பெருசு – ‘மூர்த்தி சிறுசுதான்’ ரக கதை!

தமிழில் ‘அடல்ட் கன்டெண்ட்’ படங்களுக்கான வரவேற்பு என்பது குதிரைக்கொம்பை தேடுவதாகவே அமைந்திருக்கிறது. எண்பதுகளில் மலையாளத் திரையுலகில் அப்படியான முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழிலும் சில இயக்குனர்கள் அதனைப் பரீட்சித்துப் பார்த்தார்கள். அவற்றில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அதனைத் தனது படங்களில் ஒரு அம்சமாக எடுத்துக்கொண்டு வெற்றிகள் பலவற்றைப் பெற்றவர் இயக்குனர் கே.பாக்யராஜ்.

அதன்பின் எஸ்.ஜே.சூர்யா அதனைக் கொஞ்சம் லாவகமாகக் கையாண்டார். ஆனால், அவர் நாயகனாக நடித்த படங்கள் ஆபாச எல்லையையும் தாண்டி விரசமாகிப் போனது.

இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது அதனைக் கைக்கொண்டு சில படங்கள் வரத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றாக அமைந்திருக்கிறது புதுமுகம் இளங்கோ ராம் இயக்கியிருக்கும் ‘பெருசு’. இது, சிங்களத்தில் அவரே இயக்கிய ‘டெண்டிகோ’ எனும் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தில் வைபவ், சுனில், நக்கலைட்ஸ் தனம், தீபா சங்கர், பாலசரவணன், சாந்தினி தமிழரசன், நிகாரிகா என்.எம். உள்ளிட்டோரோடு பலர் நடித்துள்ளனர்.

‘அடல்ட் காமெடி’ வகைமையில் அமைந்திருக்கும் ‘பெருசு’ நம்மைச் சிரிக்க வைக்கிறதா? சிரிக்கலாமா என்று யோசிக்க வைக்கிறதா?

‘பெரிய’ கதையல்ல!

ஓரத்தநாடு வட்டாரத்திலுள்ள ஒரு கிராமம். அந்த ஊரில் ‘கெத்தாக’ வாழ்கிற ஒரு பெரியவர் ஹாலஸ்யம். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சாமிக்கண்ணு (சுனில்) ஒரு பள்ளி ஆசிரியர். இளைய மகன் துரைக்கண்ணுவோ (வைபவ்) வேலைக்குச் செல்லாமல் மது போதையிலேயே உழல்பவர்.

சாமிக்கண்ணு தனது மனைவி துளசி (சாந்தினி தமிழரசன்) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். சமூகத்தில் நேர்மையானவராக, கம்பீரமானவராகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்வது இவரது வழக்கம்.

துரைக்கண்ணுவின் மனைவி சாந்தி (நிஹாரிகா) ஒரு மருந்தகத்தில் பணியாற்றுகிறார். இவர்களுடையது காதல் திருமணம். இருவருக்கும் குழந்தைகள் இல்லை.

ஒருநாள் பள்ளிக்குச் செல்வதற்காக, வீட்டிலிருந்து புறப்படுகிறார் சாமிக்கண்ணு. ஏதோ ஒரு சாவியைத் தேடுவதற்காக வீட்டுக்குள் நுழைபவர், டிவியில் அதிக சத்தத்துடன் ஒரு காதல் (?!) பாடல் ஒலிப்பதைக் கேட்கிறார்.

‘அப்பா சத்தத்தைக் குறைங்கப்பா’ என்கிறார். ஹாலஸ்யம் காதில் அது விழவில்லை. அருகே சென்று அவரைத் தட்டுகிறார் சாமிக்கண்ணு. அப்போதுதான் தந்தை இறந்ததைக் காண்கிறார். உடனடியாக, இந்த விஷயத்தைத் தாயிடம் தெரிவித்தாக வேண்டுமென்று எண்ணுபவர் சட்டென்று அந்த சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

சகோதரன் துரைக்கண்ணுவை மொபைலில் அழைக்கிறார். அவரும் தந்தை இறந்த தகவல் கேட்டு கண்ணில் நீர் மல்க வருகிறார். தந்தையின் சடலத்தைக் கண்டவர், அடுத்த நொடியே முகம் மாறுகிறார். காரணம், அவர் காணும் ஒரு காட்சி.

‘அது என்ன’ என்று சொல்வதில் தயக்கமில்லை. ஆனால், அதனை மையமாகக் கொண்டுதான் அடுத்த 110 நிமிடங்கள் திரையில் நகர்கின்றன. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

தந்தையின் மரணத்தை ஊரில் இருப்பவர்களுக்குச் சொல்வதில் சாமிக்கண்ணு, துரைக்கண்ணுவுக்கு ஏன் இந்த தயக்கம்? அவர்களது தாய், மனைவிமார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உண்மை அறிந்ததும் என்ன செய்தனர்?

அதன்பிறகு, எப்போது அவர்கள் ஹாலஸ்யத்தின் மரணத்தை ஊரில் இருப்பவர்களுக்குத் தெரிவித்தனர்? அவரது இறுதி வழியனுப்புதல் எப்படி நிகழ்ந்தது என்று சொல்கிறது ‘பெருசு’வின் மீதி.

உண்மையைச் சொன்னால், இப்படத்தின் கதை பெரியது அல்ல. ஆனால், ‘மூர்த்தி சிறுசானும் கீர்த்தி பெருசு’ என்ற பழமொழியை வழிமொழிவது.

மேற்சொன்ன பழமொழி உங்களுக்குப் பிடிக்குமா என்பது மட்டுமல்லாமல், அதற்கான அர்த்தத்தை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் இப்படம் தாக்கத்தை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ ஏற்படுத்தும்.

அபாரமான காஸ்ட்டிங்!

வழக்கமாக, இது போன்ற ‘அடல்ட் காமெடி’ கதைகளை சினிமாத்தனத்துடன் ‘பளிச்’சென்ற காட்சியாக்கத்துடன் அணுகுவதே தமிழ் திரையுலகின் வழக்கம். ஆனால், இப்படத்தில் ஒரு ‘மெலோட்ராமா’ வகைமையைச் சொல்கிற கதையாக ‘பெருசு’வைத் தந்திருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம். அதனால், படம் முழுக்க ‘யதார்த்தமான கதை சொல்லல்’ தொனி வழிந்தோடுகிறது.

நாமே நேரில் ஒரு துக்க வீட்டுக்குள் நுழைந்தது போன்ற உணர்வைத் தனது பணியின் வழியே உருவாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம்.

படத்தொகுப்பாளர் சூரியா குமரகுரு, தொடர்ந்து ஒரே இடத்தில், வட்டாரத்தில் சில கதாபாத்திரங்கள் இருப்பதை நாம் உணரும் வகையில் ஷாட்களை தொகுத்திருக்கிறார். அதேநேரத்தில், நடித்தவர்களின் ‘காமெடி டைமிங்’ தவறிவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கலை இயக்குனர் சுனில் வில்லுவமங்கலத், ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக், பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் அருண் ராஜ் என்று பல கலைஞர்களின் உழைப்பு இப்படத்தில் நிறைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, மிகச்சில இடங்களில் மட்டுமே ஒலிக்கிறது. அந்த இடங்கள் அனைத்தும் வெடிச்சிரிப்பை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

ஆபாச எல்லையைத் தாண்டுகிற சூழல் நிறைய இருந்தும், அடக்கி வாசிக்கிற தொனியில் அமைந்திருக்கின்றன பாலாஜி ஜெயராமனின் வசனங்கள்.

உண்மையைச் சொன்னால், ‘பெருசு’ காட்சியாக்கம், நமக்குத் திரைப்பட விழாக்களில் கண்ட படங்களை நினைவூட்டும் வகையில் இருக்கும். கேமிரா கோணங்கள், நகர்வு, ஒளியமைப்பு, யதார்த்தம் என்று நம்பவைக்கிற கலை வடிவமைப்பு, புற உலகின் ஒலிகள், கதாபாத்திரங்களின் இருப்பு மற்றும் நடிப்பு என்று பல அம்சங்களைக் கொண்டு அதனை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம்.

அந்த காட்சியாக்க உத்தியே ‘ஒரு அவல நகைச்சுவை திரைப்படத்தைப் பார்க்கிறோம்’ என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

இந்தப் படத்தில் ‘முதியவர் மரணித்துவிட்டார்’ என்ற அவலத்தை, அவரது குடும்பத்தினர் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிற தருணங்கள் நமக்குச் சிரிப்பை ஏற்படுத்தும். முரண் கூடியிருக்கும் இந்த விஷயத்தைத் திரையில் எளிதாகக் கடத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதேநேரத்தில், ‘இதே கதையை இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கலாமே’ என்ற எண்ணமும் எழாமல் இல்லை. ஏனென்றால், முதியவர் இறந்துவிட்டார் என்ற விஷயம் தெரிந்தபிறகும் அவரது உடலைச் சோதனைக்கு உட்படுத்த முடியாமல் கதாபாத்திரங்கள் தடுமாறுவதைச் சொல்லப் பல காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது அயர்ச்சியைத் தருகிறது.

இரண்டாம் பாதியிலும், கதையில் இருக்கும் முடிச்சு எப்படி அவிழும் என்பதை ஒரு ஷாட்டில் சொல்லப் பல காட்சிகள் அரங்கேறுகின்றன.

அந்த காட்சிகளின் வடிவமைப்பில் கொஞ்சம் ‘செயற்கைத்தனம்’ எட்டிப் பார்ப்பது இப்படத்தின் பலவீனம்.

போலவே, கிளைமேக்ஸும் வேறு வழியில்லாமல் எடுத்துச் சேர்க்கப்பட்டிருப்பதாக எண்ண வைக்கிறது.

இது போன்ற ‘மைனஸ்’களை கழித்துவிட்டால், இதிலுள்ள ‘அபாரமான காஸ்ட்டிங்’ எனும் ப்ளஸ் நம்மை ஆக்கிரமிக்கும்.

சுனில், வைபவ் உ டன் இணைந்து தனம், தீபா, பாலசரவணன் ஆகியோரும் தங்களது நடிப்பால் நம்மைச் சிரிக்க வைக்கின்றனர். இதில் நாயகிகள் சாந்தினி, நிகாரிகாவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில்தான் உள்ளது.

இவர்கள் மட்டுமல்லாமல் ஓரிரு காட்சிகளில் ரெடின் கிங்ஸ்லி, கஜராஜ், விடிவி கணேஷ், கருணாகரன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திரையில் தோன்றியிருக்கின்றனர். அவர்களது காட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் கிச்சுகிச்சு மூட்டுகின்றன. லொள்ளு சபா பாணியில் சுவாமிநாதனும் சில இடங்களில் ‘டைமிங் காமெடி’ செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாகவே, இப்படத்தில் நடித்தவர்கள் சிறப்பாகப் பங்களித்திருப்பதால் திரைக்கதையில் இருக்கும் பலவீனங்கள் நம்மைப் பெரிதாகச் சலனப்படுத்துவதில்லை.

பொதுவாக, ‘அடல்ட் காமெடி’ படங்களில் பெண் பாத்திரங்கள் ஆபாசமாகக் காட்டப்படும் அல்லது அது சார்ந்த இரட்டை அர்த்த வசனங்கள் பிரதானமாக இடம்பெறும். ‘பெருசு’ அந்த வகையறா அல்ல; அதேநேரத்தில், ‘விதைச்சப்போ தானே மழை பெய்யணும்’ எனும் தொனியில் பெண் பாத்திரங்கள் பேசுகிற வசனங்கள் சிரிப்பை வரவழைப்பதோடு, கதைக்கும் நெருக்கமானதாக அமையும்.

அந்த வசனங்களைக் கேட்டுச் சிரிக்கத் தயாராக இருப்பவர்களை ‘பெருசு’ ஈர்க்கும். சிரிக்கலாமா வேண்டாமா என்றிருப்பவர்களை இது நிச்சயம் எரிச்சல்படுத்தும்.

நீங்கள் எந்த ரகம் என்பதைப் பொறுத்து ‘பெருசு’ உங்களை வசீகரிக்கலாம் அல்லது ‘புறந்தள்ளுகிற விஷயமாக’த் தோன்றலாம்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment