நிறம் மாறும் உலகில் – மீண்டும் ‘தாய்பாசம்’!

’இந்தக் காலத்துல அம்மா சென்டிமெண்ட் படம்லாம் எடுபடுமா சார்’. இதுபோன்ற பேச்சுகளைச் சமீப ஆண்டுகளில் நிறையவே திரையுலகில் சிலர் கேட்டிருப்பார்கள். கேஜிஎஃப் போன்ற ஆக்‌ஷன் படங்களின் வெற்றியில் தாய்பாசத்திற்கும் இடமுண்டு என்ற உணர்ந்தபிறகே அந்த பேச்சுகள் குறைந்திருக்கின்றன.

போலவே, ‘உலக சினிமா’ என்று நாம் இன்று பார்த்து ரசிக்கிற பல படங்களையொத்த காட்சிமொழியோடு தமிழில் படம் எடுத்தால் ரசிகர்கள் ஆதரிப்பார்களா? அதிலும் ‘ஆந்தாலஜி’ வகையறா கதைகள் எடுபடுமா?

மேற்சொன்ன விஷயங்கள் அனைத்துக்கும் விடையளிப்பது போல வெளியாகியிருக்கிறது புதுமுகம் ஜேபி பிரிட்டோவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிற ‘நிறம் மாறும் உலகில்’.

இதில் பாரதிராஜா, வடிவுக்கரசி, யோகிபாபு, நட்டி சுப்பிரமணியம், சாண்டி மாஸ்டர், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ரியோராஜ், ஏகன், கனிகா, விஜி சந்திரசேகர், மைம் கோபி, துளசி, ஆதிரா, சுரேஷ் மேனன் என்று பெருங்கூட்டமே நடித்திருக்கிறது.

எப்படியிருக்கிறது ‘நிறம் மாறும் உலகில்’ தரும் திரையனுபவம்?

’நி.மா.உ.’ கதை!

சென்னையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது தாயோடு ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டில் இருந்து வெளியேறுகிறார். தோழி வீட்டுக்குச் செல்வதற்காக, எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அமர்கிறார். அந்த ரயிலில் ஒரு டிக்கெட் பரிசோதகரைச் சந்திக்கிறார்.

எதிரில் இருக்கும் பெண்ணுக்குத் தன் தாய் உடன் சண்டை என்று தெரிந்துகொள்ளும் அவர், ‘நிச்சயமாக அந்தப் பிரச்சனை எளிதில் சரி செய்யக் கூடியது’ என்று புரிந்துகொள்கிறார். அதனை அந்தப் பெண்ணுக்கு உணர்த்தும்விதமாக நான்கு கதைகளைச் சொல்கிறார்.

அந்த நான்குமே ‘அம்மா பாசத்தை’ அடிப்படையாகக் கொண்டவை.

முதல் கதையில், மும்பையில் மெதுவாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தாதா பற்றிச் சொல்லப்படுகிறது. அவரது தாய் காமத்திப்புராவில் விலைமாதுவாக இருந்தவர். அவர் தன் கண் முன்னே இறந்த துக்கம் தாங்காமல் அவர் ‘கொலவெறி’ கொண்டவராக மாறுகிறார். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் இருந்து ஆணவக்கொலைக்குப் பயந்து ஒரு காதல் ஜோடி மும்பை வந்து சேர்கிறது. அந்த தாதாவுக்கு எதிராக அந்த ஜோடி களமிறக்கப்படும் சூழல் உருவாக்கப்படும்போது என்ன நேர்கிறது என்பதே மீதி.

இரண்டாவது கதையில், துவரக்குறிச்சியில் வாழும் ஒரு காதல் ஜோடி பற்றிச் சொல்லப்படுகிறது. எழுபதுகளிலும் காதலோடு இருக்கிற ஒரு தம்பதி. அவர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கிய மகன்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்கின்றனர். தாய் தந்தையைக் கவனித்துக்கொள்ள அவர்களுக்கு நேரமில்லை. இந்த நிலையில், நாள் முழுக்க இருவரும் பசியில் வாடுகின்றனர். அதனை உணராமல், அன்றைய தினம் மூத்த மகன் மனைவி, மகளோடு வந்து அங்கு தங்குகிறார். அதன் பின் என்ன நடந்தது என்று சொல்கிறது மீதி.

மூன்றாவது கதையானது, காமேஸ்வரம் எனும் ஊரில் நிகழ்கிறது. மீனவனான கணவனைத் துப்பாக்கிச் சூட்டில் பலி கொடுத்துவிட்டு, தனியாக மகனை வளர்க்கிறார் ஒரு தாய். அவரும் வளர்ந்து இளைஞர் ஆகிறார். அப்போது, அந்த தாய் புற்றுநோயால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அந்த உண்மையை முதன்முறையாக அறிந்ததும் அதிர்கிறார் அந்த இளைஞன். குற்றம் செய்து பணம் பெற்றாவது தாயைக் காப்பாற்றலாம் என்று முடிவெடுத்துச் செயல்படுகிறார். ஆனால், அவரது செயலே தாயின் உயிரைப் பறித்தது என்றறிய நேரிடுகிறது. அதன்பின், அவர் என்ன செய்தார் என்று சொல்கிறது இக்கதையின் மீதி.

நான்காவது கதையானது, யாருமற்ற நிலையில் வாழும் ஒரு இளைஞன் தற்செயலாக ஒரு வயதான பெண்மணியைக் காண்கிறார். அவரைத் தன் அம்மாவாக மனதளவில் நினைக்கிறார். அதற்கு முந்தைய தினம் தான், அவர் ஒரு இளம்பெண்ணிடத்தில் தனது காதலைச் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் தனது வளர்ப்புத்தாயை அழைத்துக்கொண்டு செல்கிறார். அங்கு, அவருக்கு என்னவிதமான வரவேற்பு கிடைக்கிறது என்பதைச் சொல்கிறது இக்கதை.

இந்த நான்கு கதைகளுமே ’அம்மா சென்டிமெண்ட்’ என்பதனை வெவ்வேறு வகையில் சொல்கின்றன. அவை திரையில் சொல்லப்பட்டிருக்கும் விதம் ‘அதீதமாக’த் தோன்றினாலும், அந்த அனுபவங்களைச் செம்மையான திரைமொழியோடு சொல்லியிருப்பதே ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் சிறப்பு.

சிறப்பான ஆக்கம்!

இந்தப் படத்தில் நடித்த கலைஞர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பாராட்டத் தேவையில்லை. ஏனென்றால், நான்கு கதைகளிலும் சிறு பாத்திரங்களில் நடித்தவர்கள் கூடச் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜாவின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் ஷாட்கள் குவிந்து கிடக்கின்றன.

படத்தொகுப்பாளர் தமிழ் அரசன் இப்படத்தைத் தொகுக்க நிச்சயம் சிரமப்பட்டிருப்பார். ‘எடுக்கவோ கோர்க்கவோ..’ என்று யோசிக்கிற வகையில் அவர் ஒவ்வொரு காட்சிக்கும் பல ஷாட்களை தொகுக்க ரொம்பவே யோசித்திருப்பார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகன், ’போய் வாடி’, ‘ஆழி’ என்ற இரண்டு மெலடி பாடல்களோடு ‘ரங்கம்மா’ எனும் குத்து பாடலையும் தந்திருக்கிறார். அப்பாடல்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்குப் பின்னணி இசையை அமைத்திருக்கிறார். சில இடங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளும் விதமாக இசை அமைந்திருக்கிறது. அதனை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.ராம், தினேஷ், சுபேந்தர் என்று மூன்று கலை இயக்குனர்கள் பணியாற்றியிருக்கின்றனர்.

இன்னும் ஒலிக்கலவை, ஒலி வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ், டிஐ, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை என்று ஒவ்வொரு நுட்பத்திலும் பல கலைஞர்களின் உழைப்பு கொட்டப்பட்டிருக்கிறது.

அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, தான் விரும்பிய படமொன்றை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜேபி பிரிட்டோ.

இவரது காட்சியாக்கத்தில் உலக சினிமாவுக்கான திரைமொழி இருக்கிறது என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.

’தான் சொல்ல வந்த கருத்தை வன்மையாகச் சொல்லாமல் இன்னும் கொஞ்சம் மென்மையுடன் கையாண்டிருக்கலாமோ’ என்று யோசிக்க வைப்பது மட்டுமே இந்த படத்தின் மைனஸ்.

இது போக, யதார்த்தத்தை மீறிய சினிமாத்தனம் இக்கதைகளில் தென்படுவதும் கூடச் சிலருக்குக் குறையாகத் தோன்றலாம். சில லாஜிக் மீறல்களையும் கண்டுபிடிக்கலாம்!

‘ஆந்தாலஜி’ என்றால் அம்மா செண்டிமெண்ட் கதைகளுக்கு ஏது இடம் என்று யோசிக்காமல், அவற்றைச் சிறப்பாகத் திரையில் சொன்னதற்காகவே இயக்குனரைப் பாராட்டலாம்.

இந்த படத்தைக் காண அறுபதுக்கு மேற்பட்டவர்கள் நிச்சயம் முயற்சிப்பார்கள். திரையரங்கு வெளியீட்டில் அது சாத்தியப்படாமல் போனாலும் ஓடிடியில் இப்படம் வெளியாகும்போது அது நிச்சயம் நிகழும். ’நிறம் மாறும் உலகில்’ சிறப்பான வரவேற்பை இன்னும் சில நாட்கள் கழித்துப் பெறும்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

#நிறம்_மாறும்_உலகில்_விமர்சனம் #ஜேபி_பிரிட்டோ #பாரதிராஜா #வடிவுக்கரசி #யோகிபாபு #நட்டி_சுப்பிரமணியம் #சாண்டி_மாஸ்டர் #ஆர்_ஜே_விக்னேஷ்காந்த் #ரியோராஜ் #கனிகா #Niram_Marum_Ulagil_Review #Rio #Yogi_Babu #natty #sandy_master #r_j_vigneshkanth #kaniga

Comments (0)
Add Comment