ஆயிரத்தைத் தாண்டிய படங்கள்…
பல்லாயிரக்கணக்கான பாடல்கள்…
மனிதர்களில் ஒருவரது முகம் போல் இன்னொருவர் முகம் இருக்காது. ராஜாவின் ராகத்திலும், ஒரு ராகம் போல் இன்னொரு ராகம் இருப்பதில்லை.
அதுதான் அவரது ‘ஸ்பெஷல்’.
1976-ம் ஆண்டு ஆரம்பித்தது, அவரது சினிமா இசை பயணம். ஆம். திரை உலகில் அவர் கால் பதித்து 50 ஆண்டுகள் ஆகிறது. இது, அவரது சினிமா இசைக்குப் பொன்விழா.
ஆனாலும் 76-க்கு முன்பாகவே ராசய்யா, மதுரை பகுதியிலும், கேரள எல்லைகளிலும், தனது உடன் பிறப்புகளுடன் இசைக்கச்சேரி நடத்தியவர்.
மூத்தவர் பாவலர் வரதராசன். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். கேரள முதலமைச்சராக இருந்த நம்பூதிரிபாடுவிடம், பரிசு பெற்றவர். அடுத்தவர் – பாஸ்கர். மூன்றாவது ராசய்யா. நான்காவது அமர் என்கிற கங்கை அமரன்.
அன்னக்கிளி படத்தில் பஞ்சு அருணாசலம், ராஜாவை அறிமுகம் செய்தார். அந்த சமயத்தில் இன்னொரு ராஜாவும் சினிமாவில், இசைத்துறையில் இருந்தார். ஏ.எம்.ராஜா. மூத்த ராஜா.
அதனால், தன்னால், அறிமுகம் செய்யப்பட்ட, ராசய்யாவுக்கு, ‘இளையராஜா’ என நாமகரணம் சூட்டினார், பஞ்சு அருணாசலம் .
பாரதிராஜா, பாலச்சந்தர், மகேந்திரன். பாக்யராஜ், பாலுமகேந்திரா, மணி ரத்னம், பார்த்திபன், மணிவண்ணன், சுந்தரராஜன் உள்ளிட்ட பல டஜன் இயக்குநர்களின் படங்களுக்கு வாசமும், சுவாசமும் கொடுத்தவர்.
பத்மபூஷண், பத்ம விபூஷண், விருதுகளைப் பெற்ற இளையராஜா, சிறந்த இசை அமைப்பாளருக்கு தேசிய விருதை நான்கு முறை வென்ற, இசை மேதை. இப்போது மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருக்கிறார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , இப்போதும் அழைக்கப்படும், ‘பாடும் நிலா’ பாடலை வழங்கியவர்.
தனது கனவு படைப்பான ‘சிம்பொனி’யை லண்டன் மாநகரில் கடந்த 8-ம் தேதி நள்ளிரவில் அரங்கேற்றினார். உலக சாதனை படைத்த ராஜா, 10-ம் தேதி சென்னை திரும்பினார். அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயணங்கள் முடிவதில்லை..
‘இத்துடன் எனது பயணங்கள் நிற்கப்போவதில்லை’ என சென்னை வந்திறங்கியதும் இளையராஜா நெகிழ்ச்சியுடன் கூறினார்.
’இது வெறும் ஆரம்பம் – இத்துடன் நிற்கப்போவதில்லை – எனக்கு 82 வயதாகிவிட்டது – இனிமேல் இவன் என்ன செய்யப்போகிறான்? என்று நினைக்காதீர்கள் – எந்த விஷயத்திலும் நீங்கள் அப்படி நினைக்கும் அளவுக்கு நான் இல்லை’ என்றார் ராகதேவன்.
‘பயணங்கள் முடிவதில்லை‘ படத்தின் தயாரிப்பாளர் கோவைத் தம்பி அளித்த நேர்காணலையும் இங்கே பகிர்ந்து கொள்வோம்.
‘நானும் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனும் இளையராஜாவை பார்க்கச் சென்றோம் – நான் படம் தயாரிக்க விரும்புவதாகச் சொன்னேன் – என்னை ஏற இறங்கப் பார்த்தார் – நான் படம் தயாரிப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை.
சில நாட்களுக்கு பின் சுந்தர்ராஜனுடன் இளையராஜாவை மீண்டும் சந்தித்தேன் – அப்போது ‘நான் கதை கேட்கிறேன் – கதை பிடித்தால் செய்வேன் – இசையமைக்க 3 மாதம் ஆகும்’ என்றார்.
அதன் பின் சுந்தர்ராஜனிடம் கதை கேட்டார் – இசைக் கோர்ப்பு எப்போது என்று சுந்தர்ராஜன் கேட்க, சொல்லி அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு. அடுத்த நாளே மெட்டமைக்கலாம் என்று அழைத்தார்.
அடுத்த நாள் நானும் சுந்தர்ராஜனும் அவரைப் பார்க்கச் சென்றோம் – ஒரே இரவில் பயணங்கள் முடிவதில்லை படத்துக்கான 7 பாடல்களையும் அவர் மெட்டமைத்துவிட்டார்.
அது மட்டுமல்ல, அவர் எங்களுக்குக் கொடுத்தது 16 மெட்டுகள் – உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுங்கள் என்று கூறிவிட்டார்.
நானும் சுந்தர்ராஜனும் கலந்து பேசி இந்த 7 மெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம்’ என பழைய நினைவுகளை மலர்ந்தார், கோவை தம்பி.
‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தை தயாரித்தபோது, கோவைத்தம்பி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், முதலமைச்சராக இருந்த சமயத்தில் கோவையில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.
‘சிம்பொனி’க்கு பாராட்டு விழா ..
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இல்லத்தில் அவரை நேற்று, இளையராஜா சந்தித்தார். இளையராஜாவுக்கு முதலமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சாதனை நாயகன் இளையராஜாவுக்கு, தமிழக அரசு விழா எடுக்க உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :
‘லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் – ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்’ என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்துடன் இளையராஜா, முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் வீடியோவையும் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
அதில், லண்டனில் நடைபெற்ற சிம்பொனி குறித்தும், அதற்கு வாசித்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு குறித்தும் நெகிழ்ச்சியுடன் இளையராஜா முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.