கவிதை:
நீ மட்டும் தான்…
தத்துவ ஆசான்கள்
அனைவரும்
உலகம் எப்படி இயங்குகின்றது
என பொழிப்புரை எழுதிக் கொண்டு இருந்தபோது
நீ மட்டும்தான் அதை எப்படி
மாற்றுவது என
விளக்கவுரை எழுதினாய்.
ஆன்மீகவாதிகள்
அனைவரும்
ஆத்மாவை கடைத் தேற்றும்
வழியை உபதேசித்துக்
கொண்டிருக்க,
நீ மட்டும் தான்
கடையனைக் கடைத்தேற்றப்
பாதை செய்தாய்.
மதவாதிகள் அனைவரும்
சொர்க்கத்திற்கான
திறவுகோலை
ஏலம் விட்டுக்கொண்டு இருக்க,
நீ மட்டும்தான்
பூமியை எப்படி
சொர்க்கமாக்குவது என
வரைபடம் வரைந்து காட்டினாய்.
அறிவு ஜீவிகள்
அனைவரும்
தன்னை அறிவது எப்படி
எனத் தத்தளித்துக்
கொண்டிருக்க
நீ ஒருவன் மட்டும் தான்
உலகை அறிவது எப்படி
ஓவியம் வரைந்து காட்டினாய்.
கவிஞர்கள் எல்லாம்
உருகி உருகி
காதலைப் பற்றிக்
கவிதைகள் எழுதி
மலையாய்க் குவிக்க,
நீ மட்டும்தான்
காதலை வறுமை
தின்றுவிடாது என
வாழ்ந்து காட்டினாய்.
ஞானிகள் எல்லோரும்
கர்ம பலன் ஜென்மம் தாண்டித்
தொடரும் விந்தையை
விளக்கிக் கொண்டிருக்க,
நீ மட்டும் தான்
கர்மத்தின் பலன்
பிறரின் கல்லா பெட்டிகளை
எப்படி நிரப்புகிறது
எனும் சூத்திரம் விளக்கினாய்.
உபதேசிகள் எல்லோரும்
தானாய் மாறும் எல்லாம்
என ஆறுதல் கூறித்
தேற்றிக் கொண்டிருக்க,
மாற்றம் ஒன்றே மாறாதது
எனும் மந்திரத்தை
நீ மட்டுமே
உச்சரித்தாய்.
மாற்றும் வழியையும்
உபதேசித்தாய்.
மதங்கள் எல்லாம்
மக்களை
மயக்கும் அபின் என
மதங்களின் குரல்வளையை
நெறிக்கும் வலிமை உன்
கரங்களுக்கு மட்டுமே
இருந்தது.
கனவுகளை மட்டுமே
உணவாய்க்
கொடுத்துக் கொண்டிருந்த
தட்டுகளில்,
நீ மட்டுமே அதை
நிஜங்களால் நிரப்பினாய்..
நீ மட்டும்தான்
பொய்யர்கள் சந்தையில்
நிஜத்தை விற்றாய்.
பொன்னுலகம் காண
அடிமைச் சங்கிலிகளை
உடைத்தெறியச் சொன்னாய்..
நீ மட்டும் தான்… ஆம்
நீ மட்டும் தான்…
- உஸ்மான் அலி