பிரித்தானிய அருங்காட்சியம் ஒரு பிரமாண்டம்!

இரண்டு நாட்கள் வசந்த காலத்தின் சூரியனை ரசித்தது போதும் என லண்டன் நினைத்து விட்டது போலும். நேற்று மீண்டும் குளிர் தொடங்கிவிட்டது. ஆனாலும் பரவாயில்லை. தாங்கக்கூடிய குளிர் தான்.

லண்டனுக்கு வரும் ஒவ்வொரு முறையும் சில பகுதிகள் மீண்டும் மீண்டும் வந்து தான் ஆக வேண்டும். அதில் முக்கியமான ஒன்று பிரத்தானிய அருங்காட்சியகம்.

இங்கிலாந்து எங்கெங்கு தனது காலனித்துவ ஆட்சியைப் பரவலாக்கம் செய்திருந்ததோ அங்கிருந்து எல்லாம் சேகரித்துக் கொண்டு வந்த பல அரும் பொருட்கள் பாதுகாக்கப்படும் ஒரு அருங்கலைக்கூடம் இது. இங்குள்ள பொருட்களைப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது.

பிரித்தானிய அருங்காட்சியத்தை வந்து பார்வையிட வேண்டும் என்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இணையத்தில் அதன் பக்கத்தில் உள்ளே செல்வதற்கான நேரத்தை புக்கிங் செய்திருந்தேன்.

காலை 10 மணிக்குத் தொடங்குகின்றது என்பதால் முதலிலேயே உள்ளே வருவது சிறப்பு என்று எண்ணத்தோடு முதல் ஸ்லாட் பதிவு செய்திருந்தேன்.

நாம் தான் முன்னே செல்லப் போகிறோம் என்று வந்து பார்த்தால் அங்கு ஒன்பதரை மணி வாக்கிலேயே வரிசை கட்டிக்கொண்டு கூட்டம் இருக்கிறது.

மற்றொரு பக்கம் குழுக்களாக வருகின்ற பள்ளி மாணவர்களும் சுற்றுப்பயணிகளும் செல்வதற்காக ஒரு பகுதி திறக்கப்பட்டிருக்கிறது.

வரிசையில் நின்று உள்ளே செல்லும்போது மிகப் பிரபலமான நகர மையத்திற்குள் செல்வது போல மக்கள் கூட்டம் திமுதிமு என்று உள்ளே நுழைவது ஒரு அருங்காட்சியத்திற்கு வருவதற்கு மக்கள் காட்டுகின்ற ஆர்வம் ஒவ்வொரு முறையும் இங்கு வருகின்றபோது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மீண்டும் மீண்டும் சொல்லலாம். பிரித்தானிய அருங்காட்சியம் ஒரு பிரமாண்டம்.

இந்த ஆண்டு சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி அறிக்கையை வெளியிட்ட நூற்றாண்டு என்பதால் அதற்குப் பெருமை சேர்க்கவும் மரியாதை செலுத்தவும் முதலில் சிந்துவெளி அகழாய்வுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என அரை எண் 33 க்குச் சென்றோம்.

இப்பகுதிக்கு ஏற்கனவே சில முறை வந்திருக்கிறேன் என்பதால் அவற்றை ஏற்கனவே பார்த்த நினைவு மனதில் நிழலாடியது. மீண்டும் பார்ப்பதில் அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி.

ஹரப்பா நாகரிகம் செழித்த பகுதியில் வாழ்ந்த மக்கள் மெசபோடீமியா பகுதி மக்களோடு நடத்திய வணிகம் தொடர்பான கூனிபார்ம் வகை எழுத்துப் பொறிப்பு கொண்ட களிமண் பலகை, பலவகை சீல்கள், ஒற்றைக் கொம்பு விலங்கு, எருது, கீறல்கள் கொண்ட எழுத்து வடிவங்கள் ஆகியவற்றையும் மண்பாண்ட ஓடுகளையும் அணிகலன்களின் உடைந்த பகுதிகளையும் மீண்டும் நேரில் பார்த்து மகிழ்ந்தோம்.

அதற்குப்பின் அங்கிருந்த சோழர்கால நந்தி, நடராஜர் சிலைகள், பிரமாண்டமான பெருமாள் சிலை, கால பைரவர் சிற்பம், மௌரியர் கால சிற்பங்கள் போன்றவற்றை பார்வையிட்டோம்.

திப்பு சுல்தானின் வாள், மோதிரம், வாசனை திரவிய பெட்டி ஆகியவற்றைப் பார்த்து காணொளிப் பதிவு செய்தோம்.

சார்நாத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை தொடங்கி, குப்தர் அசோகர் கால பௌத்தத்தின் விரிவாக்கம் தொடர்பாக இங்கே சேகரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பௌத்த சிற்பங்களைப் பார்வையிட்டோம்.

அமராவதி ட்ரம் வகை சிற்பத் தொகுதிகள் பிரம்மாண்டமான வகையில் இங்கு ஒரு தனி கேலரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மதுரா, காந்தாரா போன்று மிகுந்த தனித்துவம் கொண்ட கலை படைப்பு பாணியைக் கொண்டது அமராவதி கலைப்படைப்புகள்.

புத்தரின் இளம் வயது சித்தார்த்தனாக குதிரையில் புறப்படுதல் தொடங்கி பல ஜாதகக் கதைகளின் சிற்பப் படைப்புகள் அமராவதி கலை படைப்புகளின் தனித்துவத்தை நமக்கு பறைசாற்றுகின்றன. இதே போன்ற ஒரு தொகுதி சென்னை அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது சேகரிக்கப்பட்ட பொருட்களில் பாதி சென்னை அருங்காட்சியத்திலும் மேலும் பாதி இங்கு பிரித்தானிய அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் சேகரிக்கப்பட்ட அரும் பொருட்கள் பற்றி ஆய்வாளர் டி.என் ராமச்சந்திரன் அவர்கள் ஒரு நூல் ஒன்றை படைத்திருக்கின்றார்.

Nagapattinam Bronzes என்ற தலைப்பிலான அந்த நூல் பற்றியும் அது கூறும் செய்திகள் பற்றியும் அண்மையில் ஓர் இணைய வழி உரை வழங்கியிருந்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்தபடி இரண்டு வெண்கல புத்தர் சிலைகளை இங்கே காண முடிந்தது.

மேலும் இந்த அருங்காட்சியத்தில் உள்ள சீனக் கலைப் பொருட்கள் பகுதி, குறிப்பாக பௌத்த பரவலாக்கும் தொடர்பான சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவை, தமிழ்நாட்டில் இருந்து பரவிய போதிசத்துவர் தாராதேவியின் மற்றொரு வடிவமான குன்யி பெண் தெய்வ வழிபாடு ஆகியவை தொடர்பான அரும் பொருட்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

இங்குள்ள பண்டைய ஈரானிய, மெசபொட்டேமிய, எகிப்திய கலைக்கூடங்கள் உள்ள பகுதிகளுக்கும் சென்று பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டோம்.

சுமேரிய ஊர் அகழாய்வு பொருட்கள் பாதுகாக்கப்படும் பகுதி பிரம்மாண்டமானது.

உலகின் முதல் நூலகம் என அறியப்படுகின்ற களிமண் பலகைகளில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பு இங்கு தான் பாதுகாக்கப்படுகின்றது என்பது இந்த நூலகத்தின் பெருமை.

இதனை இம்முறை முழுமையாகப் பார்வையிட வாய்ப்பு கிடைத்தது நினைத்துப் பார்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்றைக்கு பிரித்தானிய நூலகமாக தனி கட்டிடத்தில் இருக்கின்ற நூலகப் பகுதி முன்னர் இந்த அருங்காட்சியத்தின் ஒரு பகுதியில் தான் இருந்தது.

அதனை நினைவூட்டும் வகையில் அருங்காட்சியத்தின் மையப் பகுதியில் குலோப் வடிவில் அமைக்கப்பட்டுள்ள நூலகப் பகுதி பிரமிக்க வைக்கின்றது.

டாக்டர் அம்பேத்கர், கால் மார்க்ஸ் போன்றோர் வந்து ஆய்வு செய்து படித்த நூலகம் இது என்ற எண்ணம் மனதில் எழுந்த போது மனதில் நெகிழ்ச்சி ஏற்பட்டது.

இந்த அருங்காட்சியகத்திலேயே உணவுக் கடைகளும் உள்ளன. மதிய உணவிற்கு வெளியே செல்ல வேண்டாம் என முடிவெடுத்து உள்ளே உள்ள பிட்சாரியாவில் பீசா ஆர்டர் செய்து அங்கே மதிய உணவை முடித்துக் கொண்டோம். ஆறு நிமிடங்களில் பீட்சா தயாராகிவிடும் என்று அறிவிப்பு செய்திருக்கின்றார்கள்.

அதுபோலவே ஆறு நிமிடத்தில் பீசா வந்துவிட்டது. விரைந்து உணவை முடித்துக் கொண்டு மீண்டும் வளாகத்தில் உள்ள ரோசெட்டா கல் உள்ள பகுதி, அரேபிய மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் சேகரிப்புகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

அருங்காட்சியத்தில் இருந்து சற்று தூரம் நடந்து வந்து பேருந்து எடுத்து அங்கிருந்து பிரித்தானிய நூலகம் வந்தடைந்தோம்.

நாங்கள் வந்தபோதே ஏறக்குறைய மணி மாலை 4 ஆகி இருந்தது. வந்தவுடன் reader pass எடுக்க வேண்டி இருந்தது. முன்னரே ஒரு ரீடர் பாஸ் வைத்திருந்தாலும் 2023 இறுதியில் இங்கு ஏற்பட்ட சைபர் அட்டாக் காரணத்தினால் உறுப்பினர்களின் தகவல்கள் தொலைந்து போயின என்று அங்கிருந்து அதிகாரி விபரம் வழங்கினார்.

ரீடர் பாஸ் செய்து கொண்டு சமூகவியல், வரலாறு நூல்கள் உள்ள பகுதிக்குச் சென்று அமர்ந்தோம். அங்கு எங்களை அறிந்த இளம் மாணவர்கள் சிலர் அடையாளம் கண்டு கொண்டு வந்து கைகுலுக்கி பேசினார்கள்.

இரவு 9:30 வரை நூலகம் திறந்து இருப்பதால் நீண்ட நேரம் வந்து நூல்களை எடுத்து வாசித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு செல்ல வாய்ப்பாக அமைகிறது.

பிரித்தானிய நூலகம் கொண்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கை மிகப்பெரியது. மணிக்கணக்கில் நாள் கணக்கில் வாரக்கணக்கில் அமர்ந்து ஆய்வு செய்யக் கடிய வகையில் இங்கு உள்ள நூல்களின் தரமும் தன்மையும் அமைந்துள்ளன.

எனது கடந்த பயணத்தில் மலேசியாவில் 18, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த சஞ்சிகைகள் பற்றிய ஆய்வுக்காக வந்திருந்த போது சில பதிவுகளை ஆய்வு செய்து எழுதி வந்தேன்.

இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு, கிழக்கு ஆசிய நாடுகளின் ஆவணங்கள் ஆகியவை இங்கு ஆய்வு மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கக்கூடிய வகையில் கிடைக்கின்றன.

பிரித்தானிய அருங்காட்சியகமும் பிரித்தானிய நூலகமும் இங்கு வாழ்கின்ற மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரம் என்று சொன்னால் அது மிகை இல்லை.

ஆனால் இங்கு வாழ்கின்ற எத்தனை தமிழர்கள் இங்கு அடிக்கடி செல்கின்றார்கள், இங்கு உள்ள ஆவணங்களையும் தகவல்களையும் அறிந்து கொள்கின்றார்கள், பயன்படுத்துகின்றார்கள் என்பது ஒரு பெரும் கேள்வி!

  • க.சுபாஷினி, தமிழ் மரபு அறக்கட்டளை.

11.03.2025
லண்டன், இங்கிலாந்து

Comments (0)
Add Comment