புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 1972-ம் ஆண்டு அதிமுக எனும் மக்கள் பேரியக்கத்தைத் தொடங்கினார். சில மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வாகை சூடினார்.
‘இரட்டை இலை’ சின்னத்துக்கு கிடைத்த முதல் வெற்றி அது. இதன் நீட்சியாக 1977-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது, அதிமுக அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆர் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க ஆளுநர் பட்வாரி, எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தார். பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1977-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது.
14 அமைச்சர்களுடன் எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்றார். காலை 9.15 மணிக்கு இந்த வைபவம் நிகழ்ந்தேறியது.
பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள்.
ராஜாஜி மண்டபத்திலிருந்து நேராக திறந்த வேனில் அண்ணாசாலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் பரவசம். இந்த வரலாற்று நிகழ்வை காணத்தானே 5 ஆண்டுகள் காத்திருந்தார்கள். அண்ணா சிலையின் கீழே, மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடை மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார்.
அப்போது, கூடியிருந்தவர்கள் “புரட்சித் தலைவர் வாழ்க” என்று குரல் எழுப்பினர். மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார். முதலமைச்சர் ஆனதும் அவர் ஆற்றிய முதல் உரை இது.
அவர் கூறியதாவது:
“அன்புக்குரிய தாய்மார்களே! என் ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே!” என உணர்ச்சி பெருக்குடன் உரையை ஆரம்பித்த எம்.ஜி.ஆர்., சில விநாடிகள் இடைவெளிவிட்டு பேச்சை தொடர்ந்தார்.
”நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டு இங்கே உறுதிமொழி எடுக்க விரும்புகிறேன் – அங்கே, ராஜாஜி மண்டபத்தில் நடந்தது அரசாங்க சடங்கு – அது தவிர்க்க முடியாதது – ஆனால் இங்கு நடப்பது, உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் சடங்கு.
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு‘ என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம் – அண்ணாவின் தத்துவப்படி, மக்கள் பிரதிநிதிகள் என்ற எண்ணம் தவறாமல், இந்த அரசாங்கத்தை நடத்துவோம்.
எங்கள் அமைச்சரவையின் சார்பில், தமிழகத்தில் உள்ள மக்களுக்கும், இந்திய துணைக் கண்டத்தின் பிற மாநிலங்களில் வாழ்கிற தமிழ் மக்களுக்கும் நாங்கள் உழைப்போம்.
மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சட்டமன்றத்துக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார்.
அதனை உள்ளத்திலே இருத்தி, லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதித்துறையில், நிர்வாக தலையீடு இல்லாத, அரசை நடத்துகிற மாபெரும் பணியை செவ்வனே செய்ய, உயிரை கொடுத்தாகிலும் பாடுபடுவோம்.
எங்களின் வாழ்வு வசதிகள் அத்தனையையும் இழக்க வேண்டிய நிலை வந்தாலும், அதற்காக எதிர்ப்படுகிற அத்தனை தடைகளையும் எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்” என சபதம் செய்த புரட்சித் தலைவர், “இப்போது உங்கள் ஆசி பெற்று, எங்களது பணி தொடர செல்கிறோம் – உங்கள் நல்லாசியை வழங்குங்கள் – அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என உரையை நிறைவு செய்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.