நூல் அறிமுகம்: பண்புடை நெஞ்சம்!
பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும். சிலது ‘இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே’ என்று குற்றவுணர்ச்சியைத் தரும். ‘இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?’ என்று குதர்க்கமாக யோசிக்கவைக்கும்.
அதனால், அறநூல்களை எழுதியவர்கள் சில நுட்பமான உத்திகளைக் கையாண்டிருக்கிறார்கள். அழகழகான உவமைகள், இதைச் செய்தால் அல்லது செய்யாவிட்டால் இது நடக்கும் என்று இடித்துரைத்தல், பெரியவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்று முன்னுதாரணம் காட்டுதல் என்று பலவற்றைச் சொல்லலாம்.
இவையெல்லாம் அறிவுரைகளைக்கூட ஊன்றிப் படிக்கச்செய்கின்றன. இன்றைய மேற்கத்திய மேலாண்மை நூல்களில் நீட்டி முழக்கிச் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களை இங்கே போகிறபோக்கில் மிக எளிமையாக, எல்லாருக்கும் புரியும்படி சொல்லியிருக்கும் மேதைமையை வியக்கலாம். அவை மனத்தில் பதிந்துவிட்டால், வலியச்சென்று பின்பற்றவேண்டிய அவசியம் இருக்காது, எல்லாம் இயல்பாக நடக்கும்.
அப்படியொரு லட்சிய உலகத்தைதான் இந்தப் புலவர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதைச் சமைப்பது சாத்தியமா என்பது தெரியாது. ஆனால் நம்மளவில் சின்னச்சின்ன திருத்தங்களைச் செய்யத் தொடங்குவது சாத்தியமே. அதற்கான வழிகளை எளிமையாகத் தொகுத்துச் சொல்லும் நூல் இது.
*****
நூல்: பண்புடை நெஞ்சம்
ஆசிரியர்: என்.சொக்கன்
எழுத்து பிரசுரம்
விலை: ரூ. 266/-