‘ஜென்டில்வுமன்’ – மகளிர் தினத்தை முன்னிட்டு..!

தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று பண்டிகைக் காலத்தையொட்டி வெளியாகும் திரைப்படங்கள் போன்றே, சமீபகாலமாகக் காதலர் தினம், மகளிர் தினம் போன்றவற்றையொட்டியும் படங்கள் வெளியிடப்படுகின்றன.

அந்த வரிசையில், கடந்த மார்ச் 7-ம் தேதியன்று (மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம்) வெளியான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது ‘ஜென்டில்வுமன்’.

டைட்டிலுக்கு ஏற்றாற் போல, இதில் இரண்டு பெண் பாத்திரங்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. 

ஜோஷ்வா சேதுரான் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் வெளியாகியுள்ள இப்படத்தில் லிஜிமோள் ஜோஸ், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன், கீதா கைலாசம் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர்.

ஒரு ஆண் இரண்டு பெண்களைக் காதல், அன்பு என்ற பெயரில் ஏமாற்றுவதாகக் காட்டியது ‘ஜென்டில்வுமன்’ ட்ரெய்லர். இப்படம் தரும் திரையனுபவம் எத்தகையது? 

‘ஜென்டில்வுமன்’ கதை!

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பூரணி (லிஜிமோள் ஜோஸ்). சென்னையைச் சேர்ந்த அரவிந்த் (ஹரிகிருஷ்ணன்) உடன் அவருக்குத் திருமணம் ஆகிறது.

அது இரு வீட்டு உறவினர்கள் பேசி முடிவு செய்த நிச்சயிக்கப்பட்ட திருமணம். 

கணவருக்குப் பிடித்தவற்றைச் சமைப்பது, அவரது உடைகளைத் துவைப்பது, வீட்டைப் பராமரிப்பது என்று முழுக்க ஒரு ‘ஹவுஸ் வொய்ப்’ ஆக மட்டுமே இருக்கிறார் பூரணி.

அதேநேரத்தில், அரவிந்த் மீது எதிர்வீட்டுப் பெண் பாராட்டுகிற உறவு, சொல்லாமல் கொள்ளாமல் வெளியே செல்வது என்றிருப்பது போன்றவற்றைக் காண்கிறார். ஆனால், அதனை ஒரு குறையாக அவர் உணர்வதில்லை. 

இந்நிலையில், பூரணியின் உறவுக்காரப் பெண் ஒரு நேர்காணலுக்காகச் சென்னைக்கு வருகிறார். அப்பெண் வந்தவுடனேயே அரவிந்தின் செயல்பாடுகளில் மாற்றம் தென்படுகிறது. 

அலுவலகம் செல்லும்போது பூரணியைக் கோயிலில் ‘ட்ராப்’ செய்வதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார் அரவிந்த். ஆனால், அபார்ட்மெண்ட் வாசல் வரை சென்றபிறகு மொபைலை வீட்டில் வைத்துவிட்டதாகச் சொல்கிறார். 

உடனே, ‘நான் கோயிலுக்குப்போறேன் நீங்க லேட்டா ஆபீஸ் போங்க’ என்று சொல்லிவிட்டு பூரணி சென்று விடுகிறார். அடுத்தநொடியே, வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் பேசத் தொடங்குகிறார்.

அவர் சமையலறையில் இருக்கப் பின்னாலேயே செல்கிறார். அவர் ஸ்பரிசம் நுகரும் நெருக்கத்தில் இருக்க, அந்தப் பெண் திரும்பிப் பார்த்து பயந்து போகிறார். 

அதனை எதிர்பார்க்காத அரவிந்த் பின்னால் நகர்ந்து நிலை தடுமாறிக் கீழே விழுகிறார். அடுத்த நொடியே பேச்சு மூச்சின்றிக் கிடக்கிறார். 

சில நிமிடங்கள் கழித்து வீடு திரும்பும் பூரணி, கணவர் கீழே சரிந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதைவிட, அந்தப் பெண் சொன்ன தகவலைக் கேட்டதும் விக்கித்துப் போகிறார். அப்போது, அரவிந்தின் மொபைலுக்கு அன்னா என்ற பெயரில் ஒரு அழைப்பு வருகிறது. 

எதிர்முனையில் பேசும் பெண், ‘என்னை ஊருக்கு அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லிட்டு நீ என்ன பண்ற’ என்கிறார்.

பூரணி முகத்தில் மெல்லக் கோபம் பரவுகிறது. திடீரென்று அரவிந்த் திடுக்கிட்டு எழுகிறார். அந்தக் கணத்தில் பூரணியின் கை அருகே ஒரு அரிவாள் கிடக்கிறது. 

அதன்பிறகு என்னவானது? அன்னா என்ற பெண்ணுக்கும் அரவிந்துக்குமான தொடர்பு எத்தகையது? உண்மையில் அரவிந்த் எப்படிப்பட்ட மனிதர்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘ஜென்டில்வுமன்’ படத்தின் மீதி. 

திருப்தி தரும் காட்சியாக்கம்!

பூரணி, அரவிந்த், அன்னா என மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே மையப்படுத்திய கதை. அவர்களுக்கான உறவைக் காட்டுகிறேன் பேர்வழி என்று ‘ட்ராமா’ ஆக்காமல், ‘த்ரில்லர்’ வகைமையில் திரைக்கதையை அமைத்து, கிளைமேக்ஸ் காட்சி வரை இமைக்காமல் காணச் செய்திருக்கிறார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். 

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் லிஜிமோள் ஜோஸ் வருகிறார். ’கணவரின் அன்புக்குப் பாத்திரமானால் போதும்’ என்றிருக்கிற பெண்ணாகத் தோற்றம் தருவது முதல் அதுவரை அடக்கி வைத்திருந்த ஆசைகளைக் காட்டாற்று வெள்ளம் போல அவிழ்த்தெறிகிற மனதை வெளிப்படுத்துவது வரை பல காட்சிகளில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். 

எதிரே இருப்பவர் எப்படித் தன்னை நோக்க விரும்புகின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்பச் செயல்படுவதாகப் பூரணி பாத்திரம் இருக்கிறது.

அதனை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். ஆனால், நாகர்கோவில் தமிழை மெதுவாகப் பேசும்போதும், சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் குரலை வெளிப்படுத்தும்போதும் டப்பிங் சில இடங்களில் பிசிறு தட்டுகிறது. 

லாஸ்லியா இதில் அன்னா ஆக வருகிறார். காதலுடன் திரிகிற ஒரு பெண். அதேநேரத்தில், சமகாலப் பெண்களுக்கு உண்டான வெளியுலகப் புரிதலோடு பெண்ணியத்தைத் தன் வாழ்வில் ஏந்துகிற ஒருவராகக் காட்சியளித்திருக்கிறார். இரண்டுக்குமான குழப்பத்தை வெளிப்படுத்தும்போதும் ஈர்க்கிறார். 

ஹரிகிருஷ்ணன் இதில் நாயகன் ஆக நடித்திருக்கிறார். கண்ணில் கயமைத்தனத்தைச் சுமந்துகொண்டு காதலோடும் கனிவோடும் அன்போடும் காமத்தோடும் திரிகிற பாத்திர வார்ப்பைக் கவனமாகச் சுமந்திருக்கிறார். 

இவர்கள் தவிர்த்து இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், உதவி ஆணையர் பாத்திரங்களில் வருபவர்கள், கீதா கைலாசம் உள்ளிட்ட சிலர் இதில் வந்து போயிருக்கின்றனர். 

ஒளிப்பதிவாளர் காத்தவராயன் இப்படத்தில் காட்சியாக்கத்திற்காக மெனக்கெட்டிருக்கும் விதமே, இப்படத்தைத் தொடக்கம் முதல் இறுதிவரை தொய்வின்றிக் காணச் செய்திருக்கிறது. 

இப்படத்தில் பல காட்சிகள் ‘ஹாஃப்வே’ உத்தியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதனைச் சரியாகக் கையாண்டிருப்பதோடு கதை சீராகத் திரையில் விரியவும் உதவியிருக்கிறது இளையராஜா சேகரின் படத்தொகுப்பு. 

தயாரிப்பு வடிவமைப்பைக் கையாண்டிருக்கும் அமரன், ப்ரேமின் வடிவமைப்புக்கு ஏற்ப தனது உழைப்பைத் தந்திருக்கிறார். 

இப்படத்தின்  காட்சியாக்கம் சிறப்பாகத் தெரிவதில் ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பின் பங்கு அதிகம். 

போலவே யுகபாரதியின் வசனங்கள் காட்சிகளில் நிறைந்திருக்கும் இறுக்கத்தைத் தளர்த்தி, பார்வையாளர்கள் எளிதாக அடுத்த  காட்சிக்கு நகர உதவியிருக்கிறது. 

இது போகா ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, டிஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இதில் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன. 

இயக்குனர் ஜோஷ்வா சேதுராமன் இந்தப் படத்தின் கதையை ஒட்டி, அதற்கேற்றாற் போல திரைக்கதை அமைத்து, அதன் தாக்கத்தை பார்வையாளர்கள் முழுமையாக உணரும்விதமாகப் பாத்திரங்களை வார்த்திருக்கிறார். 

அவர் தனது கதை சொல்லலில் கொண்டிருந்த நம்பிக்கை, 19 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்ததில் தெரிகிறது. 

சில  பாத்திரங்கள் வசனங்களை உதிர்க்கும் விதம் செயற்கையாக இருப்பது, சில இடங்களில் தென்படும் பெண்ணியப் பிரச்சார நெடி வசனங்கள், எளிதாகப் புரியாத வகையில் சில காட்சிகள் அமைந்திருப்பது போன்றவை இப்படத்தின் பலவீனங்களாக உள்ளன. 

அரவிந்த் பாத்திரம் காணாமல் போனதாகச் சொல்லி போலீசார் விசாரணை நடப்பதாக, இதில் ஒரு காட்சி உண்டு.

அபார்ட்மெண்டில் சிசிடிவி இல்லை’ எனச் சொல்லி, அது தொடர்பான விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. 

இதிலுள்ள மிகச்சில குறைகளைப் புறந்தள்ளிவிட்டால், ஒரு ‘ஜெண்டிலான’ படம் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது இப்படம்.

பெண்ணியப் பார்வை கொண்டவர்களை விடச் சமூகத்தில் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பெண்களின் மனப்பாங்கை வெளிப்படுத்துகிற படமாக இது நோக்கப்படும், கொண்டாடப்படும்.

‘பெண்கள் மனதில் எத்தனையோ ரகசியங்கள் வெளிப்படாமல் இருக்கின்றன’ என்ற வசனத்தோடு இப்படம் முடியும் இடம் அக்கொண்டாட்டத்திற்கான தருணத்தை அடையாளம் காட்டுகிறது. 

-உதய் பாடகலிங்கம்.

Comments (0)
Add Comment