப்சீரிஸின் பெரும்பலம். இரண்டாவது எபிசோடு முதல் ஏழாவது எபிசோடு வரை பரபரப்பு அதிகமாவதில் அவரது பங்கு அதிகம்.

இது போக ஓ.கே.விஜய் தலைமையிலான விஎஃப்எக்ஸ் குழுவினர், ஸ்டண்ட் இயக்குநர்கள் திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், ஒலி வடிவமைப்பாளர்கள் பிரபாகரன், தினேஷ் குமார், டிஐ பணி ஆற்றியிருக்கும் சிவகுமார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தமது உழைப்பைச் சிறப்பாகத் தந்திருக்கின்றனர்.

’நல்லவங்க கெட்டவங்கன்னு இல்ல சார், யார் வேணும்னாலும் தப்பு செய்யலாம்’ என்பது போன்ற எளிமையான வசனங்களே இந்த வெப்சீரிஸை சலிப்பின்றி பார்க்கச் செய்கின்றன.

திரைக்கதை நகர்வில் சில ‘கிளிஷேக்கள்’ இருந்தாலும், அதனை மீறிச் சில ஆச்சர்யங்களைப் பொதித்து வைத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றனர் புஷ்கர் மற்றும் காயத்ரி.

காளிப்பட்டினத்தில் நடக்கும் அஷ்டமாகாளி திருவிழா மற்றும் அதன் முடிவோடு இக்கதையின் முக்கிய விஷயங்களைப் பிணைத்திருப்பது அருமை.

ஆனாலும், அதில் ‘செயற்கைத்தனம்’ தெரிவதை மறுக்க முடிவதில்லை. முழுக்க ‘கமர்ஷியலாக’ இப்படைப்பு கையாளப்பட்டிருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்தக் கதையில் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. ‘வில்லன் தரப்பு உடனடியாகச் சுதாரித்து ஏன் எதிர்வினை ஆற்றவில்லை’ என்ற கேள்வி அவற்றில் ஒன்று. ஆனாலும், அதனை ஒரு ‘படைப்பு சுதந்திரம்’ என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தத் தொடரை நம் மனதைத் தொடும் வண்ணம் காட்சிப்படுத்தியதில் இயக்குநர்கள் பிரம்மா ஜி, சர்ஜுன் இருவரும் முதன்மையான இடத்தைப் பெறுகின்றனர்.

‘சுழல் 2’ வெப்சீரிஸைப் பார்த்து ரசிக்க முதல் பாகத்தைப் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இரண்டிலும் ‘பெண்களின் மீதான அடக்குமுறையும் அத்துமீறலும் அவர்களது சக்தியைப் பீறிட வைக்கும்’ என்ற விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், ‘பெண் சக்தி ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் தெரியுமா’ என்று சொல்லப்பட்டிருக்கிற ‘சுழல் 2’ சுவாரஸ்யமான காட்சியனுபவத்தைத் தருகிறது..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment